தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

வட கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களாகவே இன்றும் உள்ளனர்: கலையரசன்!



மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடல்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 12:16.40 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து இன்று  கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட்டனர்.
முன்னதாக நிலச்சரிவுக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட்ட இந்தக் குழுவினர், கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்திலும், பூனாகலை இல:01 மற்றும் இல:02 பாடசாலைகளிலும் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டனர்.
அங்கு நிலவரங்களை ஆராய்ந்ததோடு வேறு சில இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
இந்த குழுவில் தாவரவியல் பூங்காக்கள் பொதுப் பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஸ்ணன், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஈ.சரவணபவன், பொன்.செல்வராசா, சி.சிறீதரன், அரியநேத்திரன், யோகேஸ்வரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும்,
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகவரதன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்.சி.பாஸ்கரா, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.இராஜதுரை, ஜனாதிபதியின் இணைப்புப் பணிப்பாளரும், மலையக மக்கள் முன்னணியின் நிதிச் செயலாளருமான அ.அரவிந்தகுமார் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq2.html

மீரியபெத்த தோட்டப் பாதை கண்டுபிடிப்பு- மண்ணில் புதைந்த மற்றுமொரு சடலம் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 12:51.04 PM GMT ]
கொஸ்லாந்த - மீரியபெத்த தோட்டத்திற்கு பயணிக்‍கப் பயன்படுத்தப்பட்ட பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மீரியபெத்த பகுதியில் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி மண்ணினால் மூடப்பட்டிருந்த மீரியபெத்த தோட்டத்திற்கு பயணிக்கும் பாதையை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மண் சரிவு இடம்பெற்ற இடத்திலிருந்து மற்றுமொரு சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
தற்பொழுதுவரை மண்சரிவுக்குள் அகப்பட்ட மொத்தம் 6 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று மீட்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் காண்பதற்காக பிரதேச வாசிகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரிந்து விழுந்த மலையின் மண் வீடுகளுக்கு மேலால் 25 அடிகள் மூடப்பட்டுள்ளது. இதன்கீழ் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தினைப் பார்வையிடுவதற்கு அதிகளவான மக்கள் வாகனங்களில் செல்வதாகவும் அந்த வாகனங்களை மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்துவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq4.html

வட கிழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களாகவே இன்றும் உள்ளனர்: கலையரசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 01:38.14 PM GMT ]
வட கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த நாட்டிலே நீண்ட காலப் போராட்டத்தினை முன்னெடுத்த சமூகம் என்பதனை யாரும் மறந்து விடக்கூடாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களினது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் சந்திப்பொன்று கண்ணகி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கண்ணன் தலமையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உதவித் தவிசாளர் சியாம் சுந்தர், பிரதேச சபை உறுப்பினர் தியாகராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் செயலாளர் பா.புவிராஜ் மற்றும் கிராமத்து மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,
இந்தநாட்டிலே மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு அரசாங்கங்களும் தமிழ் மக்களுக்கான எந்த நல்லதொரு தீர்வையும் இதுவரைக்கும் முன்வைக்கவில்லை. எமது சமூகம் பன்னெடுங்காலமாக பல போராட்ட வடிவங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றது.
ஆரம்பத்தில் அகிம்சைவழி போராட்டம், பின்னர் ஆயுதப் போராட்டம் தற்போது சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரப் போராட்டம் என எமது போராட்ட வரலாறுகள் நீண்டு கொண்டே செல்கின்றது.
1988 ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் வடகிழக்கு இணைந்த ஒரு மாகாண சபையினை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் அதற்கு எந்த அதிகாரமும் இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. அதன்காரணமாக அன்று அந்த மாகாண சபை கலைக்கப்பட்டது.
அதன்பின்னர் 2008ம் ஆண்டு அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றது. தமிழ் மக்களை நசுக்கி ஒடுக்கி அவர்களது பலத்தினை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே மாகாணசபை என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 பேர் அரசாங்கக் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது நாங்கள் நினைத்தோம் இந்த பிரதேசத்திலே பாரிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கப் போகின்றது என்று.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களாகவே இன்றும் சமூகத்தில் எந்த உதவிகளும் இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தினைக் கொண்டு நடத்துவதற்குக்கூட முடியாத நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மாகாண சபை அதிகாரமுள்ள ஒரு மாகாண சபையாக அமைய வேண்டும் என்பதற்காக பல மட்டங்களில் பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்திருந்தபோதும், இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து எமது மக்களை கூறுபோட்டு இனத்தினையே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் எம்மவர்களும் அரசாங்கத்திற்கு துணையாக நின்று செயற்பட்டதன் காரணமாக அது கைகூடவில்லை.
ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலகத்தினாலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் மக்களுக்கு உகந்ததாக எந்த ஒரு வேலைத்திட்டங்களும் இல்லை. அவ்வாறு கொண்டுவரப்படும் வேலைத்திட்டங்களில் ஆளும் தரப்பில் உள்ள பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர் பகிர்ந்தளிக்கப்படும் வேலைத்திட்டத்தில் இருந்து ஒரு தொகை வீதத்தினை வாங்கிவிட்டு தமக்கு சார்பானவர்களிடம் வேலைத்திட்டத்தினை கொடுக்கும் நடைமுறைதான் இங்கு இருந்து கொண்டு இருக்கின்றது.
இந்த மாவட்டத்தினை பொறுத்தவரையில் த.தே.கூட்டமைப்பினர் எந்த ஒரு வேலைத்திட்டத்தினையும் செய்ய முன்வருகின்ற வேளையில், அதனை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிலர் முற்பட்டு, எம்மை மக்கள் மத்தியில் பிழையானவர்களாக காட்ட முற்படுகின்றார்கள். இதுதான் இவர்களது வேலையாக இருந்து வருகின்றது.
எமது மக்களுக்காக நன்மையானதை யார் செய்தாலும் நாங்கள் அதனை வரவேற்போம். ஆனால் எங்களை கூறுபோட்டு, அவர்கள் பக்கம் இழுப்பதற்காக விலைபேசும் வேலைகளில் இறங்கியிருப்பது மிகவும் மோசமான விடயம் என்பதனை உரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் தமிழர்கள். தமிழன் தமிழனாகவே இறுதி வரைக்கும் வாழ வேண்டும். இதனை நாம் அனைவரும் புரிந்து கொண்டு எமது கட்சியினை பலப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXiq5.html

Geen opmerkingen:

Een reactie posten