[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 07:49.57 AM GMT ]
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அவசரமாக டெசோ கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசின் நடவடிக்கை தேவை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மற்றும் ஐ.நா.வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சவை அனுமதிக்க கூடாது என்றும், ஐ.நா மனித உரிமை குழுவினர் இந்தியா வர விசா வழங்க வேண்டும் என்றும், இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மோடி- சம்பந்தன் சந்திப்பு குறித்து கருணாநிதி ஆராய்கிறார்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் இன்று சென்னையில் டெசோ அமைப்பு ஆராய்கிறது.
டெசோ அமைப்பின் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் டெசோ உறுப்பினர்கள் ஒன்றுகூடி இது தொடர்பில் இன்று ஆராயவுள்ளனர்.
குறித்த சந்திப்பின்போது இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மோடி தமது அக்கறையை காட்டியிருந்தார்.
இந்தநிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆராயவே டேசோ இன்று கூடுவதாக அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu5.html
நுவரெலியாவில் பள்ளிவாசல் சுவர் இடிந்து தரைமட்டம்: கடை ஊழியர் ஆபத்தான நிலையில்- 40 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 08:15.32 AM GMT ]
நுவரெலியா நகர மத்தியில் உள்ள பள்ளிவாசலின் சுவர் இடிந்து தரைமட்டமாகியதால் அருகில் உள்ள பலசரக்கு கடை ஊழியர் ஒருவர் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் நுவரெலிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்தச்சம்பவம் இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாசல் சுவர் இடிந்து அருகில் இருந்த பலசரக்கு கடை மீது விழுந்துள்ளது.
இதனால் இந்த கடையில் இருந்த ஊழியர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, கடை ஊழியர் நுவரெலிய வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நுவரெலிய முதல்வர் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து
ஹட்டன் பன்மோர் தோட்டத்தில் இருந்து ஹட்டன் நகரம் வரை சென்ற முச்சக்கரவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி 40 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று மாலை 4.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வேகமாக செலுத்தியதாலேயே வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கரவண்டியின் சாரதியும் மேலும் இருவரும் படுகாயத்திற்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu6.html
ஐநா. விசாரணைக்குழுவுக்கு ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்ப முதலமைச்சர் ஏற்பாடு செய்யவேண்டும்! மணியரசன்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 09:25.04 AM GMT ]
தமிழீழத்தில் சிங்கள இன வெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் முதலியவற்றை விசாரித்து அறிக்கை தருவதற்காக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைப் பேரவையின் தீர்மானப்படி பன்னாட்டுப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையரால் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவிற்கு,21.02.2002 முதல் 15.11.2011 வரை இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த குற்றங்கள் பற்றிய செய்திகள், சான்றுகள், புகைப்படங்கள், காணொலிகள் முதலியவற்றை அனுப்பி வைக்கலாம் என்றும், 30.10.2014க்கு முன்னதாக இவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏதிலியராக அரசு முகாம்களிலும், தனிவீடுகளிளும் இலட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் 21.02.2002 முதல்15.11.2011 வரையிலான காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் வாழ்ந்து இலங்கை அரசின் நேரடித் தாக்குதலுக்கு உள்ளானவர்கள்; இலங்கை அரசின் இனக்கொலை, போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் போன்றவற்றை நேரில் பார்த்தவர்கள், மேற்படிக் குற்றங்கள் நிகழ்ந்ததற்கான சான்றுகளைப் பல வடிவங்களில் வைத்துள்ளவர்கள்.
இவர்கள் அனைவரும் ஐ.நா.மனித உரிமை ஆணையர் அமைத்துள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவிற்குத் தங்கள் வசம் உள்ள சான்றுகளையும், விவரங்களையும் அச்சமின்றி சுதந்திரமாக அனுப்பி வைப்பதற்குத் தமிழக முதல்வர் அவர்கள் தனி ஏற்பாடு செய்து தந்தால் பேருதவியாக இருக்கும்.
தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதலைமைச்சர் அவர்கள் தாமே முன்வந்து இலங்கை அரசு நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் முன் மொழிந்து ஒரு மனதாக அதை நிறைவேற்றியுள்ளார்கள்.
இந் நிலையில் ஐ. நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றுகளை, விவரங்களை அனுப்புவதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தருவது உலக நீதியின் பாற்பட்ட செயலாகும்.
எனவே மேற்படி வாய்ப்பை இங்கு உள்ள ஈழத்தமிழர்களுக்கு உருவாக்கித் தருமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdevy.html
Geen opmerkingen:
Een reactie posten