தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 november 2014

வடமாகாண சபையின் கடிதத்திற்கு இதுவரை பதிலளிக்காத ஜனாதிபதி- வடக்கு விவசாய அமைச்சுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் அன்பளிப்பு!



மலையக மக்களுக்கு உதவத் துடிக்கும் கூட்டமைப்பு! தடுக்கும் மலையகத் தலைமைகள்
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 06:11.41 PM GMT ]
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு  கிழக்கில் வாழ்வதற்கு விரும்பினால், அவர்களுக்குரியதை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற விசேட கருத்துக்களம் நிகழ்ச்சியில் தமிழ் அரசியல் தலைமைகள் தங்களது காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலகத் தமிழர்கள் தங்களது ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
தமிழர்கள் மத்தியில் பிரித்தாளும் தந்திரத்தை அரசாங்க நிபுணர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
“தமிழர்களின் ஒற்றுமையீனமே தமிழர்களை அழிப்பதற்கான மூலகாரணமாக உள்ளது.” போன்ற பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfs0.html
மகிந்தவுக்கு எதிராக கரு ஜயசூரியவை எதிரணிகள் ஆதரிக்கலாம்!- அசாத் சாலி
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 11:26.58 PM GMT ] [ பி.பி.சி ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி கூறுகின்றார்.
நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்ற நீதிக்கான தேசிய அமைப்புக்கு தலைமை தாங்கும் மாதுளுவாவே சோபித தேரரின் முன்னெடுப்பில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சந்திப்பு தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அசாத் சாலி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இயங்கவுள்ள அரசியல் கட்சிகளின் கூட்டு ஊடக சந்திப்பு திங்களன்று நடக்கும் என்றும் அசாத் சாலி கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் சோபித தேரர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அசாத் சாலி கூறினார்.
ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் வேறொரு தலைவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கும் நிலை உள்ளதாகவும் அசாத் சாலி தமிழோசையிடம் கூறினார்.
ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் சோபித தேரருடன் போது வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும் சாலி தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அந்த இறுதி அறிவிப்பை அக்கட்சியே அறிவிக்கும் என்றும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கூறினார்.
எனினும், கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக அறிவிப்பதற்கான பரிந்துரையை தாம் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருவதாகவும் அசாத் சாலி மேலும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfs1.html
கொஸ்லாந்த மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட மாகாண சபை அடுத்தவாரம் உதவி!
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 04:38.12 PM GMT ]
கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமானளவு உதவிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவில் அந்தப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கடந்த 31ம் திகதி மாகாண சபையில் நடைபெற்ற மேற்படி அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி வழங்கல் தொடர்பான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கிணங்க, போதுமானளவு பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவைத்தலைவர் கூறியுள்ளார்.
எனினும் முன்னர் தீர்மானிக்கப்பட்டதைப்போன்று இன்று கொண்டுசென்று வழங்க முடியாதநிலை காணப்பட்டதாகவும், எனினும் அப்பொருட்களை விரைவாக கொண்டு செல்வதற்கும் வழங்குவதற்கும் தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறித்த தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் 31.10.2014 ம் திகதியன்று சபையின் உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாகாண சபையின் சார்பில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை 07.11.2014 ம் திகதி கொண்டுசென்று ஒப்படைப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
எனினும் தற்போதைய நிலவரப்படி போதியளவு பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாக இருப்பதனால் குறித்த திகதியில் உதவிப் பொருட்களை கொண்டு செல்வது பிற்போடப்பட்டது.
சேகரிக்கப்பட்ட பொருட்களை அடுத்த வாரமளவில் கொண்டுசென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றேன்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfsz.html

வடமாகாண சபையின் கடிதத்திற்கு இதுவரை பதிலளிக்காத ஜனாதிபதி- வடக்கு விவசாய அமைச்சுக்கு நீர்த்தாங்கி வாகனங்கள் அன்பளிப்பு
[ வெள்ளிக்கிழமை, 07 நவம்பர் 2014, 04:07.50 PM GMT ]
வடக்கில் படையினர் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகளையும், வீடுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த மாதம் 9ம் திகதி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு ஜனாதிபதியினால் பதில் வழங்கப்படவில்லை என வட மாகாண சபையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக மீள் வலியுறுத்தும் வகையில் 2ம் கடிதத்தினை நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விடயம் தொடர்பாக மாகாண சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ் காணும் விடயம் மீள வலியுறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சபை சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 2014.10.09ம் திகதிய அமர்வின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் (R/17/2014/143) ஆங்கில வடிவத்தினை கீழ்க்கண்டவாறு மீள்பதிவு செய்கிறோம்.
“வடக்கு மாகாணத்தில் ஆயுத படைகள் வசமிருக்கும் அனைத்துத் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் இந்த வருட முடிவுக்கு முன்னதாக அவற்றின் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு அதி மேதகு ஜனாதிபதி அவர்களையும், இலங்கை அரசாங்கத்தினையும் வடக்கு மாகாணசபை கோருகிறது”
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே, இந்தக் கோரிக்கையை மேற்கொள்ளும் போது இச்சபையானது போர் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இந்தக் காணிகளினதும் கட்டடங்களினதும் உரிமைகளை மறுப்பது நியாயமற்றதும், அநீதியானதுமான விடயம் எனக்கருத்தில் எடுத்துக் கொள்கிறது.
இந்தக் காணி உரிமையாளர்கள் நலன்புரி நிலையங்களிலும், வாடகை வீடுகளிலும், நண்பர்கள் உறவினருடனுமே இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருவதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.
இவ்விடயத்தைச் சுட்டிக் காட்டும் ஒரு விடயமாக நாம் பின்வரும் விபரங்களைக் காட்டும் நிரல்களை இத்துடன் இணைக்கின்றோம்.
1.நிரல்- அ- வலிகாமம் வடக்கு பிரிவின் 28 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயுதப் படைகள் வசமிருக்கும் 6526 ஏக்கர் தனியார் காணிகள்
2.நிரல்- ஆ- தங்கள் சொந்தக் காணிகளில் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாது, சுகாதாரமற்ற நிலைமையில் 4656 இற்கும் மேற்பட்ட உள்ளக இடம் பெயர்வினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் 03 நலன்புரி நிலையங்கள்
3. நிரல் -இ- தென்மராட்சிப் பகுதியிலுள்ள 10 கிராம அலுவலர் பிரிவுகளில் ஆயுதப் படைகளின் வசமிருக்கும் 16 வீடுகள் மற்றும் 30 காணிகள்.
எனவே வடக்கு மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் ஆயுதப் படைகளின் வசமிருக்கும் தனியார் காணிகளையும் கட்டடங்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மேன்மை தங்கிய தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் பெறுமதியான நீர்த்தாங்கி வாகனங்கள் அன்பளிப்பு
பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு தண்ணீர்த் தாங்கி வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.
இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற இவ்வாகனங்களின் கையளிப்பு நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு வாகனங்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பளை பிரதேச செயலர் பிரிவில் புலோப்பளையிலும் வள்ளிமுனையிலும் யூலிபவர், பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் காற்று மின் ஆலையை நிர்மாணித்து வருகின்றன.
இந்நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தின் வரட்சி நிவாரணம், குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்கு வணிக நிறுவனங்களுக்குரிய சமூகக்கடப்பாடாக நிதி உதவி வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை வடக்கு மாகாண சபையுடன் செய்து கொண்டுள்ளன.
20 வருடங்களுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் முதல் 10 வருடங்களுக்கு ஆண்டுதோறும் 20 மில்லியன் ரூபாய்களையும், அடுத்த 10 வருடங்களுக்கு ஆண்டுதோறும் 23 மில்லியன் ரூபாய்களையும் வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கு நன்கொடையாக இந்நிறுவனங்கள் வழங்கவுள்ளன.
இதன் தொடக்கமாக, 2014 ஆம் ஆண்டுக்குரிய 20 மில்லியன் ரூபாய் நன்கொடையில் 06 தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 05 வாகனங்கள் இன்று வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கையளிக்கப்பட்ட நிலையில், மற்றைய வாகனம் விரைவில் கிடைப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சு மேற்கொண்டுவரும் குடிநீர் விநியோகச் சேவையில் பயன்படுத்தப்படவுள்ளன.
காற்று மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண சபையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் பணியாளர்களில் 80 விழுக்காடு பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காற்று மின்னாலை வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரும் மூலதனத்துடன் கூடிய முதலாவது தனியார் முதலீடு என்பதோடு, இந்நிறுவனங்களின் நன்கொடையே வடக்கு மாகாணசபைக்குக் கிடைத்த முதலாவது பெரும் நன்கொடை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாகனங்களைக் கையளிக்கும் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், யூலிபவர், பீற்றாபவர் நிறுவனங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகள், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீன்,
மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், உதவி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சண்முகானந்தன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.சுதாகரன், உதவி விவசாயப் பணிப்பாளர் ஜெயதேவி ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBTbKXfsy.html

Geen opmerkingen:

Een reactie posten