மனித வாழ்க்கையில் பள்ளிப்பருவம் மறக்க முடியாதவை. பதின்மூன்று வருடகால பாடசாலை வாழ்க்கையிலேயே ஒரு மாணவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை ஆளுமைப் பண்புகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும் எத்தனையோ மாணவர்கள் தங்கள் பாடசாலைக் காலத்தை வீணடித்துவிட்டு வாழ்கையில் தாளாத துன்பத்திற்கு ஆளாகுவதைக் காணமுடிகிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற தேடல்களை ஒரு புறம் வைத்துக் கொள்ளலாம். நேற்றையதினம் 2014 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப்பரீட்சை நடைபெற்று முடிவுற்றது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் பல்கலைக்கழகம் செல்பவர்கள் யார்? உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் யார்? மூன்று பாடங்களிலும் சித்தியடையாமல் பதின்மூன்று வருட காலத்தை வீணாக்கியவர்கள் யார்? என்ற முடிவுகள் இன்னும் நான்கு மாதங்களில் தெரியவரும்.
அதுவரை பரீட்சை எழுதிய அத்தனை மாணவர்களும் சித்தியடைவோம் என்ற பிரமையில் இருப்பதும் இயல்புடமை.
நேற்றையதினம் பரீட்சை முடிவுற்றதும் யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான பாடசாலை மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாயங்களை ஊற்றிக் கொண்டனர்.
சிலர் சண்டையிட்டுக் கொண்டனர். பரீட்சை முடிவுற்ற போது அரசாங்கம் வழங்கிய இலவச சீருடைகளில் மைதெளித்துக்கொண்டு குறிப்பிட்ட மாணவர்கள் சென்றதைப் பார்த்த போது வேதனை பற்றிக் கொண்டது.
பரீட்சை முடிவுற்றால் மை தெளிப்பது என்ற நடைமுறை எப்போது வந்தது. யார் அதை அறிமுகப்படுத்தினார்கள்.
பரீட்சையில் சித்தியடையக் கூடிய ஒரு மாணவன் அதைச் செய்வானா? அல்லது மூன்று பாடங்களும் சித்தியில்லை என்ற முடிவைப் பெறக் கூடிய மாணவர்கள் பாடசாலைகள் தங்களை வஞ்சித்து விட்டன என்பதை வெளிப்படுத்த மை தெளித்து தங்கள் இதயக் குமுறல்களைக் காட்டினரா? என்ற வினாக்கள் எழுவது நியாயமே.
எதுவாயினும் 13 ஆண்டுகள் அடைக்கலம் தந்த பள்ளிகளை விட்டு வெளியேறும் போது, என் கல்லூரித் தாயே! உன் மடியில் தவழ்ந்து இன்று உன்னிடம் இருந்து விடைபெறும் உன் பிள்ளையாகிய எனக்கு உன் ஆசி என்றும் கிடைக்கட்டும் என்று மனத்தால் வாழ்த்த வேண்டிய மாணவர்கள், தங்கள் மீதும் மை தெளித்து பாடசாலைச் சுவர்களிலும் அதனை வீசியடித்து பாடசாலைகளில் இருக்கக் கூடிய பூச்சாடிகளையும் காலால் உதைத்துவிட்டுப் போவது எந்த வகையில் நியாயம்.
ஓ! நன்றி எனும் பெருங்குணம் எங்கள் மாணவர்களிடம் இம்மியும் இல்லாமல் போயிற்றா? அல்லது அந்த நன்றி உணர்வை பாடசாலைகள் மாணவர்களிடையே ஊட்டத் தவறிவிட்டனவா?
இந்தக் கேள்வி டொனேசன் என்ற கலாசாரத்திற்குள் அமிழ்ந்து போகாமல் தடுத்து உரிய பதிலைத் தேட வேண்டும் என்பதே நம் அவா.
அன்பார்ந்த பெற்றோர்களே! பதின்மூன்று ஆண்டு காலத்தை நிறைவு செய்து, பரீட்சை எழுதி முடித்துவிட்டு உடம்பெல்லாம் சாயம் பூசி பெரு வீதியால் சிரித்து, கதைத்து வருகின்ற உங்கள் பிள்ளைகளிடம் மகனே! இது எதற்கானது என்று ஒரு தடவை கேளுங்கள்.
இந்தக் கேள்வி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமாக்குவதற்கான அடிக்கட்டுப் பசளையாக இருக்கும். பிளீஸ், மறக்காமல் உங்கள் பிள்ளைகளிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடுங்கள்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt7.html
Geen opmerkingen:
Een reactie posten