தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

தர்கா நகரில் மீண்டும் பதற்றம்! பெண்ணொருவரின் மண்டை பிளந்தது! - பாணந்துறையில் கடைத்தொகுதி தீக்கிரை!

அளுத்கம, தர்கா நகரில் நேற்று மாலை சிங்கள- முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தர்கா நகர் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அயலிலுள்ள பதிராஜகொட ஊரில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியொன்றில் கலந்து கொண்டு வெற்றியீட்டி உள்ளனர். அவர்கள் திரும்பி வரும் வழியில் சிங்கள நபரொருவர் பதிராஜகொட விகாரை அருகில் பாதையை மறித்து தனது சைக்கிளை நிறுத்தி வம்புக்கு இழுத்துள்ளார். கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இந்தச் சம்பவம் சிங்கள- முஸ்லிம் இளைஞர்களின் மோதலாக உருவெடுத்துள்ளது.
இதன்போது அவ்வழியால் சென்ற, இந்த மோதலுடன் சம்பந்தமே இல்லாத திருமதி தௌபீக் என்ற பெண்மணி கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மண்டை பிளந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது விகாரையின் மணி தொடர்ச்சியாக ஒலிக்கப்பட்டு சிங்களவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் தமது வாகனங்களில் ஏறி, காயங்களுடன் தப்பியோடியுள்ளனர். எனினும் ஒரு பல்சர் ரக இருசக்கர வண்டி மட்டும் சிங்களவர்களின் கையில் சிக்கியுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னர் தர்காநகருக்குள் சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் காயமடைந்த பெண்ணின் இரண்டு மகன்களான இம்ரான், இன்சாப் ஆகிய இரண்டு பேர் மற்றும் அங்கிருந்த மற்றுமொரு நபர், அயல் வீட்டிலிருந்து மூன்று பேர் என கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் இவர்களுக்கு சம்பவத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லையென்று தெரிய வருகின்றது.
மேலும் கலவரம் நடந்த இடத்தில் பல்சர் வண்டியை விட்டுவந்த இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமதி தௌபீக்கை அவரது குடும்பத்தவர் பார்வையிடவும் பொலிசார் அனுமதி மறுத்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக தர்கா நகரில் மீண்டும் கடும் பதற்ற சூழல் தோன்றியுள்ளது. ஆங்காங்கே பொலிசார் குவிக்கப்பட்டு அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாணந்துறையில் கடைத்தொகுதி தீக்கிரை! சதிநாச வேலை காரணம்?
பாணந்துறையில் கடைத்தொகுதியொன்று தீப்பற்றி எரிந்ததில் முற்றாக நாசமடைந்துள்ளது.
நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாணந்துறையின் தெற்கு பிரதேசத்தில் 7ம் வீதியில் உள்ள கடையொன்றில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தத் தொகுதியில் இருந்த ஏழு கடைகளுக்குத் தீ பரவி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்து நாச வேலை என்று பிரதேச வாசிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXjx1.html

Geen opmerkingen:

Een reactie posten