தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 november 2014

கிழக்கில் தமிழர்கள் முழுமையாக புறந்தள்ளப்பட்டுள்ளார்கள்: கலையரசன்- தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் த.தே.கூட்டமைப்பினரே: மு.கவின் எம்.பி

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி தனி மாடி வீடுகள்! ஆறுமுகன் தொண்டமான் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 10:37.20 AM GMT ]
கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகி பூனாகலை பாடசாலையில் தங்கிருக்கும் மக்களை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று சந்தித்துப் பேசினார்.
இதன்போது அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்….
தேசிய கட்டட நிர்மாண ஆய்வு நிலையத்தின் பரிசோதனையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட இடமான பூனாகலை அம்பட்டிகந்தை தோட்டப்பகுதியில், மீரியபெத்தை மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி மாடிவீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அத்துடன் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
அத்தோடு மீரியபெத்தை மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை அரசாங்கம் பொறுப்பேற்றாலும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் வங்கி சேமிப்பு புத்தகத்தில் தலா 2 ½ இலட்சம் ருபா வங்கியில் வைப்பிலிட்டு புதிதாக சேமிப்பு புத்தகம் வழங்கப்படும்.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி நடடிவடிக்கைக்காக சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்படும்.  மலையக பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் படிப்படியாக வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கில் தமிழர்கள் முழுமையாக புறந்தள்ளப்பட்டுள்ளார்கள்: கலையரசன்- தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் த.தே.கூட்டமைப்பினரே: மு.கவின் எம்.பி
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 11:03.08 AM GMT ]
தமிழர்கள் என்பதன் காரணமாக நாம் பல தடைகளைத் தாண்ட வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். அத்தடைகளை உடைத்தெறிந்து எமது மக்களின் எதிர்காலத்தினை பற்றி அனைவரும் சிந்தித்து, எமது இனத்திற்காக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் நடத்தப்பட்ட மனுநீதி கண்ட சோழன் எனும் நாட்டுக்கூத்துப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவர்களையும் இந்நாடகத்தினை தயாரித்து நெறிப்படுத்திய ஆசிரியரான எம்.சி.ராஜ்குமார் ஆசிரியரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது நேற்று பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அதன் பிரதி அதிபர் ராம் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன், மு.இராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், கலையரசனின் செயலாளர் பா.புவிராஜ் மற்றும் கிராமப் பெரியார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கலையரசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் இந்த எல்லைக் கிராமங்களில் இருந்த மக்கள் பல்வேறுபட்ட துயரங்களை அனுபவித்தவர்கள். தற்போதும் எந்த அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலும் இந்தப்பாடசாலையின் ஆசிரியர்களினதும் மாணவச் செல்வங்களினதும் அயராத முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுடன் போட்டியிட்டு, முதலாமிடத்தினை தட்டிக்கொள்ள முடிந்தமையானது மிகவும் பாராட்டிற்குரியதாகும்.
தமிழர்களினது தனித்துவத்தினை நிலைநாட்டுவதற்காக பல போராட்ட வரலாறுகளை கண்டவர்கள்.
அதனடிப்படையிலே ஆரம்பத்தில் அகிம்சைப் போராட்டம், அதற்குப்பின்னர் ஆயுதப் போராட்டம், தற்போது சர்வதேச மட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜதந்திரப் போராட்டம் என பல பரிமானங்களைப் பெற்று எமது போராட்ட வடிவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.
இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு பல இழப்புக்களை சந்தித்த ஒரு இனமாக தமிழ் இனம் இருந்து கொண்டிருக்கின்றது.
இதனை பயன்படுத்தும் மாற்று இனம் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழர்கள் தலைமைத்துவங்களுடன் இருந்த முக்கிய இடங்களை தன்வசப்படுத்தி, தாங்கள் அந்த இடங்களில் இருந்து கொண்டு எமது இனத்தனை நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
தமிழர்கள் என்ற வகையில் நன்கு திட்டமிட்டு கிழக்கு மாகாணத்தில் கூட குறிப்பாக அரசாங்க நியமனங்களில் கூட தமிழர்கள் முற்றுமுழுதாக புறந்தள்ளப்படுகின்றார்கள். இதுதான் தமிழர்களின் இன்றைய நிலை.
