தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானவர்கள் தேசத்துரோகிகளாக மாறும் நிலை: ராவய

எனக்கு ஏற்படும் அநீதிகளை ஜனாதிபதி பொருட்படுத்துவதில்லை!– கண்ணீர் விடும் காணி அமைச்சர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 10:04.57 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரிடம் தனக்கு ஏற்பட்ட அநீதிகள் குறித்து தெரியப்படுத்திய போதிலும் எவரும் தான் கூறியதை பொருட்படுத்தவில்லை என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கலேவலை ரி.பி. தென்னக்கோன் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் பேசும் போது கண்ணீர் மல்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எத்தனோல் மற்றும் ஹெரோயின் வியாபாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது.
நான் சுத்தமான சுதந்திரக் கட்சிக்காரன். எனக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகள் பற்றி ஜனாதிபதியிடம் கூறினேன். தம்புள்ளையில் வைத்து நாமலிடம் கூறினேன். எனது பேச்சை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.
நாங்கள் வளர்த்த கட்சிக்கு ஏற்பட்டு வரும் அனர்த்தம் பற்றி நான் கூறுவதை அவர்கள் நம்பவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எவருக்கும் அடிபணிந்த கட்சியாக மாற்ற நான் விரும்பவில்லை.
கட்சியில் உள்ள தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த தேர்தலுக்கு செல்ல வேண்டும். நான் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன் என ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZls0.html

ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரானவர்கள் தேசத்துரோகிகளாக மாறும் நிலை: ராவய
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 09:58.30 AM GMT ]
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன தற்போது சதிகாரராக மாறியுள்ளார்.
2009ம் ஆண்டு தேசிய வீரர் என புகழப்பட்ட சரத் பொன்சேகா, 2010ம் ஆண்டில் தேசத்துரோகியாக்கப்பட்டார்.
தேசிய வீரர் என்ற நிலையில் இருந்து சரத் பொன்சேகா எப்படி தேசத்துரோகியாக்கப்பட்டாரோ அதேபோல் மைத்திரிபால சிறிசேன தேசப்பற்றாளர் என்ற நிலையில் இருந்து புலம்பெயர் தமிழர்களின் சதிதிட்டக்காரராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு முத்திரை குத்தல்களுக்கும் இருக்கும் ஒரே காரணம் ராஜபக்ச எதிர்ப்பு என்பதாகும்.
இலங்கையின் தேசத்துரோகி மற்றும் தேசப்பற்றாளர் என்பதை தீர்மானிப்பது அவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகின்றனரா என்ற அடிப்படையில் அல்ல என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக செயற்படுகின்றனரா இல்லையா என்ற அடிப்படையிலேயே இந்த முத்திரை குத்தல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு அமைய மைத்திரிபால சிறிசேன தற்போது தேசத்துரோகி, நாட்டை காட்டிக் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் சதிகாரர், அல்லது புலம்பெயர் தமிழர்களின் சதித்திட்டத்தில் சிக்கிய முட்டாள்.
மாபெரும் சதித்திட்டம் என்றால் என்ன?. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பது!.
அவர்களின் கூற்றுப்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் முனைப்புகளை மேற்கொள்ளும் நபர்கள் ஏகாதிபத்திய மற்றும் புலம்பெயர் தமிழர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் நபர்கள்.
இலங்கையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுப்போர், ஏகாதிபத்திய மற்றும் புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவைகள்.
அவர்கள் கூறுவது உண்மை என்றால், தனது அழிவுக்கு வழியை திறந்து கொண்டது மகிந்த ராஜபக்ச அல்லவா?.
இதற்கு உந்து சக்திகளை கொடுத்தது அவரது சோதிடர்கள் அல்லவா?. இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவசரமாக தேர்தலை நடத்துவதே இதற்கான காரணம்.
ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி 8ம் திகதி நடத்த தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இந்த சுப தினத்தில் நடத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு அவரது சோதிடர்களே ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி அவசரமாக இந்த தேர்தலை அவசியமற்ற நேரத்தில் நடத்தாமல் இருந்திருந்தால், இவர்கள் கூறும் ஏகாதிபத்தியவாதிகளோ, புலம்பெயர் தமிழர்களோ அவரை தோற்கடிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.
இதனால், தன்னை அழிக்க நினைப்பவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதியே தேர்தலை அறிவித்துள்ளார்.
எனினும் உண்மை அதுவல்ல. ஏகாதிபத்தியவாதிகள், புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சி என்பவற்றின் ஸ்தாபகர்கள் வேறு யாரும் அல்ல, மேலும் ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் தேவையே அது.
மேலும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருந்து விட்டு, பதவிக்காலம் முடிந்த பின் தேர்தலை நடத்தினால் தோற்றுப் போய் விடுவார் என்பதை ஜனாதிபதி நன்கு அறிந்துள்ளார்.
இதனால், வெற்றி பெற வாய்ப்பு இருக்கின்றது என்று அவர் எண்ணியமை மற்றும் அவரது சோதிடர் சுபதினம் எனக் கூறிய நாளில் அவர் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார்.
தேர்தல் ஆணையாளரும் ஜனாதிபதிக்கு சுபதினமான அதே தினத்தை தெரிவு செய்தார்.
ஜனாதிபதியின் அதிகாரப் பேராசை சிறிய விடயமாக கருதக் கூடியதல்ல. 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இதேவிதமாகவே அவர் சிந்தித்தார்.
போர் வெற்றியில் ஏற்படும் எழுச்சியையும் அதன் அனுமதியை பயன்படுத்தி தனது பதவிக்காலத்தை நீடிக்க வேண்டும் என்பதை அவர் நன்கு புரிந்து கொண்டார்.
இதற்காக மகிந்த ராஜபக்ச, 2010ம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார். பெருவாரியாக வெற்றியும் பெற்றார்.
இதன் பின்னர் 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்த தடையும் இல்லாமல் பதவியில் இருக்க முடியும்.
எனினும் அதிகார மோகத்தால் இயக்கப்படும் ஜனாதிபதி என்ன செய்தார்?. புது வருடம் ஆரம்பிக்கும் வரை கூட காத்திருக்காமல் அதற்கு அப்பாலும் பதவியில் இருக்கும் வகையில், திட்டங்களை வகுத்தார்.
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜனநாயக விரோதமான 18வது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்புக்குள் புகுத்தினார்.
ஒரு நபரின் அதிகார மோகத்தை விபரிக்க இதனை விட உதாரணம் இருக்க முடியுமா?. அரசாங்கத்தில் இருக்கும் கீழ் மட்ட மற்றும் உயர் மட்டத்தில் உள்ள அனைவருக்கும் இந்த கசப்பான உண்மை தெரியும்.
எனினும் தமக்கு கிடைக்கும் சலுகைகள், பதவிகள் என்பன ஆபத்துக்கு உள்ளாகும் என்பதால், அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில்லை.
இந்த இடத்திலேயே ராஜபக்ச நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானவர்கள் தொடர்பான சதித்திட்ட நிகழ்ச்சி நிரல் பிறப்பெடுக்கின்றது.
இதனால், ஜனாதிபதி தனது சகாவை தேசத்துரோகி என்று அடையாளப்படுத்தினால், உண்மையில் அந்த நபர் தேசப்பற்றாளராகவே இருப்பார் என்பதே உண்மையானது.
நாட்டின் எதிர்கால பயணத்திற்கு தடையாக இருக்கும் இந்த தன்னிச்சையான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் என ராவய பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அரசியல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlsz.html

Geen opmerkingen:

Een reactie posten