தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது போட்டியாளரை தன்னுடனேயே வைத்திருந்துள்ளார் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தின் மொத்த பற்களையும் ஒன்றொன்றாக கழற்றி எடுப்போம். மஹிந்தவின் தூக்கத்தை கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
பொது எதிரணியினர் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண மாவட்ட உறுப்பினர்களை சந்தித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாங்கள் அரசில் இருந்து வெளியேறுவோம் என குறிப்பிட்டோம் இன்று அதை செய்து காட்டிவிட்டோம். ஜனநாயகத்தை வென்றெடுக்கும் புதிய கூட்டணியினையும் உருவாக்கி விட்டோம்.
இந்த கூட்டணி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உரிமைக்கான கூட்டணி. இதில் சகல மக்களின் உரிமைகளும் சுதந்திரமும் தங்கியுள்ளன. ஆகவே, அனைவரும் கைகோர்த்து எமது பயணத்தினை வெற்றிப் பயணமாக மாற்றியமைக்க வேண்டும்.
ஜனாதிபதி யுத்தத்தினை வென்றெடுத்ததும் தனக்கெதிரான சக்திகளை இனங்கண்டதும் தனது புலனாய்வு பிரிவினரை வைத்தே. இதை தான் பெரிதாக மார்தட்டிக் கொள்வார். ஆனால், ஜனாதிபதியின் புலனாய்வு பிரிவினரை வைத்து தனக்கு எதிரான வேட்பாளர் யார் என்பதை இனம்காண முடியாது போய்விட்டது. தனது எதிரணி வேட்பாளரை தன்னுடனேயே வைத்துக் கொண்டு வெளியில் தேடியுள்ளார்.
இன்று நாங்கள் வெளியேறியது அவருடனான தனிப்பட்ட விவகாரத்தில் அல்ல, நாட்டில் அவரை சர்வாதிகாரியாக உருவெடுக்க விடக்கூடாது என்பதற்காகவேயாகும்.
எமக்கு கட்சியினை விடவும் நாடும் மக்களுமே முக்கியம். நாங்கள் சாவுக்கு அஞ்சவில்லை. துணிந்து களத்தில் இறங்கியுள்ளோம். எனவே, இதில் வெற்றிபெற வேண்டும்.
அதேபோல் இன்று அரசில் இருந்து நாளுக்கு நாள் உறுப்பினர்கள் வெளியேறுகின்றனர். நாம் வெளியேறியவுடன் வேறு எவரும் வெளியேவர மாட்டார்கள் என அரசாங்கத்தில் தெரிவித்தனர். ஆனால் நேற்று ஒருவர் இன்று ஒருவர் என வெளிவர ஆரம்பித்து விட்டனர்.
நாங்கள் அரசின் முழுப் பற்களையும் ஒன்றாக பிடுங்கிவிட நினைக்கவில்லை. தனித்தனியாகவே பிடுங்குவோம். இன்னும் சில நாட்களில் அரசின் முக்கியப் பற்களை கழற்றி எடுப்போம். நாம் சொல்வதை செய்து காட்டுவோம்.
ஜனாதிபதி தனது தூக்கத்தை தொலைத்து விட்டார். இனி அவரால் தூங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq2.html
Geen opmerkingen:
Een reactie posten