தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

சீன நீர்மூழ்கிகள் இந்தியாவுக்கு சவால்!

மீண்டும் சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஒன்று அதன் துணைப் போர்க் கப்பலுடன் கொழும்புக்கு வந்துவிட்டுச் சென்றிருக்கிறது.
கடந்த மாதம் 31ம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்த சங்சென் 2 , மற்றொரு கப்பலான சங்சிங்டாவோ ஆகிய சீனக் கடற்படைக் கலங்கள் கடந்த 5ம் திகதியே இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளன.
இவையிரண்டும் ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையும் கொழும்புக்கு வந்து சென்றவைதான்.
ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து சீன சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்கும் பணிக்காகவே இவற்றை அனுப்பி வைத்திருந்ததாகக் கூறுகிறது சீனப் பாதுகாப்பு அமைச்சு.
ஏடன் வளைகுடாவுக்குச் செல்லும் வழியிலும், அங்கிருந்து திரும்பும் வழியிலும், மாலுமிகள் ஓய்வெடுக்கவும், எரிபொருள் நிரப்பவும் தான் இவை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்ததாக இலங்கை கடற்படையும் கூறுகிறது, சீனாவும் கூறுகிறது.
எந்த நாடுமே தமது போர்க் கப்பல்களின் நகர்வுகளின் நோக்கங்களை ஒருபோதும் வெளிப்படுத்தியதும் இல்லை, வெளிப்படுத்தப் போவதும் இல்லை.
எனவே, சீனா கூறுவதை முற்றிலும் உண்மையென்று எவரேனும் நம்பிவிட முடியாது.
சீன நீர்மூழ்கிகள் அடிக்கடி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துபோகத் தொடங்கியுள்ளது குறித்து இந்திய ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய, இலங்கை கடற்பரப்பை அவை போருக்குப் பயன்படுத்தவோ, போருக்கான ஆயத்தத்துக்குப் பயன்படுத்தவோ இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிப்படையாக சீன நீர்மூழ்கிகள் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடாமல் இருந்தாலும் அவற்றின் நோக்கம் எத்தகையது என்பதை இலங்கைக் கடற்படையால் கூட உறுதி செய்திருக்க முடியாது என்பதே உண்மை.
எது எவ்வாறாயினும் சீன நீர்மூழ்கிகள் ஒருசில வாரங்களுக்குள் இரண்டாவது தடவையாகவும் கொழும்புக்கு வந்து சென்றிருக்கின்றன. விரைவில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
ஏனென்றால் ஏடன் வளைகுடாவில் தனது நீர்மூழ்கிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதை சீனா வெளிப்படுத்திவிட்டது. இந்தநிலையில் தொடர்ச்சியாக சீன நீர்மூழ்கிகள் அங்கு சென்று வரப் போவது உறுதி.
அவ்வாறு சென்று வரும் சீன நீர்மூழ்கிகளுக்கு ஓர் இடைத்தங்கல் கேந்திரமாக எரிபொருள் நிரப்பவும், மாலுமிகள் ஓய்வெடுக்கவும் இப்போது வசதியாக இருக்கின்ற ஒரே இடம் இலங்கைத் துறைமுகங்கள் தான்.
இந்தியப் பெருங்கடலில் ஓய்வெடுக்கவோ, எரிபொருள் நிரப்பவோ சீன நீர்மூழ்கிகள் இந்தியத் துறைமுகங்களை நாட முடியாது.
மாலைதீவும் அவ்வளவு இலகுவாக இடமளிக்குமென்று கருதமுடியாது.
எனவே இலங்கையைத் தான் சீனா நம்பியிருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டுதான் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா அமைத்துக் கொடுத்துள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் முனையத்தையும் கட்டிக்கொடுத்திருக்கிறது.
இந்த இரண்டு துறைமுகங்களிலும் சீனாவுக்கு சில இறங்குதுறை மேடைகளை கொடுப்பதாக இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில் தான், பெருவாரியான நிதியைக் கொட்டுவதற்குச் சம்மதித்தது சீனா.
இலங்கையில் சீனா துறைமுகங்களை அமைக்கத் தொடங்கியதும், இராணுவ ரீதியாக இந்தியப் பெருங்கடலில் கால் வைக்கப் போவதாக இந்தியா கருதியது.
