தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 november 2014

ஐ. நா விசாரணையை சீர்குலைக்கும் இலங்கையை இந்தியா என்ன செய்யப் போகின்றது: ராமதாஸ் கேள்வி!

இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி மீனவர்களை தமிழகம் கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன் - இலங்கைக்கு எதிராக சென்னையில் நீதிமன்ற புறக்கணிப்பு
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 06:22.31 AM GMT ]
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி, சிறையில் இருக்கும் மீனவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் முதல் முறையாக இன்று மதுரை வந்தார்.
விமான நிலையத்தில்  வைத்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதிய கட்சி அறிவிப்புக்கு பின்னர் மதுரைக்கு முதல் முறையாக வந்துள்ளேன். கட்சியினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய கட்சி, புதிய சூழலில் புதிய எதிர்பார்ப்பு ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.
மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை தீர்த்து வைப்பதில் பாலமாக செயல்படுவோம்.
மீனவர் பிரச்சினைக்காக சட்டமன்றத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஜி.கே. வான் பதிலளிக்கையில்,
மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை அரசுடன் கண்டிப்புடன் பேசி, சிறையில் இருக்கும் மீனவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொய் வழக்கு புனையப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீனவர்களை தமிழகம் அழைத்து வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கைக்கு எதிராக சென்னையில் நீதிமன்ற புறக்கணிப்பு 10ம் திகதி
சென்னை உயர் நீதிமன்ற சட்டத்தரணிகளின் சங்க அவசர பொதுகுழுக்கூட்டம் சங்க தலைவர் சு.ஊ போல் கணகராஜ் தலைமையில் நேற்று கூடி கீழ் கண்ட தீர்மானங்களை எடுத்தது.
1.இலங்கை அரசு இனவெறியுடன் தமிழக மீனவர்களையும் தமிழர்களையும் கொன்று ஒழிக்கும் திட்டத்தில் அடிப்படையில் தமிழக மீனவர்களை போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டி மரண தண்டனை விதித்திருப்பதை எதிர்ப்பதோடு இந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டிப்பதாகவும்.
2.இந்த செயலை தடுக்க நடவடிக்கை எடுக்காமைக்கு மத்திய வெளியுரவுத்துறை அமைச்சகத்தை கண்டிப்பதோடு இந்திய மத்திய அரசு இவர்களின் சார்பாக நியமித்தது சட்டதரணிகள் போல் தமிழக அரசால் ஓர் குழுவை நியமிக்க வேண்டுமெனவும், இதற்கு இந்த பொது சங்கம் முழு ஆதரவை  வழங்குவதோடு ஊர் குழுவையும் நியமிக்கவிருப்பதாகவும்,  மேற்கண்ட கோரிக்கைகளுக்கு வலுவூட்டும் வகையில் திங்கட்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கின்றது.
இந்த போராட்டத்திற்கு பெண் சட்டதரணிகள் சங்கமும் தங்களது ஆதரவை வழங்க தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
 http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu3.html


ஐ. நா விசாரணையை சீர்குலைக்கும் இலங்கையை இந்தியா என்ன செய்யப் போகின்றது: ராமதாஸ் கேள்வி
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 07:00.20 AM GMT ]
இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களும், இராணுவ தளபதிகளும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
 ஆனால், இலங்கைப் போர் முடிவடைந்து 5 ஆண்டுகளாகியும் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவும், அவரது கூட்டாளிகளும் இன்றுவரை தண்டிக்கப்படாதது தமிழர்களின் மனதில் ஆறாத வடுவாக உறுத்திக் கொண்டிருக்கிறது என பா. ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இனப்படுகொலை குற்றவாளிகளைத் தண்டிக்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக சிங்களப்படையினரின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணை கோரும் தீர்மானம் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை ஆகும். ஆனால், ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்க மறுப்பதன் மூலம் மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு சிங்கள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது. இலங்கை அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைத் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
ஜெனீவாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல், ‘‘ இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை சீர்குலைக்க சிங்கள அரசு முயற்சி செய்து வருகிறது. இது இலங்கை அரசின் மீதான நம்பகமற்ற தன்மையைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, விசாரணைக்கு ஆணையிட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகவே இதைப் பார்க்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.
இலங்கையின் இச்செயல் அதிர்ச்சியையோ அல்லது வியப்பையோ தரவில்லை. ஏனெனில், இலங்கை அரசு இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். அதனால் தான் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சென்னையில் இந்த விசாரணை நடத்தப்பட்டால், போரில் பாதிக்கப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்பவர்களும் அச்சமின்றி இதில் பங்கேற்பார்கள்.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இக் கோரிக்கையை வலியுறுத்தி மூன்று முறை அறிக்கை வெளியிட்டேன். ஜூன் 18 ஆம் தேதி திண்டிவனத்தில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டத்திலும் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கெல்லாம் மேலாக ஜூலை 16 ஆம் தேதி மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டில்லியில் சந்தித்து இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை சென்னையில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், அப்போது இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு அடியோடு நிராகரித்துவிட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு இருப்பதால் தான் ஐ.நா. அமைப்பையே அவமதிக்கும் அளவுக்கு இலங்கை திமிருடன் நடந்து கொள்கிறது. ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை நியாயமாக நடப்பதை உறுதி செய்யவேண்டும். ஆனால், விசாரணையை சீர்குலைக்க இலங்கை முயல்வதாக ஐ.நா. அமைப்பே குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறது என்பதைத் தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போரில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் குடும்பத்தினருக்கு நீதி பெற்றுத்தரும் கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு இருப்பதால், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை சென்னையில் நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கையை வழிக்கு கொண்டுவருவதற்காக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfu5.html

Geen opmerkingen:

Een reactie posten