தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

தேர்தல் ஆணையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு- பெப்ரல் குற்றச்சாட்டு!

இந்தியா 100 வீதம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கும்! மோடி, சம்பந்தன் குழுவினரிடம் கூறியவை என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 11:51.07 AM GMT ]
இந்தியா 100 வீதம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இருக்கும். எனினும் கூட்டமைப்பு கொழும்பு அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தச் செய்தியை இலங்கையின் ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த வாரத்தில் இந்தியா சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரைச் சந்தித்தனர். இதன் போது பேசப்பட்ட விடயங்களை குறித்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.
புதுடில்லியின் பிரசித்தமான முகவரி - இலக்கம் 7, ரேஸ்கோஸ் வீதியாகும். பாதுகாப்பு அதிகாரி ஒருவர், மூன்று வாகன தொடரணி ஒன்றை நிறுத்துகிறார். மூன்று வாகனங்களும் இந்திய பிரதமரின் வாசஸ்தலத்தில் நிறுத்தப்படுகின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தனையும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைலாகு கொடுத்து வரவேற்கிறார்.
இதன் போது நரேந்திர மோடி தமிழில் “வணக்கம்”என்று கூறி வரவேற்கிறார்.
அனைவரும் ஆசனத்தில் அமர்ந்தவுடன் மோடி, சம்பந்தனை பார்த்து ஹிந்தி மொழியில் ஏதோ கூறுகிறார். அதனை மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்கிறார். “நான் உங்களின் கருத்துக்களை கேட்க விரும்புகிறேன்” என்பதே மோடி கூறிய ஹிந்தி வார்த்தையாகும்.
30 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்ட கூட்டமைப்பு, மோடி சந்திப்பு ஒரு மணித்தியாலமாக தொடர்கிறது.  இதன் போது மோடி “நாங்கள் 100 வீதம் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறினார்.
இந்த வசனம் இந்திய இலங்கை உறவில் புதிய அத்தியாயத்தை எடுத்துக் காட்டியதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது
சம்பந்தன், மோடியிடம் இலங்கை தமிழர் பிரச்சினையை சுருக்கமாக கூறுகிறார்.
இராணுவ மயம், குடியேற்ற வாதம் மற்றும் வடக்கில் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் என்று இலங்கை அரசாங்கம் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை அவர் மோடியிடம் முன்வைக்கிறார்.
இதனைத்தவிர ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர் மோடியிடம் எடுத்துரைக்கிறார்.
வலிகாமத்தில் இராணுவத்தின் பிரசன்னம், பொதுமக்களின் 1600 ஏக்கர் காணியை இராணுவம் கையகப்படுத்தியுள்ளமை,  இராணுவக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளமை போன்ற விடயங்களை இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சம்பந்தன்,  மோடியிடம் முறையிடுகிறார்

