முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்டு வந்த பெறுமதி மிக்க கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
முல்லைத்தீவு- கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் உள்ள கொக்கிளாய் ஆற்று தொடுவாயில் கடந்த புதன்கிழமை தொடக்கம் இல்மனைட் கலந்த கனிய மணலை மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான இல்மனைட் தொழிற்சாலைக்காக அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு பெறுமதிமிக்க கனிய மணலை அகழ்வதற்காக தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின், அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
இந்நிலையில் நேற்றைய தினம் காலை வடமாகாண சுற்றுச்சூழல் மைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று மணல் அகழப்படுவதனை நேரில் பார்த்துள்ளனர்.
இது விடயமாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
முகத்துவாரம் பகுதியில் மணல் அகழ்வதற்கு பெரிதாக பிரச்சினையில்லை.
முகத்துவாரம் ஊடாக நீர் மாறும்போது அது தானாக நிரப்படும். ஆனால் அதற்கு தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம் அனுமதிப் பத்திரம் வழங்கியிருக்க வேண்டும்.
எனவே நாம் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தபோது கனரக வாகனங்கள் மூலம் மணல் அகழப்பட்டு உழவு இயந்திரங்கள் மூலம் கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட புல்மோட்டை பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
அங்கிருந்தவர்களுடன் நாம் பேசியபோது குறித்த பகுதியில் கடந்த புதன்கிழமை சுமார் 50ற்கும் மேற்பட்ட உழவு இயந்திரச் சுமையளவு மணல் அகழப்பட்டுள்ளது. அதேபோன்று இன்றைய தினமும் (நேற்று) அகழப்பட்டுக் கொண்டிருந்தது.
எம்மைக் கண்டவுடன் கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரம் ஆகியன அந்தப்பகுதியிலிருந்து சென்றுவிட்டன.
பின்னர் இதுவிடயமாக கரைதுறைப்பற்று பிரதேச செயலரை நேரில் சந்தித்து பேசியிருந்தோம். அதன்போது தமக்கும் தெரியாமலேயே குறித்த மணல் அகழ்வு இடம்பெறுவதனை பிரதேச செயலர் ஒத்துக்கொண்டார்.
மேலும் அவர்கள் ஒரு அனுமதிப் பத்திரத்தை காண்பித்துள்ளனர். அந்த அனுமதிப்பத்திரம் 2013ம் ஆண்டு 12ம் மாதத்துடன் நிறைவடைகின்றது.
அந்த அனுமதிப் பத்திரத்தை வைத்தே இதுவரையில் மணல் அகழ்ந்துள்ளனர். ஆனால் இது சட்டத்தை மீறும் ஒரு செயலாகும், இல்மனைட் தொழிற்சாலை மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமானது.
ஆனாலும் அரசாங்கமும் தொழிற்சாலைக்குரிய கனிய மணலை அகழ்வதற்கு தேசிய புவிச்சரித அளவையியல் மற்றும் சுரங்கங்கள் பணிய கத்தின் அனுமதியை பெற்றிருக்கவேண்டும். அவர்கள் மணல் அகழக்கூடிய இடத்தை, அடையாளப்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும்.
மேலும் குறித்த மணல் அகழப்படும் இடம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் வடமாகாணத்தின் எல்லைக்குள் அமைந்துள்ளது. எனவே எங்கள் மாகாணத்திற்குள் இருந்து கனிய வளத்தை எடுக்கும்போது அது தொடர்பில் எமது மாகாணசபைக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பும் மத்திய அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
எனவே கேட்பாரற்ற முறையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிறணைட் கல், மற்றும் கனிய மணல் ஆகியவற்றை மத்திய அரசாங்கம் தொடர்ச்சியாக தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகளுக்காகவும் உரிய அனுமதிப் பத்திரங்கள் மற்றும் நடைமுறைகள் இல்லாமல் அபகரித்து வருகின்ற மையினை நாங்கள் பார்க்கின்றோம்.
இன்றைய தினம் (நேற்று) பிரதேச செயலருடன் பேசிய பின்னர் நாம் குறித்த கனிய மணல் அகழ்வினை தடுத்து நிறுத்துமாறு பிரதேச செயலரை கோரியிருந்தோம். அதற்கமைவாக பிரதேச செயலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதுடன், அந்தப் பகுதிக்கு பொறுப்பான கிராமசேவகர்கள், மற்றும் பொலிஸார் ஆகியோருடன் கொக்கிளாய் பகுதிக்கு மீண்டும் சென்றிருந்தோம்.
ஆனால் அப்போது அங்கே எவ்விதமான வாகனங்களும் இல்லை. வாகனங்கள் மற்றும் ஆட்கள் அப்பகுதியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குள் சென்றுவிட்டனர். எனினும் தொடர்ச்சியாக அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழப்பட்டால் அவர்களை கைது செய்ய பொலிஸாரை நாம் கோரியுள்ளோம்.
இதேவேளை கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் 13வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான, சுமார் 47ஏக்கர் நிலத்தை இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல் பிரசுரமும் அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த காணிகளை சுவீகரிப்பதற்காக காணி உரிமையாளர்களை நிர்ப்பந்தித்து அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmoy.html
Geen opmerkingen:
Een reactie posten