தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

கரையோர மாவட்டக் கோரிக்கை: மு.காவின் மூத்த தலைவர் மஜீத் விளக்கம் (செய்தித் துளிகள்)!

இலங்கை மக்கள் விரைவில் நாட்டை இழக்கலாம்?- சண்.குகவரதன் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 07:36.32 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றால் இந்த நாடு சீனாவின் காலணித்துவ நாடாக மாறிவிடும் என  மேல்மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் தெரிவித்தார்.
பாரம்பரியமாக வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இலங்கை சொந்தமில்லாத நாடாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
இதுவரை ஒரு இலட்சம் சீனர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதைவிட கூடுதலான சீனர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் எதிர்காலத்தில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
ஏற்கனவே 16 ஆயிரம் சீனர்களுக்கு பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விடயங்களை இரகசியமாகவே வைத்துள்ளது.
ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பிரஜாவுரிமை அந்தஸ்து கொடுக்கும் அளவுக்கு இலங்கை பொருளாதாரத்திலும் அரசியல் விழுமியங்களை பேணும் நடைமுறைகளிலும் அபிவிருத்தியடையவில்லை.
 மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கூட ஏனைய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் அடிப்படையில் தங்குவதற்கான உரிமை மாத்திரமே வழங்கப்படுகின்றது.
ஆனால் இலங்கை மக்களின் இறைமையை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் சீனர்களுக்கு இலங்கையில் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நோக்கில் இங்கு வந்துள்ள சீனர்கள் எமது மக்களின் வளங்களை சுரண்டி தமது நாட்டுக்கு கொண்டு செல்லுகின்றனர். எமது நாட்டு துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் தமது தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கின்றனர்.
இதற்கான வசதிகளை மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது. வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் சகல மாகாணங்களிலும் சீனர்கள் காணிகளை பெற்று பல்தேசிய கம்பனிகளை அமைத்து வருகின்றனர்.
இதன் காரணத்தால் மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது.
ஆகவே அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பேர்வையில் எமது நாட்டு வளங்களை சீனாவுக்கு தரைவார்ப்பதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது என சண்.குகவரதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கம் சீனாவுக்கு இல்லை. இலங்கை மக்கள் அரசியல் ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் சீனாவுக்கு அக்கறையில்லை.
தமது நாட்டுக்கு தேவையான பொருளாதார விடயங்களிலும் பிராந்தியத்தில் இலங்கையை தமக்கு பாதுகாப்பான தளமாக பயன்படுத்துவதிலும் மாத்திரமே சீனா கவனம் செலுத்துகிறது.
மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் 2019 ஆம் ஆண்டு இலங்கை சீனாவின் அடிமை நாடாக மாறும் என்பதில் ஐயம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXep0.html

