தன் வாயால் கெடும் தவளை
இவ் ஆய்விதழை வெளியிடும் அமெரிக்கத் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திலேயே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான தத்துவார்த்த ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் படைத்துறை அதிகாரிகள் அல்லது படைத்துறைப் புலமையாளர்கள். தவிர ‘பிறிசிம்’ ஆய்விதழின் வாசகர் வட்டத்தில் அமெரிக்கப் பாதுகாப்புத்துறைக் கொள்கை வகுப்பாளர்களும், படைத்துறை அதிகாரிகளுமே அதிக அளவில் இருக்கின்றார்கள்.
இவ்வாறான ஆய்விதழிலேயே கோத்தபாயவின் கட்டுரை வெளிவந்திருந்திருக்கிறது. பனிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கில் படை வலிமையில் தன்னிகரில்லா வல்லரசாகத் திகழும் அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் கொள்கை வகுப்பாளர்களால் வாசிக்கப்படும் ஆய்விதழில் ஓர் இனப்படுகொலையாளின் கட்டுரை வெளிவந்திருப்பது, அவ் இனப்படுகொலையாளிக்கு அமெரிக்கா அங்கீகாரம் அளித்திருப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது இயல்பானதே.
ஆனால் கோத்தபாயவால் எழுதப்பட்ட கட்டுரையின் உள்ளடக்கத்தை நாம் நுணுகி ஆராய்ந்தால் ஒரு விடயம் தெளிவாகப் புலனாகும். ஈழப்பிரச்சினையில் தமது பங்கு பற்றிய சிங்களத்தின் நிலைப்பாட்டை நாடிபிடித்துப் பார்க்கும் நோக்கத்துடனேயே ‘பிறிசிம்’ ஆய்விதழில் கோத்தபாயாவின் கட்டுரைக்கு அமெரிக்கா இடமளித்துள்ளது என்பதுதான் அது. ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு: ‘மற்றவர்கள் கூறுவதைக் கேட்பதை விட குதிரையின் வாயிலிருந்து உண்மையைத் தோண்டியெடுப்பது சாலச்சிறந்தது’ என்பதுதான் அந்தச் சொல்லாடல். இதனைத் தான் கோத்தபாயவின் விடயத்தில் அமெரிக்கா புரிந்துள்ளது.
புலம்பெயர்ந்த ‘புலிகளின்’ பிரிவினைவாதச் சித்தாந்தம், இஸ்லாமிய அடிப்படைவாதம், கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல், போதைப் பொருள் கடத்தல், தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் என சிறீலங்கா எதிர்நோக்கும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் நதிமூலங்கள் பற்றிய அனுமார் வால் போன்ற நீண்ட பட்டியல் ஒன்றைக் கோத்தபாய வெளியிட்டுள்ளார். இவற்றையெல்லாம் அமெரிக்கப் பாதுகாப்புக் கொள்கை வகுப்பாளர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பது வேறு கதை.
ஆனால் சிறீலங்கா எதிர்நோக்கும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் பட்டியலில் மேற்குலகையும், அதிலும் அமெரிக்காவைச் சாடி, கோத்தபாய இணைத்திருப்பது நிச்சயம் அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்குத் தித்திப்பான செய்தியாக இருக்கப் போவதில்லை.
ஈழத்தீவில் தமது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய பொம்மை அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனேயே இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் – மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் பற்றிய சர்ச்சையை அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் கிளப்பி வருவதாகக் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்தே சிங்களம் ‘குய்யோ முறையோ’ என்று கூக்குரல் எழுப்பி வருவது தெரிந்த ஒன்றுதான்.
2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் சிறீலங்காவிற்கு எதிரான முதலாவது தீர்மானம் கொண்டு வரப்பட்ட பொழுது, ‘ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டே மனித உரிமைகள் விவகாரத்தை மேற்குலகம் கையில் எடுத்துள்ளது’ என்று ஜெனீவாவிற்கான அன்றைய சிங்களத் தூதுவர் தாமரா குணநாயகம் குற்றம் சுமத்தியிருந்தார். இதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு பாதுகாப்பு விவகார மாநாடுகளில் கலந்து கொண்ட பொழுது இதே கருத்தைக் கோத்தபாயவும் வெளியிட்டு வந்தார்.
இப்பொழுது இதே கருத்தையே ‘பிறிசிம்’ ஆய்விதழில் கோத்தபாய வெளியிட்டுள்ளார். சாராம்சத்தில் மேற்குலகைச் சாடிக் கோத்தபாய வெளியிட்டிருக்கும் கருத்து இதுதான்: “அண்மைய தசாப்தங்களில் சீனாவினதும், இந்தியாவினதும் வளர்ச்சியின் விளைவாக உலக விவகாரங்களில் முழு ஆசியப் பிராந்தியமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. இந்து சமுத்திரத்தில் சிறீலங்கா வகிக்கும் பூகோள கேந்திர முக்கியத்துவம் அதன் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.
