தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

உணர்வுடன் செயற்படும் போதுதான் தமிழன் தமிழனாக வாழுகின்ற உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம்: சீ.யோகேஸ்வரன் பா.உ!



யூதர்கள் ஒற்றுமையை பேணியதன் காரணமாகவே இன்று தங்களுக்கென்று நாடு ஒன்றுடன் வாழ்கின்றனர். அந்த ஒன்றுமைக்கு கொள்கைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். பல தரப்பட்ட கொள்கைகளுடன் ஒன்றாக இருக்க முடியாது.
கொள்கை ஒன்றாக இருந்து ஒரு உணர்வுடன் நாம் செயற்படும் போதுதான் தமிழன் தமிழனாக வாழுகின்ற உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான பா.அரியநேத்திரனின் “தமிழன் தமிழனாக” கவிதை நூலின் அறிமுக விழா மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் தமிழன் தமிழனாக இருக்கின்றானா எவ்வாறாக தமிழன் தமிழனாக இருக்கின்றான் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஒரு இனம் தனக்கு ஒரு அடையாளம் ஒரு மொழி என்று இருக்கின்றது அதனை அவ்வினம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இனத்திற்கும் பண்பாடு பாரம்பரியம் இருக்கின்றது அதனை பேணி பாதுகாக்க வேண்டும். தன் இனத்தின் உணர்வை வெளிப்படுத்துகின்றான் இவ்வாறு நாம் பல வழிகளில் எமது தமிழன் தமிழனாக வாழ்கின்றான என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இந்த நாட்டின் ஒரு தேசிய இனம் அதற்கு ஒரு சுயநிர்ணயம் உண்டு அதற்குரிய தேசியத் தண்மையின் அடிப்படையில் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தனக்கான ஒரு அரசியல் உரிமையை பெற்று வாழ நினைப்பது தவறில்லை. அவ்வாறான ஒரு பாதையில் தமிழினம் தனக்கான ஒரு விடுதலையைக் கோரிச் செல்லும் போது அந்த தமிழ் இனத்தவர் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டுவதே இந்த தமிழன் தமிழனாக என்ற பதிப்பு.
குறிப்பாக எல்லோருக்கும் தெரியும் கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கொரு நாடோ இருப்பிடமோ இல்லாது தவித்துக் கொண்டிருந்த யூதர்கள் பல இடஙற்களில் வாழ்ந்து பல துன்பியல்களை அடைந்தார்கள் அவ்வாறு வாழ்ந்தாலும் அவர்கள் இனத்திற்குரிய அடையாளம் அவர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அவர்கள் பேணினார்கள். ஒற்றுமையைப் பேணினார்கள் அதுவே இன்று அவர்கள் தக்களுக்கான ஒரு நாட்டில் வாழுகின்ற நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.
ஆகவே அந்த ஒற்றுமை எங்களுக்குள்ளும் பரிணமிக்க வேண்டும். அந்த ஒன்றுமைக்கு கொள்கைகளும் ஒன்றாக இருக்க வேண்டும் பல தரப்பட்ட கொள்கைகளுடன் ஒன்றாக இருக்க முடியாது. கொள்கை ஒன்றாக இருந்து ஒரு உணர்வுடன் நாம் செயற்படும் போதுதான் தமிழன் தமிழனாக வாழுகின்ற உரிமையைப் பெற்றுக் கொள்ளலாம்.
சங்க காலத்தில் தமிழன் என்ற ஒரு அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசர் தமிழன் கண்டீர் ஆரியன் கண்டீர் என்று பாடியிருக்கின்றார். அவர் ஆரியர்கள் தமிழர் இல்லை என்பதை சுட்டுகின்றார். அதே போன்று தமிழன் என்பவர் யார் என்பதனை தன்னுடைய பதிகங்களின் மூலம் காட்டியிருக்கின்றார்.
ஆரம்ப காலத்தில் சைவர்கள் தமிழன் என்ற கருத்து இருந்தது. இந்துக்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. இவ்வாறு தமிழர்கள் தங்களுடைய பாரம்பரிய பண்பாடுகளை வளர்த்தார்கள். தமிழ் மொழியை தமது கருதுகோளாகக் கொண்டார்கள். நாங்கள் இன்று எத்தனை பேர் தமிழ் மொழியைப் பேசுகின்றோம் தமிழ் மொழியை எமது தாய்மொழியாகக் கொண்டாலும் கௌரவத்தின் நிமித்தம் மேலைத்தேய மொழிகளை பேசுகின்றோம்.
எமது அண்மைய நாடுகளைப் பார்த்தால் அவை அவற்றின் தாய்மொழிகளைத்தான் பிரதானமாகக் கொள்கின்றார்கள் அவர்கள் தாங்கள் மொழி மீது பற்றுதல் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் மேலைநாட்டு மொழியைத்தான் பேச முற்படுகின்றோம்.
எனவே நாம் எமது மொழியின் புனிதத்தைப் பேண வேண்டும் எமது மொழியின் மக்கியத்துவத்தைப் பேண வேண்டும் எமது கலாச்சாரத்தைப் பேண வேண்டும் எங்களுடைய பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேண வேண்டும். எங்களுக்கென்று ஒரு நிலை ஏற்படும் வகையில் எங்களுக்கான அரசியல் நிலையை நாம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns3.html

Geen opmerkingen:

Een reactie posten