தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 16 juli 2013

அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஏமாற்ற வேண்டாம்: வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு கோரிக்கை

குருதி மணம் மாறாத வன்னி மண்ணில் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை சிதைக்கும் அரசாங்கம்: யாழ்.கலை இலக்கிய ஆர்வலர்கள் கவலை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 12:55.58 PM GMT ]
வன்னியில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் மனிதப் படுகொலையின் குருதி மணமும், அவலக்குரல்களும் தமிழர்களின் மனங்களைவிட்டு இன்னும் மறையாத நிலையில், தமிழர்களின் அரசியல், வாழ்வுரிமை, கலை, பண்பாட்டு கூறுகளை சிதைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளதாக யாழ்.கலை இலக்கிய ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தினதும், அவர்களுடன் சேர்ந்தியங்குபவர்களினதும். இத்தகைய நடவடிக்கைகள் குறித்து தமிழ் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் அரசியல்வாதிகளை வைத்தே தமிழர்களிற்கு பிரச்சனையில்லையென்ற அபிப்பிராயத்தை உருவாக்குதல், தமிழர்களின் பாரம்பரிய பூமியான ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரித்ததுடன், குடிசன பரம்பலை சிதைக்கும் வகையிலான சிங்கள குடியேற்றங்கள், பண்பாட்டு வேர்களின் மீது நிகழ்த்தப்படும் நுண்தாக்குதல்கள்,
மத தலங்களை அழித்தல் என எல்லா அடையாளங்களையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. நமது வரலாற்று துயரம் என்னவெனில், இந்த நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மத்தியிலுள்ள சலுகை அரசியலிற்கு பலியான சிலரை வைத்தே அரசு நடத்தி கொண்டிருப்பதுதான்.
இதன் தொடர்ச்சியாக- தமிழர்களின் கலை இலக்கிய வெளிப்பாடுகளிலும்- அரசு கைவைத்துள்ளது. இப்பொழுது தனது ஆதரவாளர்களை கொண்டு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 21ம் திகதி 41வது இலக்கிய சந்திப்பு என்ற ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தோல்வியடைந்த பொழுது, அரசிற்கு நன்றியும் பாராட்டுதலும் தெரிவித்த தலித் முன்னணியினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், சட்டத்திற்கு அப்பாலான ஆட்சி, ஊடக அடக்குமுறைகள், ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறை என்பவற்றின் மீது போர்த்தப்படும் பல்வேறு திரைகளிலொன்றாகவே இந்த சந்திப்பையும் நோக்க வேண்டியுள்ளது.
ஏனெனில், யார் யாரெல்லாம் இலக்கிய சந்திப்பின் ஏற்பாட்டளர்களாகவும், அமைப்பாளர்களாகவும் உள்ளார்கள் என்பதிலிருந்து அதனை புரிந்து கொள்ள முடிகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாகவே நடைபெற்ற சம்பவங்களும் அமைந்துள்ளன. சந்திப்பின் உள்ளடக்கம் இலங்கை அரசை ஆதரிப்பதாகும் என்ற உண்மையை வெளிப்படுத்தியபடி, ஒரு தொகுதி படைப்பாளிகள் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தமிழ் தேசிய கருத்துக்களை பேசுவதற்கு அரசஆதரவாளர்கள் இடமளிக்கவில்லையென்பதும் அவர்களின் குற்றச்சாட்டுகளிலொன்று.
படைப்பாளிகள் தமது அனுபவங்களை எழுதுவதும் பேசுவதும் இலங்கையின் நிலவரங்களை பொறுத்தது. யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட எழுத்தாளர் விழாக்கள் எல்லாமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவைதான். இலங்கையர்களினால் நடத்தப்பட்டவையல்ல.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு வெளியிலிருந்து வருவதை அடியோடு நிராகரிக்கும் இலங்கையரசு, தமிழர்கள் இயல்பாக வாழ்கிறார்கள் என்பதை காட்டுவதற்கான விழாக்களை மட்டும் இறக்குமதி செய்வது வேடிக்கையானது.
யாழ்ப்பாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய விழாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆளுமைகளின் பங்களிப்பை கோராததன் மூலமும், உள்நோக்கமுடைய சந்திப்பென்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.
அரசின் திரைமறைவிலான இந்த முயற்சிகளை முறியடிப்பது ஒவ்வொரு படைப்பாளிகளினதும் வரலாற்று கடமை. போராட்டமென்பது களங்களிற்கு செல்வது மட்டுமல்ல. சில இடங்களிற்கு செல்லாமலிருப்பதும்தான். ஆகவே, இந்த நிகழ்வை புறக்கணிக்குமாறு தமிழ் பேசும் படைப்பாளிகளை கேட்டு கொள்கிறோம் என யாழ்.கலை இலக்கிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஏமாற்ற வேண்டாம்: வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 12:08.41 PM GMT ]
வலி,வடக்கு மக்களை அரசியல் சுயலாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள வலி,வடக்கு மீள்குடியேற்றக் குழு அரசாங்கத்திற்காக இராணுவமும் மக்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவரும், பிரதேச சபை உப தலைவருமான எஸ்.சஜீவன் அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில்,
ஒரு லட்சத்து 23 ஆயிரம் வரையான மக்கள் 23 கிராமசேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றப்படாமல் உள்ளனர். இவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற ஆவண செய்யப்பட வேண்டும்.அதை விடுத்து மக்களுடைய நிலங்களை அவர்கள் பார்வையிடுவதற்கு 200 பேருக்கே அனுமதி, ஏனையோருக்கு அனுமதியில்லை என கூறுவதும். அரசியல் நோக்கங்களுக்காக மக்களை கூட்டிச் சென்று நடுத்தெருவில் விடுவதும்,இனிமேல் நிறுத்தப்பட வேண்டும்.
எமக்கு வாக்களித்தால், சரியானவர்களை தெரிவு செய்தால் பலாலியில் குடியேற்றுவோம், ஜனாதிபதியுடன் பேசி மீள்குடியேற்றம் செய்வோம் என கூறுவதுமாக மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையாக மக்களுடைய பிரச்சினைகளை பற்றிச் சிந்திப்பவர்கள், மக்களுக்காக அரசியல் செய்பவர்கள் வாக்களித்தால் செய்வோம் என பேரம் பேச மாட்டார்கள், பேரம் பேசவும் கூடாது.
எனவே தேர்தலுக்காக மக்களுடைய அவலங்களையும், இயலாமைகளையும் விற்பதை அரசாங்கமும், அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ் தலமைகளும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வட மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் சரியான முடிவினை எடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten