இலங்கையின் பல்கலைக்கழகங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டம் என சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்த விடயத்தில் நிதானமாக சிந்தித்து முடிவெடுப்போம் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மேற்படி விடயம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 01-12-2014 ல் கொழும்பில் நடத்தப்படவிருக்கும் பல்கலைக் கழகங்களின் முன்னேற்ற மீளாய்வு சம்மந்தமான கூட்டமொன்றிற்கு கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரையும் அழைத்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்சவும் கலந்துகொள்ளவிருக்கிறார். இவ்வழைப்பின் நோக்கம் பற்றியும் அது வந்துள்ள காலம் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இதுபோன்றதொரு அழைப்பு 2010 இலும் கல்வி சார் ஊழியர்களுக்கு வந்தது. அதன்போது பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. தேர்தலின் பின் ஏமாற்றப்பட்டோம்.
இன்றும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கபட்டுள்ள நிலையில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
இக்கூட்டத்தில் என்ன விடயங்கள் ஆராயப்படவுள்ளன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இவ்வாறு இருக்கையில் பல துணைவேந்தர்களும் அவர்கள் எள் என்றால் எண்ணையாய் நிற்கும் சில துறைத்தலைவர்களும் கல்விசார் ஊழியர்களுக்கு கரட்டையும் தடியையும் காட்டி கூட்டத்திற்கு வருமாறு வற்புறுத்துகிறார்களாம்.
கல்வி சார் ஊழியர்களே இவ்வரசால் எமக்களிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
எம்மையும் சாதாரண அப்பாவி மக்களை இலகுவாக ஏமாற்றுவது போல ஏமாற்றப் பார்க்கிறார்களா? இக்கூட்டத்தையும் தமது அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தப் போகிறார்களா? நாமும் இதற்குத் துணை போவதா?
அராஜகங்கள் மற்றும் சர்வாதிகாரம் அற்ற ஒரு நாட்டில் அனைத்து இன மக்களும் சம உரிமையுடன் ஐக்கிய இலங்கைக்குள் மகிழிச்சியாக வாழ வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படும் இவ்வேளையில் நாம் அனைவரும் நிதானமாகச் சிந்திப்போம்.
நாம் கல்வியியலாளர்கள். நாம் சரியாகவே சிந்திப்போம் என்பதை அனைவரிற்கும் எடுத்துக்காட்டுவோம்.
விசேடமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அங்கத்தவர்களே சிந்தித்து முடிவெடுப்போம். வரலாற்றுத் தவறுகளை இழைக்காதிருப்போம்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களது ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமும் (FUTA) எச்சரிக்கை மணியடித்து அறிக்கை வெளியிட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlt5.html
Geen opmerkingen:
Een reactie posten