நடைமுறையில் இராணுவத்தினர் குடும்பங்கள் குடியேறுவதற்காக 10 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படுவதாக சம்பந்தன் எடுத்துரைத்தார்.
அத்துடன் உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறப்படும் பிரதேசங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவில் 5000 சிங்களவர்கள் வாக்களர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ முன்னாள் அதிகாரியை மீண்டும் ஒருமுறை வடக்கின் ஆளுநராக நியமிப்பதில்லை என்று இலங்கை ஜனாதிபதி உறுதியளித்தார்.
எனினும் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் ஆட்கள் வடக்கில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த வடக்கு மாகாண தேர்தலின் போது அவர்கள் ஆளும் கட்சிக்காக வேலை செய்தனர்.
குறித்த ஆளுநரால் வடமாகாண முதலமைச்சர் பதவி விலகும் அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்று சம்பந்தன் மோடியிடம் தெரிவித்தார்.
இதன்போது இந்திய பிரதமர் மோடி வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைக்குமாறு கூறினார். இதனை தமது அதிகாரிகளிடம் குறிப்பெடுத்துக் கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார்.
இந்திய நிர்வாக முறைப்படி, மாநில முதலமைச்சர் ஒருவருக்கு வெளிநாடு ஒன்று அழைப்பு விடுக்குமானால், அவர் மத்திய அரசாங்கத்திடம் அனுமதி பெறவேண்டும். அது இலங்கைக்கும் பொருந்தும்.
இந்தநிலையில் விக்னேஸ்வரனுக்கான அழைப்பு, கொழும்பின் ஊடாக அனுப்பப்படல் வேண்டும். அந்த அழைப்பு கிடைத்ததும் விக்னேஸ்வரன் கொழும்பின் அனுமதியை பெறவேண்டும் என்று மோடி விளக்கமளித்தார்.
13வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் சம்பந்தன் கூறும் போது கடந்த ஐந்து வருடங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இது தொடர்பில் வித்தியாசமான உறுதிமொழிகளை வழங்கினார். 13க்கு அப்பால் செல்லப் போவதாக இந்தியாவிடமும் உறுதியளித்தார்.
எனினும் அந்த உறுதிமொழிகள் கிடப்பில் போடப்பட்டன. இதன் காரணமாகவே இலங்கை அரசாங்கத்தின் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டார்
இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் மின்சாரத் திட்டம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாமிலேயே தங்கியுள்ளனர். எனினும் அவர்களுக்கு அகதிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. கிண்ணியாவில் இந்துக்களின் கட்டுப்பாட்டில் இருந்து புனித பிரதேசம் இன்று பௌத்த ஆலயத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் இந்தியா உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தன் கோரினார்.
இந்தநிலையில் இந்தப் பிரச்சினைகளை மேற்பார்வை செய்வதற்கென்று இந்தியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சம்பந்தன் கோரினார்.
இதற்கு பதிலளித்த மோடி, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த விடயத்தை கையாளும் என்று கூறினார்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமைச்சரவை அந்தஸ்துடன் கோபாலசாமி பார்த்தசாரதியை விசேட பிரதிநிதியாக நியமித்தார். எனினும் அவருடைய மகன் ராஜீவ் காந்தி, இலங்கையில் இருந்த உயர்ஸ்தானிகர் ஜோடின்ராநாத் டிக்சித்தை நேரடியாக இந்த விடயத்தில் தலையிடச்செய்தார்.
இந்தநிலையில் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமை, தற்போதைய இந்திய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹா இந்த விடயத்துக்கு பொருத்தமானவர் என்று நம்புகிறது. சிறந்த இராஜதந்திர அனுபவத்தை கொண்ட அவர், இந்த விடயங்களை செயற்படுத்தக் கூடியவர் என்று மோடி கூறினார்.
இலங்கை அரசாங்கம், 13வது அரசியலமைப்புக்கு அப்பால் சென்று அதனை நடைமுறைப்படுத்த இந்தியாவுக்கு உறுதி கூறியுள்ளமையை தாமும் அறிந்து கொண்டதாக மோடி குறிப்பிட்டார்.
இதற்கிடையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் தம்மை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தியதாக கொழும்பின் ஆங்கில இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் நாடாளுமன்ற தெரிவுக்குழு என்ற அம்சத்தை போன்ற இந்திய பிரதமர் இலங்கையின் எதிர்க்கட்சியினரையும் சந்திக்க எண்ணியிருப்பதாக ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
இதில் அரசியலில் தற்போது அங்கம் வகிப்போர் உட்பட்ட மூத்த அரசியல்வாதிகளும் உள்ளடக்கப்படுவர் என்றும் ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய பயணத்தின் போது மற்றும் ஒரு முக்கிய விடயம் இடம்பெற்றது. ஆகஸ்ட் 21ம் திகதியன்று சம்பந்தன் குழுவினர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். மன்மோகன் சிங்கின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மஹிந்த ராஜபக்ச 13வது அரசியலமைப்பு குறித்து இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை புதிய இந்திய பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும் என்று சம்பந்தன், மன்மோகன் சிங்கிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த மன்மோகன் சிங், தாம் ஏற்கனவே, தாம் இது தொடர்பில் மோடியிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
