தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

ஆங்கிலேயரும் இந்தியாவும் எம்மை மறந்து விட்டது (படங்கள் இணைப்பு)!


'ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள இந்நிலையில் சிறுபான்மை கட்சிகள் யாருக்கு தமது ஆதரவை வழங்குவது என்ற பல்வேறு கேள்விகளுடன் இருக்கின்றார்கள். எமது மலையக பெருந்தோட்ட மக்களுக்காக இந்த அரசாங்கம் அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்ய வேண்டிய தேவை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு' என தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுதுபோக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து மலையக மக்கள் முன்னணி எற்பாடு செய்திருந்த கூட்டம் பதுளை, ஊவா மாகாண சபை கேட்போர் கூட மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்நாட்டை பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்திருந்தாலும் மலையக மக்களின் தேவைகளை அதிகமாக பூர்த்தி செய்துள்ளது என்றால் அது இந்த அரசாங்கம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு இந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டிருக்கின்றது என்றால் மறைந்த தலைவர் அமரர் சந்திரசேகரனே அதற்கு காரணம். எமது தலைவர் அன்று தனது ஒரு வாக்கினால் ஏற்படுத்திய அரசு இன்று தொடர்ந்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பின்பு இன்னும் அதிகமான அபிவிருத்திகள் மலையகத்துக்கு வந்து சேரவுள்ளன. அதனை பெற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். எங்களை அழைத்து வந்த ஆங்கிலேயர்களும் எம்மை மறந்து விட்டனர். நாம் இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும் இந்தியாவும் எங்களை மறந்து விட்டது. இதன் காரணமாக நாம் ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும்.

இன்று அனர்த்தங்கள் ஏற்பட்டு எமது மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதற்கு தோட்ட நிர்வாகமும் அங்குள்ள தோட்ட தலைவர்களுமே காரணம். தோட்ட நிர்வாகம் இந்த மக்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நாம் ஜனாதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். குறிப்பாக சுகாதார, வேலைவாய்ப்பு, தனி வீடமைப்பு, யுத்த காலத்தின்போது கைதுசெய்யப்பட்ட எமது மலையக இளைஞர், யுவதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் போன்ற கோரிக்iகைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை அவர் ஏற்றுகொண்டுள்ளார்' நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சிறுபான்மை கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கும் அபிவிருத்திக்கும் வழிவகுக்கு முயற்சிசெய்ய வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

16 Nov 2014

Geen opmerkingen:

Een reactie posten