தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

ரத்தின தேரர் தன் தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது நல்ல முன்மாதிரி: மனோ கணேசன்!

மங்களவிக்கு என் பதவியை விட்டுக் கொடுக்க தயார்: அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 07:40.03 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்ற மங்கள சமரவீர மீண்டும் கட்சிக்கு திரும்பினால் தனது அமைச்சர் பதவியை அவருக்கு விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஆனமடுவ தொகுதியில் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது மங்கள சமரவீரவுக்கு புதிய இடமல்ல. அது அவரது தாய் வீடு. வீட்டில் எப்போதாவது மனஸ்தாபங்கள் ஏற்பட்டால் நாங்களும் அடுத்த வீட்டுக்கு செல்வதுண்டு.
ஆனால் மாலை ஆனதும் வீட்டுக்கு திரும்பி வந்து விடுவோம். இது சாதாரணமான விடயம். மங்கள சமரவீர எடுக்க உள்ள தீர்மானம் மிகவும் சிறந்த தீர்மானம்.
தற்போது இருக்கும் இடத்தில் இருந்து நாட்டுக்கு எந்த பணியையும் செய்ய முடியாது என்பதை அவர் அறிவார்.
இதனால், பழையவற்றை மறந்து விட்டு தாய் வீட்டுக்கு வருமாறும் நான் அழைக்கின்றேன். நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.
பொறுப்புகளை கொடுத்தே மீண்டும் ஏற்றுக்கொள்வோம். அதற்கான நான் எனது அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கின்றேன்.
காரணம் நாங்கள் இந்த நாட்டுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றோம் எனவும் பிரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu0.html

மீரியபெத்த நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37: மகிந்த அமரவீர
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 07:48.21 AM GMT ]
கொஸ்லாந்த, மீரியபெத்த நிலச்சரிவில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் முழு எண்ணிக்கை 37 என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் இருந்து 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மேலும் 24 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலையில் உறவினர்களின் கோரிக்கைகளை அடுத்து காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களுக்காக இறப்புச் சான்றிதழ்கள் பண்டாரவளை மற்றும் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்படும்.
இதனை தவிர நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவித்து அங்கு நினைவு தூபி ஒன்று நிர்மாணிக்கப்படும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu1.html
பொது வேட்பாளராக போட்டியிடுவது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்: சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 07:58.18 AM GMT ]
பொது வேட்பாளராக போட்டியிவது வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டம் என 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு தான் எதிர்நோக்கிய அனுபவங்கள் நினைவுக்கு வரும் போது மயிர்கூச்செறியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கோட்டே சோலிஸ் ஹொட்டலில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பில் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிடும் நபர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபடும் தயார் நிலையில் வரவேண்டும்.
தேர்தல் காலத்தில் அனைவரும் நம்முடன் இருப்பர். ஆனால் தோல்வியடைந்த பின் அனைவரும் நம்மை விட்டுச் சென்று விடுவர்.
தனித்தே சிறை சோறு சாப்பிட வேண்டும். இவற்றை அறிந்து புரிந்து கொண்டு பொது வேட்பாளர் போட்டியிடுவாரேயானால் சிறந்து எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu2.html
ரத்தின தேரர் தன் தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது நல்ல முன்மாதிரி: மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 08:02.11 AM GMT ]
18ம் திருத்தத்தை ஆதரித்ததை தவறென ரத்தின தேரர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டது நல்ல முன்மாதிரி என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடக மாநாடு, இன்று முற்பகல் புறகோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த ஊடக மாநாட்டில் நான் ஒரு தமிழ் கட்சியின் பிரதிநிதியாக கலந்து கொள்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒரு தமிழ் கட்சி என்பதைவிட, தமிழர்களையும் உள்ளடக்கிய இலங்கை மக்களின் பிரதிநிதியாகவே நான் இங்கே கலந்து கொள்கின்றேன் என்று நினைக்கின்றேன்.
ஒரே குடும்பத்தின் அங்கத்தவர்களாக நாம் வாழவேண்டிய காலம் வந்துவிட்டது. சோபித தேரரின் வழிகாட்டலில் இங்குள்ள அனைத்து கட்சி தலைவர்களுடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் தருணம் வந்துவிட்டது.
சில நாட்களுக்கு முன்னர் ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தின தேரர் ஒரு முக்கிய விடயத்தை சொன்னார். 18ம் திருத்தத்திற்கு தாம் ஆதரவளித்ததை ஒரு தவறு என கூறினார். அதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
இது ஒரு நல்ல முன்மாதிரி ஆகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் அரசியல் தவறுகள் செய்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி தவறு செய்துள்ளது. எமது ஜனநாயக மக்கள் முன்னணி தவறு செய்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறு செய்துள்ளது. இந்த கருத்தை இங்கே கூடியுள்ள எல்லா கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கின்றேன். நாம் அனைவரும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன் செல்வோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்று இங்கே பலர் கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த வரையில் கூட்டமைப்பு, பொது வேட்பாளர் தொடர்பாகவும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அவர்கள் ஒரு அவசரப்படாத கொள்கையை கடைபிடிக்கின்றார்கள் என எண்ணுகின்றேன்.
கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் ஒரு விடயத்தை மாத்திரம் இதுவரையில் தெளிவாக கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தல்களின் போது இந்நாட்டில் எவருக்கும் இனவாதத்தை கிளப்ப தாம் இடமளிக்க போவதில்லை எனக்கூறியுள்ளார்.
இது பாராட்டி வரவேற்கவேண்டிய நல்ல ஒரு பொறுப்புள்ள நிலைப்பாடு என எண்ணுகின்றேன்.
இங்கு பேசிய சரத் பொன்சேகா, கடந்த முறை தான் பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டதனால் பெருந்துன்பங்களை எதிர்கொண்டதாக சொன்னார்.
தேர்தலின் பிறகு தன்னை அனைவரும் கைவிட்டு விட்டதாகவும் சொன்னார். உண்மைதான், பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும். எமது வேட்பாளர் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ, அவர் அதற்கு தயாராக வேண்டும்.
ஆனால், சரத் பொன்சேகா ஒன்றை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும். அவர் கடைசியாக இழுத்து செல்லப்பட்ட தருணம் வரை நான் அவருடன் இருந்தேன்.
அவரை இந்த உலகிலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று கூறிய அதே அரசாங்கமே, அவரை இழுத்துக்கொண்டு போய் சிறையில் அடைத்தது. என் கண் முன்னால் இது நடந்தது. எனவே எதுவும் நடக்கலாம். நாம் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த சர்வாதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறைமைக்கு எதிராக, சோபித தேரர் இரண்டு வருடங்களாக நடத்திய தேசிய இயக்கத்தின் மூலமாக இன்று இந்த நாட்டின் பிரதான கட்சிகளை இணைத்து ஒரு பொது மேடைக்கு கொண்டு வந்துள்ளார்.
அதற்காக அவருக்கு நான் இந்நாட்டு மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXeu3.html

Geen opmerkingen:

Een reactie posten