[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 03:50.46 PM GMT ]
வரலாறு காணாத வறட்சியை வடக்கின் ஏராளம் கிராமங்கள் சந்தித்துள்ளன. என்றும் வற்றாத குளங்களும் கிணறுகளும் ஊற்றுக்களும் வற்றிய நிலையில் தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் அலையும் நிலை.
பசும் நிலங்களாக இருந்தவை கருகி காற்றில் பறக்கின்றன. பொதுக் கிணறுகளும் வற்றிவிட்டன. குறிப்பாக கிளிநொச்சியில் தோட்டங்கள் வெற்றுத்தரைகள் ஆகிவிட்டன.
இருபது முப்பது வருட தென்னைகள் கருகி வட்டோடு, குலையோடு சரிந்துவிட்டன. பெரும் நீர் அட்சய பாத்திராமான இரணைமடுக் குளமும் பாலைவனமாகிவிட்டன. ஒட்டகங்கள் போல கால்நடைகள் நெடுந்தூரம் சென்று தண்ணீருக்கு ஏங்குகின்றன.
குளிப்பதற்கும் குடிப்பதற்கும் அன்றாடம் கிராமத்து மக்கள் படும்பாடு பெரும்பாடு. விவசாயிகள் பெரும் சொத்தழிவுகளை சந்தித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில் வறட்சி எதிர்கொள்வதற்காகன சரியான முகாமைத்துவத்தை மாவட்ட நிர்வாகம் கொண்டிருக்கவில்லை.
அனர்த்த முகாமைத்துவத்தால் ஒதுக்கப்பட்ட நிதி மாவட்ட செயலகத்தால் முடக்கப்பட்டு ஈ.பி.டி.பியின் அரசியல் தலையீட்டுக்கு உள்ளாக்கப்பட்டு சரியாக நீர் பங்கீடு செய்யப்படவில்லை.
அனர்த்த முகாமைத்துவத்தால் ஒதுக்கப்பட்ட நிதிக்கு பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் போன்றவற்றில் வேலை செய்பவர்களும் அவர்களின் உறவினர்களும் ஒப்பந்தங்களுக்கு அமர்த்தப்பட்டு சிலர் தண்ணீரில் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல கிராமங்களில் சிறுநீர் தாங்கிகள் வைக்கப்பட்டு சீரற்ற ஒழுங்கில் நீர் வழங்கப்படுகின்றது. ஏன் குளத்து நீர் கூட குடிப்பதற்கு இத்தகைய அனர்த்த முகாமைத்துவ பணத்தை கொள்ளையடிப்பவர்களால் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபையால் நீர் வழங்கப்பட்ட பகுதிகள் கூட ஈ.பி.டி.பியின் அரசியல் தலையீடுகளால் தடுக்கப்பட்டு அந்த இடங்களுக்கு நீர் வழங்குதாக கூறிக்கொண்டு சீரற்ற நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
வறட்சி நிவாரணத்துக்கு மக்கள் ஏங்குகின்றார்கள். தண்ணீருக்காக ஏங்கும் கிராமங்களுக்கான நீரை வழங்குவதில் புலம்பெயர் மக்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்யத்தவறவில்லை.
சாந்தபுரம், கிருஸ்ணபுரம், மலையாளபுரம், விநாயகபுரம் போன்ற கிராமங்களுக்கு புலம்பெயர் மக்கள் நீர்வழங்கல் மேற்கொள்ள உதவி வருகின்றார்கள்.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் புலம்பெயர் மக்களின் பங்களிப்புடன் கிளிநொச்சி, அக்கராயன் கரித்தாஸ் குடியிருப்பு, கிருஸ்ணபுரம் போன்ற பகுதிகளில் பொதுக்கிணறுகளை அமைத்து வருவரும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புலம் பெயர் மக்கள் முன் தற்போது விரிந்துள்ள பாரிய பணி தண்ணீருக்கு தவிக்கும் தாயக உறவுகளுக்கு தண்ணீர் வழங்குவதும் காலக்கடமையாக விளங்குகின்றது.
லண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் சுவிஸ் அன்பே சிவம் அமைப்பு போன்றவை இன்று அந்த கடமைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnw2.html
கேப்பாபிலவு தமிழ் மக்களின் காணிகளுக்கு உரிமை கோரும் படையினர்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 03:54.00 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 250 ஏக்கர் உறுதிக் காணிகளை படையினர் தம்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த காணிகள் அரசாங்கத்திற்குச் சொந்தமான அரச நிலங்கள் என படையினர் விளக்கமளித்துள்ளதுடன், அந்த 250 ஏக்கரில் 245 ஏக்கர் நிலத்தில் மட்டும் தற்காலிகமாக மக்கள் விவசாயம் செய்யலாம் எனவும் கூறியுள்ளனர்.
2009ம் ஆண்டு போர் காரணமாக கேப்பாபிலவு, சூரிபுரம் உள்ளிட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் அந்தக் கிராமங்களை ஒட்டியதாக காட்டுப்பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் விமான ஓடு தளத்தை அடிப்படையாக கொண்ட மக்களுடைய நிலத்தையும் ஆக்கிரமித்த படையினர் சூரிபுரம் கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மக்களை, வலுக்கட்டாயமாக குடியேற்றினர்.
இந்நிலையில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்களுக்குச் சொந்தமான உறுதிக் காணிகளை சுவீகரிப்பதற்காக முயற்சிக்கப்பட்ட நிலையில் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தமையினால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மக்களுடன் பேசிய படையினர் முன்னர் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை, மக்களுடைய நலனுக்காக புனரமைக்கப்படுவதாகவும், அதற்காக 5 ஏக்கர் நிலம் தேவை எனவும், அந்த நிலத்திற்குரிய மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என கூறியுள்ளனர். மற்றைய மக்கள் மீதமாகவுள்ள 245 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யலாம். ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலமாகும் என கூறியிருக்கின்றனர். படையினரின் இந்த நடவடிக்கையால் நில உரிமையாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnw3.html
Geen opmerkingen:
Een reactie posten