தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 november 2014

மெளனமாக இருப்பதே உயர்வானதாக இருக்கும்! மௌனம் கலக நாஸ்தி!

[ வலம்புரி ]
2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச­வும், மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடுவது உறுதியாயிற்று.
பக்கவாத்தியங்களாக இன்னும் ஒரு சிலர் தேர்தல் களத்தில் குதித்து சுருதி வாசித்தாலும் மகிந்தவும் மைத்திரியுமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இருபெரும் பாகவதர்கள் என்பது உறுதி.
இந்நிலையில் இருவரில் எங்களுக்கு நல்லவர் யாரென்று கேட்டால், காவேரிதான் சிங்காரி, சிங்காரி தான் காவேரி என்று கூறுவதைவிட வேறெதுவுமில்லை.
எதுவாயினும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிவதில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பர்.
இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பது பற்றி நமக்குத் தெரியாதாயினும் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய முடிவு என்ன? என்பதை தமிழ் மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எங்கள் நிலைமை ஒன்றுதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.
மகிந்த மோதகம் என்றால் மைத்திரி கொழுக்கட்டை அவ்வளவுதான். தோற்றங்கள் வேறே அன்றி உள்ளீடு ஒன்றுதான் என்பதை நாம் காலாகாலமாக அனுபவத்தில் உணர்ந்துள்ளோம்.
எனினும் இத்தகைய நிலைமைகளை உணர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தாக கடந்த கால தேர்தல் அனுபவங்கள் நமக்கு அமையவில்லை.
எனவே, மிக விரைவில் நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நுட்பமாக- இராஜதந்திரத்துடன் முடிவெடுத்து அதனை அறிவிக்க வேண்டும்.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடாமல், எவரது விருந்துக்கும் இசையாமல் தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தி தீர்மானம் எடுப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமையாகும்.
அத்தகையதொரு தீர்மானத்தை எடுப்பதாக இருந்தால், கூட்டமைப்பு மெளனமாக இருப்பதை தவிர வேறு எந்த முடிவும் உயர்வானதாக இருக்க முடியாது.
ஆம்! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரோடு எங்கள் பிரச்சினை குறித்துப் பேசுவோம்.
நாங்கள் யாரையும் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. ஏனெனில் நீங்கள் சிங்களவர்கள். உங்களுக்கு சிங்களவரின் நலனைத் தவிர வேறு எதுவும் கிடையாது.
தமிழ் மக்களைத் துன்பப்படுத்தியவர்கள் நீங்கள்.
ஆகையால் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மெளனமாகவே இருக்க விரும்புகிறது.
மெளனம் கலக நாஸ்தி என்ற பழமொழியின் பொருள் தெரிந்த நாம், உங்களில் யாரேனும் போட்டியிடுங்கள். குத்தி முறியுங்கள். நாங்கள் பக்கம்சார மாட்டோம்.
அதேநேரம் தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள்.  அவர்கள் எதுசரியென்று நினைக்கிறார்களோ! அதற்கேற்றால் போல் அவர்கள் முடிவெடுப்பார்கள்.
அந்த முடிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலையிடாது என, முடிவெடுத்து அறிவிப்பதை விட மிக உன்னதமான தீர்மானம் வேறெதுவுமாக இருக்காது.
ஆகையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவையெடுக்குமென முழுமையாக நம்புவோம்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfr2.html

Geen opmerkingen:

Een reactie posten