தற்போது நீங்கள் கேட்பதால், மீண்டு;ம் மோடியை சந்திக்கும் போது அவரிடம் அதனைக் கூறுகிறேன் என்று மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
இதேவேளை சம்பந்தன் குழுவினர் தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சியை சந்தித்தமையை கொண்டு பாரதீய ஜனதாக் கட்சி. அரசியல் நிலைப்பாட்டை எடுக்கத் துணியலாம் என்று கொழும்பின் ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி பாரிய வெற்றியை பெற்ற போதும் தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரிய வெற்றியை தக்கவைத்துக் கொண்டது.
இந்தநிலையில் 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக் சட்டசபை தேர்தலை இலக்காகக் கொண்டே பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக கிளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பை நடத்தியதாக கொழும்பின் ஆங்கில இதழ் எதிர்வு கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlqy.html
தேர்தல் ஆணையாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு- பெப்ரல் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 12:02.05 PM GMT ]
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை பிரதிவாதியாக குறிப்பிட்டு, ஜே.வி.பி நாளைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டு மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜே.வி.பியின் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை மேற்கொண்டு வரும் சட்டத்தரணிகளான ஊவா மாகாண வேட்பாளர் சுகத் பலகல்ல மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்ய உள்ளனர் என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் வன்முறைகள், ஆளும் கட்சியின் வேட்பாளர்கள் மேற்கொண்டு வரும் தேர்தல் சட்ட மீறல்களை தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன் சென்று கூற வேண்டும்.
தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான அனைத்து விபரங்கள் மற்றும் ஆதாரங்களை வழங்கிய போதிலும் தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய அவற்றை தடுக்க தவறியுள்ளார்.
ஊவா மாகாணத்தில் தேர்தல் பிரசாரங்களின் போது இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியிருந்தார்.
18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊவா மாகாண சபைத் தேர்தலை சுதந்திரம் மற்றும் நியாயமான நடத்துவதை உறுதி செய்யும் தேர்தல் ஆணையாளருக்கு இருக்கும் அதிகாரங்களை தடுத்துள்ளது.
குறித்த சட்டம் ஆணையாளரை வேலை தெரியாத டாசனாக மாற்றியுள்ளது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கைவிட்டு போகும் அதிகாரத்தை பாதுகாக்க முயற்சிக்கும் அரசாங்கம் - ஜே.வி.பி
அரசாங்கம் தனது கைவிட்டு போகும் அதிகாரத்தை பாதுகாத்து கொள்வதற்காக வன்முறைக் குழுக்களை பயன்படுத்தி தோல்வியான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் ஆரம்பத்தில் இருந்தே அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலாக இருக்காது என்பதை நாட்டில் உள்ள சகல மக்களும் அறிந்த விடயமாகும்.
வேட்புமனு தாக்கல் செய்த தினத்தில் இருந்து அரசாங்கத்தின் அனுசரணையை பெற்றுள்ள வேட்பாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறினர்.
அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதுடன் அரச அதிகாரிகள் அரசாங்கத்தின் வேட்பாளர்களுக்காக தலையிட்டனர்.  அன்று தொடங்கி இன்று வரை தேர்தல் சட்டங்கள் பாரதூரமான முறையில் மீறப்பட்டு வருகின்றன.
சாதாரண தேர்தல் சட்ட மீறலையும் தாண்டு அது வன்முறையாக மாறியுள்ளது. அதிகாரத்தை இழக்க போகும் நிலையில்தான் வன்முறை மற்றும் வன்முறை பலத்தை பயன்படுத்துவார்கள்.
இதனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகாரத்தை இழந்து வருகிறது என்பது தெளிவாகியுள்ளது.
மக்கள் ஆளும் கட்சியின் வேட்பாளர்களை புறக்கணித்து வருகின்றனர். இதனால், அவர்கள் வெறிப்பிடித்துள்ளனர். இவர்களின் வெறியே ஊவா தேர்தல் களத்தில் வெளியிடப்பட்டு வருகிறது எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
தேர்தல் வன்முறைகளை பொலிஸார் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாக பெப்ரல்  குற்றச்சாட்டு
மொனராகலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைகளை தடுக்க பொலிஸார் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மற்றும் அலுவலகங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும் இது சம்பந்தமாக பொலிஸார் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எதிர்வரும் நாட்களில் இந்த வன்முறைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் 10 அலுவலகங்களும் ஜே.வி.பியின் மூன்று அலுவலகங்களும் அரசாங்கத்தின் வன்முறை குழுக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlqz.html

Geen opmerkingen:

Een reactie posten