அவ்வாறு இந்திய ஆய்வாளர்களும், ஊடகங்களும் சந்தேகமும் கவலையும் எழுப்பிய போது அதனை இலங்கையும் நிராகரித்தது.
இதை வெறும் வர்த்தக நோக்கிலான திட்டங்களே என்றும், இராணுவ நலன் கருதியவை அல்ல என்றும் திரும்பத் திரும்பக் கூறின. இப்போது சீன நீர்மூழ்கிகள் கொழும்பு வரத் தொடங்கியுள்ளன. அவை கொழும்புத் துறைமுகத்தில் சீனா அமைத்துக் கொடுத்த இறங்குதுறையில் தரித்து நிற்கத் தொடங்கியுள்ள நிலையில், அதனை எதற்காக சீனா அமைத்தது என்று புரியத் தொடங்கியுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தில் மட்டுமன்றி அம்பாந்தோடடைத் துறைமுகத்திலும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப் போகும் இறங்குதுறைகள்  நிச்சயம் சீனக் கடற்படையினால் அவ்வப்போது பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அப்போதும் கூட அவற்றை சீனா போருக்குப் பயன்படுத்தவில்லை என்று இலங்கைதான் கூறப்போகிறது. போர் என்பது எப்போதுமே நடக்கும் ஒன்றல்ல. எப்போதாவது நடப்பது தான் போர்.
எந்த நாடுமே பிறநாடுகளில் தளங்களையோ, துறைமுகங்களையோ அமைக்கும் போது அவற்றைப் போருக்காகப் பயன்படுத்தப் போவதாக பிரகடனப்படுத்திக் கொள்வதும் இல்லை.
சந்தர்ப்பம், தேவை ஏற்படும் போது மட்டுமே அவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.
அந்தவகையில்தான் இலங்கையிலுள்ள அம்பாந்தோட்டை மற்றும் கொழும்புத் துறைமுகங்களை இப்போது எப்படிப் பயன்படுத்துகிறதோ, அதுபோன்றே எதிர்காலத்திலும் பயன்படுத்திக் கொள்ள சீனா முனையலாம்.
இப்போது சீன நீர்மூழ்கிகள் அடிக்கடி கொழும்பை எட்டிப் பார்த்து குசலம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது இந்தியாவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் ஆதிக்கம் வலுப்பெறுவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.
அண்மையில் சீனா கட்டியுள்ள பாரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கூட இந்தியப் பெருங்கடலில் தான் தரித்து நிற்கப் போகிறது.
இவையெல்லாம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு வல்லுனர்கள் ஏற்கனவே எச்சரித்து வந்துள்ளனர்.
அதேவேளை இந்திய அரசாங்கமும் அண்மைக்காலமாக இந்தியக் கடற்படையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக நீர்மூழ்கிகள் மற்றும் பாரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை கொள்வனவு செய்தும், ரஷ்யாவிடமிருந்து குத்தகைக்குப் பெற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைகிறது.
இந்தியப் பெருங்கடலில் இதுவரை இந்தியாவே தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சி வந்தது.
இப்போது சீனா இதற்குள் கால் வைத்திருப்பதால் இந்தியாவுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
இதனைச் சமாளிக்கும் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ள நிலையில்தான் சீன நீர்மூழ்கிகள் கொழும்புடன் உறவாடத் தொடங்கியுள்ளன.
கடந்த செப்படம்பர் மாதம் முதல் முறையாகச் சீன நீர்மூழ்கி கொழும்பு வந்து சென்றது இந்தியாவுக்குப் பெரும் கவலையை அளித்தது.
அதன் விளைவாக இந்தியப் பாதுகாப்புச் செயலர் ஆர்.கே.மாத்தூர் கொழும்பு வந்தார். பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா ஆகியோர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டனர்.
இதன்போது இலங்கையில் சீனாவின் இராணுவத் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டதாகவும் சீன நீர்மூழ்கியின் வருகை தொடர்பாக எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் இவ்வாறு இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், தம்மையோ, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவையோ புதுடில்லி அவசரமாக அழைக்கவில்லை என்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா கூறியிருக்கிறார்.
