தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

இலங்கையைத் தொடர்ந்தும் இந்தியா நம்பப் போகிறதா?

யாழில் 4 கோடி ரூபா பெறுமதியான காசோலைகள் மோசடி
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 05:40.53 AM GMT ]
யாழில் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் 4 கோடி ரூபா பெறுமதியான காசோலைகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
யாழ் ஆறுகால் மடத்தை சேர்ந்தவரிடம் 4 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா காசோலை மோசடியும், கொக்குவிலைச் சேர்ந்தவரிடம் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடியும், வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவரிடம் 35 இலட்சத்து 66 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடியும், அரசடி கந்தர்  மடத்தினைச் சேர்ந்தவரிடம் 21 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடியும் நீர்வேலியினைச் சேர்ந்தவரிடம் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடியும், கட்டுவன் மேற்கினைச் சேர்ந்தவரிடம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடியும் குப்பிளான் தெற்கினைச் சேர்ந்தவரிடம் 2 இலட்சம் பெறுமதியான காசோலை மோசடியும் இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இக்காசோலை மோசடிகள் அனைத்தும் வியாபார நோக்கின் அடிப்படையிலும், தங்க நகைகள் கொடுக்கல் வாங்கல்களினாலும் இடம் பெற்றுள்ளதனால் அனைவரும் அவதானமாக இருக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகர்  டபிள்யூ.பி.விமலசேன  அறிவுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt2.html
2015 ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல்! திகதியை கணித்து கூறிய ஜோதிடர்கள் (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 06:02.41 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்த அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்த பொருத்தமான தினத்தை ஜோதிடர்கள் கணித்து கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பற்றி அறிவிப்பை வெளியிட முடியும்.
ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவித்த பின்னர், தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடத்தப்படும் தினத்தை அறிவிப்பார்.
படையில் இருந்து தப்பியோடிய இருவர் கைது
பொலிஸார் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் படையில் இருந்து தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரவக்க பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றைய நபர் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடற்படையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குளவிக் கூட்டை கலைத்த குரங்கு!  ஒருவா் பலி
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை போகாவத்தை காட்டுப் பகுதியில் வழிபாட்டு தளம் ஒன்றில் பூசைகளில் ஈடுப்பட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 4 ஆண்களும் 3 பெண்களும் அத்தோடு 4 சிறுவர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது மரத்தில் கட்டியிருந்த குளவி கூட்டை குரங்கு ஒன்று கலைத்ததன் காரணமாகவே, இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் போகாவத்தை பகுதியை சேர்ந்த கிட்னன் சிவபிரகாசம் (வயது - 59) 3 பிள்ளைகளின் தந்தையாவார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சௌமிய மூர்த்தி தொண்டமானின் 101வது பிறந்த நாள் தினநிகழ்வு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 101ஆவது பிறந்த நாள் வைபவம் கொழும்பு பழைய பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இ.தொ.கா பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று நடைபெற்றது.
இவ்வைபவத்தில் இ.தொ.கா தலைவரும், பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம், ஊவா மாகாண சபை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், இ.தொ.கா. நிர்வாகச் செயலாளர் வி.ஜீவானந்தராஜா,மத்திய மாகாண சபை விவசாய அமைச்சர் முத்தையா இராமசாமி, உபதலைவர் வி. இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், இலங்கை இந்திய சமுதாயப் பேரவை முக்கியஸ்தர்கள், இ.தொ.கா முக்கியஸ்தர்கள், கால்நடை அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt3.html
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் அடுத்த வாரம் இந்தியா விஜயம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 06:25.04 AM GMT ]
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
‘நானும் தொழில் அதிபர்கள் குழுவினரும் செப்டம்பர் 4ம் திகதி முதல் 3 நாட்கள் இந்தியா மற்றும் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்கிறோம்.
பிரதமராக நான் இந்தியாவுக்கு செல்வது இது முதல் முறையாகும். தலைநகர் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு சென்று இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக
தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்த பயணம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவுகள் மேம்படும் என்று நம்புகிறேன்’ என அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய பிரதமரின் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt4.html
வில்பத்துக் காட்டில் சஜித் பிரேமதாச? தேடியலையும் ஐ.தே.க
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 06:49.17 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இருக்கும் இடத்தை கண்டுபிடித்துக் கொள்ள முடியாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அந்த கட்சியின் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்குவது குறித்த இறுதித்தீர்மானம் நேற்று எடுக்கப்படவிருந்தது.
இதனடிப்படையில் சஜித் பிரேமதாசவின் நிபந்தனைகள் சம்பந்தமாக பதில் வழங்க அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில், சஜித் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என அவரது மனைவி ஜலனி பிரேமதாசவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தை முற்றாக கைவிட்டு வில்பத்து சரணாலத்தில் கடந்த மூன்று தினங்களாக தங்கியிருப்பதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt5.html
இலங்கையைத் தொடர்ந்தும் இந்தியா நம்பப் போகிறதா?
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 07:01.02 AM GMT ]
ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு எந்த அதிகாரமும் வழங்க முடியாது என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அமைச்சருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து தங்களிடம் இந்தியா இதுவரை எதுவும் கூறவில்லை என்றும், இந்த விஷயத்தில் இந்தியா பொறுப்புடன் செயல்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அண்மையில் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினர்.
அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த பிரதமர், இலங்கையில், தமிழர்கள் சம உரிமை, கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் வாழும் வகையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தார்.
இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்ற போதிலும், பிரதமர் நரேந்திர மோடியின் யோசனை செயல்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரமும், உரிமையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியாவின் யோசனையை நிராகரித்ததுடன், இருக்கும் அதிகாரத்தைக் கொண்டு இலங்கை வடக்கு மாநில நிர்வாகம் ஆட்சி செய்யட்டும் என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருக்கிறார்.
இது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மறுப்பது மட்டுமின்றி இந்தியாவை அவமதிக்கும் செயல்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் யோசனையை இலங்கை நிராகரிப்பது இது முதல் முறையல்ல. முந்தைய ஆட்சிக்காலத்தில், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திய போதெல்லாம், அதை ஏற்றுக்கொள்வதாக இங்கு கூறிவிட்டு இலங்கை சென்ற பின்னர் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என்று கூறுவதை சிங்கள ஆட்சியாளர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்ற ராஜபக்சவுடன் பேச்சு நடத்திய நரேந்திர மோடி, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும்படி வலியுறுத்தினார்.
இதை ராஜபக்ச ஏற்றுக்கொண்ட போதிலும், இலங்கைத் திரும்பிய பின்னர், தமிழர்களுக்கு காவல்துறை உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க முடியாது என்று அறிவித்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்றிருந்தபோதும், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதை ஏற்பதாக சுஷ்மா சுவராஜிடம் ஒப்புக்கொண்ட ராஜபக்ச, இந்தியக்குழு தாயகம் திரும்பியதும், இனப்பிரச்சினையில் இந்தியாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று தமது அமைச்சர்கள் மூலம் அறிவித்தார். இவ்வாறாக இந்தியா நெருக்கடி அளிக்கும்போதெல்லாம் தமிழர்களுக்கு உரிமை வழங்குவதாக கூறுவதையும், பின்னர் மறுப்பதையும் இலங்கை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
இதற்குப் பிறகும் ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு அதிகாரம் வழங்கும் என்று இந்தியா நம்பிக் கொண்டிருக்கப் போகிறதா? அல்லது வேறு வழிகளில் ஈழத்தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போகிறதா? என்பது தான் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப் போவதாக உலகை நம்பவைத்து நயவஞ்சகமாக ஏமாற்றுவதே இலங்கையின் வழக்கம் என்பது தான் வரலாறு நமக்கு சொல்லும் உண்மை ஆகும்.
எனவே, ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ராஜபக்ச அரசுக்கு காலக்கெடு விதித்து அதற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
அதன்படி இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசு தீர்வு காண வில்லை என்றால், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களை இணைத்து தனித்தமிழ் ஈழம் அமைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலமாக உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt6.html

Geen opmerkingen:

Een reactie posten