60 வருடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட எமக்கு எந்த பக்கபலமும் இல்லை. அதனை நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதற்காக இன்னும் உழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இன்று அம்பாறை மாவட்டத்தினை எடுத்துக் கொண்டால், பல வலயக்கல்வி அலுவலகங்களில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.
ஆனால் பொத்துவில் வலயத்தில் இன்னும் எத்தனையோ ஆசிரியார்கள் தேவை இருக்கின்றது.
இதுதொடர்பாக நாங்கள் மாகாணசபை அமர்வுகளின்போது எடுத்துக்காட்டியிருக்கின்றோம். அவர்களது அரசியல் தலையீடு காரணமாக அனைத்தும் கிடப்பில்தான் கிடக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் எங்களால் பெரிதான எந்த அபிவிருத்தி வேலைகளையும் செய்ய முடியாது. எங்கள் எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் எந்தவேலையாக இருந்தாலும் செய்து தருவோம் எனவும் கூறினார்.
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே: ஹரீஸ் எம்.பி
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்பதன் நிமிர்த்தம் நாங்கள் அவர்களுடன் நெருக்கமான இறுக்கமான உறவினை பேணி வருகின்றோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான ஜனாப் கரீஸ் எம்.பி தெரிவித்தார்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்லூரி முகப்பிற்கு அவரது நிதி ஓதுக்கீட்டில் இருந்து 2 மில்லியன் ரூபாவினை ஒதுக்கி அடிக்கல் நடும் நிகழ்வானது நேற்று கல்லூரி முதல்வர் எம்.ஸ்ரீபன் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை பிரதேச செயலாளர், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், திட்டமிடல் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
இந்தப்பிரதேசத்ததை சேர்ந்தவன் என்ற வகையில் பல வேலைத்திட்டங்களை செய்து வருகின்றேன்.
அதில் ஒரு பகுதியாகவே கல்லூரி முதல்வரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த முகப்பு வாயலுக்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருக்கின்றேன்.
எதிர்காலத்தில் இப்பாடசாலைக்கு இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்வதற்கும் உத்தேசித்திருக்கின்றேன்.
அதில் ஒரு கட்டமாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் கதைத்து இக்கல்லூரிக்கு கட்டாய தேவையான ஒன்று கூடல் மண்டபத்தினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை நிச்சயம் செய்து தருவேன் எனவும் உறுதியளித்தார்.
எமது அரசியல் பாதை என்பது தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்ததாகவே இன்று வரைக்கும் இருந்து வருகின்றது. அதன்காரணமாக த.தே.கூட்டமைபினருடன் மிகவும் நெருக்கமானதும் இறுக்கமானதுமான உறவினை ஏற்படுத்தி வருகின்றோம்.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களுடன் தமிழ்மக்கள் தொடர்பான பிரச்சனைகளை காலாகாலமாக பேசி தீர்வினை கண்டும் வருகிறோம்.
இச்செயற்பாடு இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. நான் கல்முனை மேயாரக இருந்த காலத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கு வடகிழக்கு வாழ் தமிழ்ப்பேசும் மக்களின் தலைமகன் எனும் பட்டத்தினை சந்தாங்கேணி மைதானத்திலே சூட்டி கௌரவப்படுத்தியிருந்தென்.
இவ்வாறான நெருக்கத்தை தமிழ், முஸ்லிம் உறவுகளுடன் பேணிவருகின்றோம்.
கல்முனையை பொருத்த வரையில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனையும் தமிழ் தலைமைகளுடன் பேசி அதற்கான நல்ல தீர்வினையும் பெறமுடியும் என நம்புகின்றேன்.
எது எவ்வாறு இருப்பினும் இந்தப்பிரதேசத்தினை பொருத்த வரையில் அபிவிருத்தி என்று வருகின்றபோது இப்பிராந்தியத்தினையும் மையப்படுத்தியதாகவே செய்து வருகின்றேன்.
இப்பாடசாலையானது நூற்றாண்டு காணும் பாடசாலையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் இக்கல்லூரியும் ஒன்றாகும்.
எதிர்காலத்தில் கைத்தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் கட்டத்தில், அனைத்து மாணவர்களும் கல்வியினை சிறந்த முறையில் கற்று அனைவரும் உயர்ந்த இடத்திற்கு சென்று உயர் பதவிகளை வகிப்பதற்கான சிறந்த கல்வியினை தற்போதிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும்.
கல்லூரி வாழ்க்கை என்பது மிகவும் பொன்னானது இதனை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும் எனவும் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten