கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் ஒரு மனிதராக இலங்கை அரசாங்கத்தினால் அதிகளவில் வெறுக்கப்பட்ட ஒரு மனிதராக இருந்து வந்த நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து நீங்கப் போகிறார்.
லூயிஸ் ஆபர் அம்மையாரை அடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக 2008 ஆம் ஆண்டு நான்காண்டுப் பதவிக் காலத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந் தார் நவநீதம்பிள்ளை.
பின்னர் அவருக்கு இரண்டாண்டு கால சேவை நீடிப்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு இரண்டாண்டு கால சேவை நீடிப்பு அளிக்கப்பட்டது.
இன்றுடன் அவரது ஆறாண்டு பணிக்காலம் முடிவடையவுள்ளது.
இந்த ஆறாண்டுகளிலும் நவநீதம்பிள் ளை உலகளவில் முக்கியமானதொரு மனிதராகத் தன்னை நிலைப்படுத்தும் அளவுக்கு, மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.
இவர் மனித உரிமை ஆணையாளரா கப் பதவி வகித்த காலகட்டங்களில், இலங்கை, சிரியா, ஈராக், வடகொரியா, லிபியா, ஆப்கானிஸ்தான், காஸா, எகிப்து, மத்திய ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றில் மனித உரிமை மீறல்கள் முக்கிய சவாலாக மாறியிருந்தது.
மனித உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவராக இவர் இல்லாத போதிலும், மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக, இலங்கை விவகாரத்தில் இவரது ஈடுபாடும், கடும் போக்கும் தான் அரசாங்கத்தைப் பெரிதும் நெருக்கடிக்குள்ளாக்கியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எந்த மனித உரிமை மீறல்களுமே நடக்கவில்லை என்று சாதித்து வந்த இலங்கை அரசாங்கத்தை, போர்க்குற்றம் குறித்து விசாரிக்கும் ஒரு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் அளவுக்கு படியிறங்க வைத்ததில் நவநீதம்பிள்ளையின் பங்கு முக்கியமானது.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், கொண்டுவந்த அடுத்தடுத்த மூன்று தீர்மானங்கள் தான், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளுக்கு காரணமாகின. ஆனால், அத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் காரணமாக இருந்தவர் நவநீதம்பிள்ளை தான் என்றே இலங்கை அரசாங்கம் கருதுகிறது.
ஆரம்பத்திலிருந்தே, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தவர் நவநீதம்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போரின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு, சர்வதேச விசாரணையே அவசியமென்ற அவரது வலியுறுத்தலுக்கு கடந்த மார்ச் மாதமே அதுவும் அவரது பதவியின் இறுதிக்காலத்திலேயே பலன் கிடைத்தது.
இன்றுடன் ஓய்வு பெறவிருக்கும் நவநீதம்பிள்ளை, கடந்த ஜூலை மாதமே விடுப்பில் சென்று விடுவாரென்று முன்னர் பேசப்பட்டது.
ஆனால், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைக் குழுவை அமைப்பது, அதனை விசாரணைகளை நெறிப்படுத்தும் பணிகளை முன்னெடுப்பதற்காக மட்டுமன்றி சிரியா, காஸா உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட மோதல்களாலும், அவர் கடைசி நாள் வரை பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளும், இலங்கை யின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரா கக் குரல் கொடுத்ததற்காகவும் நவநீதம்பிள்ளை, மிகமோசமான விமர்சனங்களை அரசாங்கத்திடம் இருந்து எதிர்கொள்ள நேரிட்டது.
இலங்கை அரசாங்கத்தினால் மிக மோசமாக விமர்சிக்கப்பட்ட வெளிநாட்டுப் பிரமுகர்களை வரிசைப்படுத்தினால், அதில் நவநீதம்பிள்ளைக்கே முதலிடம் கிடைக்கும்.
யார் யாரெல்லாம், தமக்கெதிராகக் குரல் கொடுக்கிறார்களோ, இலங்கையில் இடம்பெறும் மீறல்களை சுட்டிக்காட்டி கண்டிக்கிறார்களோ, அவை குறித்த நம் பகமான நடுநிலையான விசாரணைக ளைக் கோருகிறார்களோ அவர்களையெல்லாம் புலியாக உருவகப்படுத்துவது இலங்கையின் வழக்கம்.
அது ஒபாமாவாக இருந்தால் என்ன, பான் கீ மூனாக இருந்தாலென்ன, எரிக் சொல்ஹெய்மாக இருந்தால் என்ன, நவநீதம்பிள்ளை என்றாலென்ன, எல்லோருக்குமே புலிப்பட்டம் கட்டிப்பார்ப்பது தான் இலங்கையின் வழக்கம்.
அந்தவகையில், நவநீதம்பிள்ளையும் பெண் புலியாகவே அரசாங்கத்தினால் விமர்சிக்கப்பட்டார்.
அவர் ஒரு தென்னாபிரிக்கத் தமிழராக வேறு இருந்து விட்டதால், அரசாங்கத்துக்கு இன்னும் வசதியாகிப் போனது.
ஆனால், தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சிக்காலத்தில், வெள்ளையரல்லாத முதல் சட்டத்தரணியாக, உயர்நீதிமன்ற நீதியரசராக உருவெடுத்த நவநீதம்பிள்ளையின் பக்கச்சார்பின்மை தான், அவரை ருவாண்டாவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா. விசாரணை நீதிமன்றத்துக்கான நீதிபதியாகத் தெரிவு செய்ய வைத்தது.
எட்டாண்டுகள் அதில் பணியாற்றிய அவர் பின்னர், ஐந்தாண்டுகள் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார்.
இந்த சர்வதேச நீதித்துறைப் பதவிகள் ஒன்றும், நவநீதம்பிள்ளையின் பக்கச்சார்பினாலோ, அல்லது எந்தவொரு நாட்டினதும் சிபாரிசினாலோ வழங்கப்பட்டவையல்ல.
திறமையும், பக்கச்சார்பின்மையும் தான் அவரை ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக முன்மொழியக் காரணமாகியது.
இந்த ஆறாண்டுகளிலும் நவநீதம்பிள் ளை, இலங்கை தொடர்பாகவே அதிக சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளார் என்பதை மறுக்க முடியாது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் நம்பியதால், சர்வதேச விசாரணை என்ற விடாப்பிடியான கொள்கையில் அவர் இருந்து வந்தார்.
அவரது அந்தப் பிடிவாதம் அரசாங்கத்துக்கு ஏற்படுத்திய எரிச்சல், கோபத்தினால் பலமுறை அவரை மிகக்கேவல மாகவே அரசுப் பிரதிநிதிகள் விமர்சித்துள்ளனர்.
அவர் மீது இலங்கை அரசுப் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த மிக மோசமான விமர்சனங்களால், ஒரு கட்டத்தில், பேர வைக் கூட்டத்திலேயே கண்ணீரைத் துடைக்க வேண்டிய நிலைக்கும் முகம் கொடுக்க நேரிட்டது.
நவநீதம்பிள்ளை பக்கச்சார்பானவர் என்றும், புலிகளின் கையாள் என்றும், அவர்களிடம் பணம் வாங்கியவர் என்றும் வாய்க்கு வந்தபடி அரசாங்கம் விமர்சனம் செய்த போதிலும், சர்வதேச அளவில் மிகவும் மதிப்புக்குரிய ஒருவராகவே நவநீதம்பிள்ளை இருக்கிறார்.
நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல, எங்கு தவறு நடக்கிறதோ அதனை வெளிப்படையாகவே கண்டிக்கும் இயல்புடையவர்.
இவர் இந்த ஆறாண்டுகளில் சுமார் 60 நாடுகளுக்குப் பயணம் செய்து, மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக முயற்சித்திருக்கிறார். கடந்த 22ஆம் திகதி, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது, உலகள வில் நடக்கும் மோதல்களைத் தடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை உரிய முறையில் செயற்படவில்லை என்று நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தார்.
ஐ.நாவின் பாதுகாப்புச்சபை மேலதிகமான பொறுப்புடனும், உடனடியாகவும் செயற்பட்டிருந்தால், இலட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்த நவநீதம்பிள்ளை, சகித்துக் கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும், அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐ.நா. பாதுகாப்புச்சபை இரண்டாம் பட்சமாகக் கருதிச் செயற்பட்டதாகவும் விமர்சித்திருக்கிறார்.
அவரையடுத்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வெளியிட்ட கருத்துகள் நவநீதம்பிள்ளை எந்தளவுக்கு நேர்மையுடன் பணியாற்றினார் என்பதை வெளிப்படுத்தப் போதுமானது.
உலகளவில் நாம் சமகாலத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, நவநீதம்பிள்ளையின் நேர்மையான கருத்துக்கள் மற்றும் வெளிப்படையான அறிக்கைகளில் இருந்து ஐ.நா. பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் பெருமளவு பயன்பெற்றார்கள்.
தாம் கண்டதை கண்டபடியே சொல்லுவார் நவநீதம்பிள்ளை.
மனித உரிமைகள் மீறப்படும் போதும், மனிதர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் போதும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞராக அவர் இருப்பார் என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும்.
மற்றவர்கள் சில விடயங்களை பேசத் தயங்கும் சமயங்களில் கூட, நவநீதம்பிள்ளை தைரியமாக வெளிப்படையாக பேசத் தயங்காதவர். பயம் இல்லாமல் பேசக்கூடியவர்.
மற்றவர்கள் சில விடயங்களை பேசத் தயங்கும் சமயங்களில் கூட, நவநீதம்பிள்ளை தைரியமாக வெளிப்படையாக பேசத் தயங்காதவர். பயம் இல்லாமல் பேசக்கூடியவர்.
நவநீதம்பிள்ளையின் ஐ.நா. பணி முடிவுக்கு வந்தாலும், உலக மனிதர்களையும் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முக்கிய குரலாக நவநீதம்பிள்ளையின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.
கடந்த ஆறாண்டுகளாக அவருடன் இணைந்து பணி செய்ய நேர்ந்தது குறித்து தாம் நன்றியுடன் பெருமையடைவதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆறாண்டுகளாக அவருடன் இணைந்து பணி செய்ய நேர்ந்தது குறித்து தாம் நன்றியுடன் பெருமையடைவதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான, துணிச்சலும் நேர்மையும் மிக்க ஒருவரான நவநீதம்பிள்ளை, இன்றுடன் ஓய்வு பெறவுள்ளதையிட்டு இலங்கை அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.
நவநீதம்பிள்ளை தாம் ஐ.நா. பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.
எனவே, அவரை அரசாங்கம் இனிமேலும் புலியாகவே பார்க்கும், விமர்சிக்கும். அதையெல்லாம் அவர் கண்டுகொள்ளப் போவதில்லை.
அதேவேளை, புதிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் சையிட் அல் ஹுசெய்ன் நாளை பதவியேற்கப் போகிறார்.
அவர் பக்கசார்பற்றவராகச் செயற்படுவார் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால், அவர் கூட இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டால், நிச்சயம், புலியாக்கப்படுவார். பக்கசார்பானவராக விமர்சிக்கப்படுவார்.
அந்தப் பெயரை அவர் எடுப்பதற்கு நீண்டகாலம் செல்லாது என்றே தோன்றுகிறது.
என்.கண்ணன்
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp1.html
Geen opmerkingen:
Een reactie posten