எனினும் சீன நீர்மூழ்கிகள் இலங்கையில் தரித்து நிற்பதை இந்தியாவினால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பாதுகாப்புச் செயலர் கோத்தபதாய ராஜபக்சவிடம் எச்சரித்திருந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்குப் பின்னர்தான் ஏடன் வளைகுடாவுக்குச் சென்ற சீன நீர்மூழ்கி மீ்ண்டும் கொழும்புக்கு வந்துவிட்டுச் சென்றிருக்கிறது.
இந்தியப் பாதுகாப்புச் செயலர் அஜித் டோவல் கோத்தபாய ராஜபக்சவிடம் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்த பின்னரும், சீன நீர்மூழ்கிக்கு அனுமதி கொடுத்திருப்பது இந்தியாவைப் பெரிதும் அவமதிக்கும் செயல் என்று இந்திய ஊடகங்கள் பொருமிக் கொண்டிருக்கின்றன.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இந்தியாவை ஒதுக்கி விட்டு, சீனாவுடன் நெருங்கிச் செல்வதாக இந்திய ஊடகங்கள் கருதுகின்றன.
இந்திய அரசாங்கத்துக்கும் இதே கவலையும், சந்தேகமும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறது.
இப்போதுதான் இலங்கையில் சீனாவின் தலையீகள் தொடர்பாக இந்தியா கொஞ்சம் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் கூட இலங்கையில் சீனாவின் தலையீடு குறித்து இந்தியா கவலை கொள்ளவில்லை என்றே இந்திய வெளிவிவகார அமைச்சு கூறிவந்தது. என்றாலும் இரண்டாவது சீன நீர்மூழ்கி கொழும்பு வந்து சென்ற பின்னர், அது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சோ, வெளிவிவகார அமைச்சோ வாய்திறக்கவில்லை.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பருதீனிடம், கோத்தபாய ராஜபக்சவின் புதுடில்லிப் பயணம் குறித்து இரண்டு தடவைகள் கேள்வி எழுப்பிய போதும் அதுபற்றி அவருடன் பேசிய இந்திய பாதுகாப்பு அமைச்சிடம் கேட்குமாறு கூறி தட்டிக் கழித்திருந்தார்.
சீன நீர்மூழ்கி கொழும்பு வந்திருப்பது குறித்து, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன்  பிரகாஷ் கோபாலனும் கருத்து வெளியிட மறுத்திருந்தார்.
ஆனால் இந்திய ஊடகங்களோ, இந்தியா பெரும் கோபம் கொண்டுள்ளதாகவும், மகிநந்த ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் எழுதி வருகின்றன.
இந்தியாவில் மிகவும் கரிசனைக்குரிய விவகாரமாக இது அலசப்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்திய அரசாங்கம் அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறதென்று கருதமுடியாது.
ஆனால் எதற்காக இந்தியா மௌனமாக இருக்கிறது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
அமைதியாக இருந்து பதிலடி கொடுக்க இந்தியா நினைக்கிறதா - ஏற்கனவே விடுத்த எச்சரிக்கையையும் மீறி சீன நீர்மூழ்கிக்கு இலங்கை இடமளித்துள்ளதால், இனி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதா, சார்க் மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று இந்தியப் பிரதமர் மௌனமாக இருக்கிறாரா என்று பல கேள்விகள் இருக்கின்றன.
எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த மௌனத்தை இலங்கை தனக்கச் சாதகமாக பயன்படுத்துிக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.
அதாவது இந்தியா கவலை கொள்ளவில்லை என்று நிரூபிக்கப் பார்க்கிறது.
ஆனால் இந்தியாவின் மௌனத்தை, இந்த விவகாரத்தில் அது கரிசனை கொள்ளவில்லை என்று எடுத்துக்கொண்டால் அது மடமை.
ஏற்கனவே இலங்கையிலுள்ள துறைமுகங்களை இராணுவ நோக்கில் பயன்படுத்த எந்த நாட்டுக்கும் இடமளிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறது இலங்கை.
ஜே.ஆர் கொடுத்த அந்த வாக்குறுதியை இலங்கை தெளிவாக மீறுகின்றது என்று எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது இந்தியா உணர்ந்தால் அதன் பொறுமையும் எல்லை கடந்து போகும்.
ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்பு நலன் சார்ந்த விடயம்.
சுபத்ரா
 http://www.tamilwin.com/show-RUmszBTdKXeo0.html

Geen opmerkingen:

Een reactie posten