கரையோர மாவட்டக் கோரிக்கை: மு.காவின் மூத்த தலைவர் மஜீத் விளக்கம் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2014, 07:47.46 AM GMT ]
1961 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியின் வெளிப்பாடாகவே கரையோர மாவட்டக் கோரிக்கை உருவானது என கல்முனை மாநகர சபை பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணை தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயா நீர்பாசன திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த குடியேற்றத் திட்டத்தில் எழுபத்தைந்து வீதம் உள்ளூர் பிரதேசவாசிகளுக்கும், இருபத்தைந்து வீதம் வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று பிரதமரினால் அன்றைய நாடாளமன்ற உறுப்பினர் கேட் முதலியார், எம்.எஸ்.காரியப்பர் அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது.
ஆனால் குடியேற்றத்திட்டம் முடியும் தருவாயில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.  அத்தேர்தலில் கல்முனை தொகுதி வாக்காளர்கள் எம்.எஸ். காரியப்பரை தோற்கடித்து மேர்சா என்பவரை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தனர்.
இதன் விளைவு சேனநாயக்க அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு வெளி மாவட்டதிலுள்ள பெரும்பான்மை சிங்களவர்கள், குறிப்பாக மாத்தறை, கேகாலை, குருநாகல் போன்ற பகுதிகளிலுள்ள சிங்களவர்கள் அக்குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு மிக சொற்பமான இடங்களே வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்டம் உருவாக்குவதற்கு ஏதுவாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றத் திட்டங்களை உருவாக்கியதுடன் மொனராகலை மாவட்டத்திலுள்ள பல சிங்கள பிரதேசங்களை அம்பாறையுடன் இணைத்து புதிய அம்பாறை மாவட்டத்தை அன்றைய அரசு பிரகடனம் செய்ததுடன் புதிய அம்பாறை தேர்தல் தொகுதியையும் உருவாக்கி கொண்டது.
அம்பாறை மாவட்டம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் ஒரு மாவட்டமாகும்.
இம்மாவட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரே அரசாங்க அதிபராக இருந்து வருகிறார்.
கச்சேரியின் அனைத்து அலுவல்களும் சிங்கள மொழியிலேயே நடைபெறுகின்றன.
இதனால் கரையோர பிரதேசத்து மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
1977 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசு இலங்கையில் புதிய மாவட்டங்களை இனங்காணுவதற்கு மொறகொட ஆணைக்குழுவை அமைத்தது.
அவ் ஆணைக்குழுவின் அறிக்கையில் வடக்கு, கிழக்கில் இரண்டு புதிய நிர்வாக மாவட்டங்கள் இனங்காணப்பட்டன.
அவை யாழ்ப்பாணத்திலிருந்து புதிய கிளிநொச்சி மாவட்டமும், அம்பாறையிலிருந்து புதிய கல்முனை கரையோர மாவட்டமுமாகும்.
ஆணைக்குழுவின் விதப்புரையின்படி, கிளிநொச்சி புதிய மாவட்டமாக பிரகடனம் செய்யப்பட்டது. கல்முனை கரையோர மாவட்டத்தை பிரகடனம் செய்வதற்கு அன்று அம்பாறை மாவட்ட அமைச்சராக இருந்த பி.தயாரத்னவின் கடும் எதிர்ப்பினால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கைவிட்டார் என்பது வரலாறாகும்.
1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா- அஷ்ரப் ஒப்பந்தத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் அமைச்சாராகவிருந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் கல்முனை கரையோர மாவட்டத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் மரணம் அவரை தழுவிக்கொண்டது.
2002 இல் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இலங்கையில் மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு முன்வந்தது. குளியாப்பிட்டி, மகியங்கணை, கல்முனை ஆகியவை அவையாகும்.
அன்று பிரதியமைச்சராகவிருந்த அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அமரர் சந்திரநேருவுடன் ஒன்றுசேர்ந்து கல்முனை உத்தேச மாவட்டத்தின் கச்சேரியை அக்கரைப்பற்றில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து சென்றதனால் புதிய மாவட்டங்களை உருவாக்கும் திட்டத்தை அன்றைய அரசாங்கமும் கைவிட்டது.
2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான உடன்படிக்கையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டது.
அவ்வுடன்படிக்கையின் பிரகாரம் மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயம் ஒன்றை கல்முனையில் அமைப்பதென்றும், நிதி, திட்டமிடல் உட்பட பல நிருவாக பிரிவுகளை உள்ளடக்குவதென்றும் கூறப்பட்டிருந்ததுடன் காலப்போக்கில் அது கல்முனை கரையோர மாவட்டமாக பிரகடனம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கம் அவ்வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் பிரதமர் ஜயரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவும் கரையோர மாவட்ட கோரிக்கையை இனவாதக்கோஷம் என வர்ணிப்பது அவர்களது அரசியல் அறியாமையையும், பேரினவாத மேலாதிக்க சிந்தனையையும் எடுத்து காட்டுகின்றது" என மஜீத் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை உணவகங்களில் திடீர் சோதனை: பாவனைக்கு உதவாத ஒரு தொகைப் பொருள் கைப்பற்றல்
கல்முனை மாநகர சபை பகுதியில் அமைந்துள்ள சில உணவகங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனித நுகர்வுக்கு உதவாத ஒருதொகை உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
இதன்போது பிரதான உணவகங்களில் வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத சோறு, பேக்கரி பண்டங்கள், உணவு பண்டங்கள் மற்றும் சிற்றூண்டி வகைகள் என்பன கைப்பற்றப்பட்டன.
இவற்றுள் சில முறையாக தயாரிக்கப்படாமலும் மற்றும் சில காலாவதியானவையாகவும் இன்னும் சில சுத்தம், சுகாதாரம் பேணப்படாமலும் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தமை கண்டறியப்பட்டன.
இவை அனைத்தும் கைப்பற்றப்பட்டு- கல்முனை மாநகர வளாகத்தில் வைத்து தீயிட்டு எரிக்கப்பட்டன.
அதேவேளை இதில் சம்மந்தப்பட்ட சில வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு சுத்தம், சுகாதாரமான உணவுகளை வழங்கும் நோக்கில் மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் பணிப்புரையின் பேரில் கல்முனை மாநகர சபையின் வழிக்காட்டலில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் இப்பிரதேசங்களில் அடிக்கடி திடீர் சுற்றிவளைப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
இந்நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதாரத்திற்கு கேடான உணவு வகைகள் மற்றும் சூழல்களை வைத்திருப்போர் மீது எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTdKXep1.html

Geen opmerkingen:

Een reactie posten