எனவே தமது நலன்களுடன் ஒத்துப் போகக்கூடிய அரசாங்கத்தை சிறீலங்காவின் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி, அதன் மூலம் தன்னிச்சையான போக்கில் சிறீலங்கா செல்ல முடியாத சூழலை ஏற்படுத்துவதற்கு சில மேற்குலக வல்லரசுகள் முற்படக்கூடும் எனக் கருத முடிகின்றது. தவிர சீனாவின் பொருண்மிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவும் சிறீலங்காவைப் பாதிக்கும். நடந்து முடிந்த யுத்தத்தில் இந்தியா, நோர்வே, அமெரிக்கா ஆகிய நாடுகள் வகித்த பாத்திரங்கள் காரணமாக சிறீலங்காவின் உள்ளக விவகாரங்கள் அனைத்துலக மயப்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு முக்கியமாகும்.”
இவ்வாறு மேற்குலகிடமிருந்து, அதுவும் அமெரிக்காவிடமிருந்து, சிறீலங்காவிற்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களால் வாசிக்கப்படும் ஆய்விதழில் கட்டுரை எழுதியதன் மூலம் தன்னை உண்மையான சிங்கள தேசபக்தனாக நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை கோத்தபாய ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது வேறு விடயம். ஆனால் கோத்தபாயவின் கருத்துக்களை அக்குவேறு ஆணிவேறாக நுணுகி ஆராயப் போகும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் சில விடயங்களை ஐயம்திரிபறப் புரிந்து கொள்வார்கள்.
அவை இவைதான்: “அமெரிக்காவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் எண்ணம் இன்றைய சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கிடையாது. ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தீவைத் தனது பிடியில் வைத்திருந்து, இந்து சமுத்திரத்தின் வழியிலான கடல்வழிப் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்தி வந்த பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் நவ ஏகாதிபத்திய வாரிசாக அமெரிக்காவை சிங்கள ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள்.
இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கிய உறவைப் பேணுவதை சிங்கள ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசைத் துடைத்தழித்து சிங்களம் ஈட்டிய இராணுவ வெற்றிக்குக் காலாக நின்ற இந்தியா, நோர்வே, அமெரிக்கா ஆகியவற்றை நட்பு நாடுகளாக சிங்களம் பார்க்கவில்லை.”
இதனை விடத் தனது கட்டுரையில் கோத்தபாய குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு விடயமும் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்குத் தித்திப்பான செய்தியாக இருக்கப் போவதில்லை. துனிசியா, லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் நிகழ்ந்த ‘அரபு வசந்தம்’ என்ற மகுடத்திலான மக்கள் புரட்சிகளைப் போன்று ஈழத்தீவிலும் முகநூல், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் புரட்சிகள் தூண்டிவிடப்படக் கூடும் என்பதுதான் அந்தக் கருத்து. குறிப்பிட்ட மூன்று மத்திய கிழக்கு ‘வட ஆபிரிக்க நாடுகளிலும் நிகழ்ந்த மக்கள் புரட்சிகளின் பின்னணியில் அமெரிக்கா இருந்தது பற்றிய ஆதாரங்கள் அண்மைக் காலங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும் குறிப்பாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே இப் புரட்சிகளை அமெரிக்கா தூண்டி விட்டமைக்கான ஆதாரங்களும் மெல்ல மெல்லக் கசிந்து வருகின்றன.
இவ்வாறான பின்புலத்தில் இதேபோன்ற மக்கள் புரட்சிகள் சிறீலங்காவிலும் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை கோத்தபாய வெளியிட்டிருப்பதானது, அமெரிக்காவை சந்தேகக் கண் கொண்டு சிங்களம் பார்க்கின்றது என்பதையே பட்டவர்த்தனமாக்கி நிற்கின்றது.
உலக முதலாளித்துவத்தின் விரிவாக்கத்திற்கான கதவாக விளங்கும் திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளை ஈழத்தீவில் நிலைநாட்டும் நோக்கத்துடனேயே ஈழப்பிரச்சினையில் மேற்குலகம் கரிசனை காட்டி வருகின்றது என்பது இப்பொழுது மெல்ல மெல்ல நிதர்சனமாகி வருகிறது.
அந்த வகையில் அன்று திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளைத் தூக்கிப் பிடித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவையும், சந்திரிகா அம்மையாரையும், ரணிலையும் ஆதரித்து நின்ற மேற்குலகம், இன்று அரசுசார் பொருண்மியக் கொள்கைகளை அமுல்படுத்தி வரும் மகிந்தரை ஆட்சியிலிருந்து தூக்கியெறிவதற்காகவே போர்க்குற்றம், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், மனித உரிமைகள் போன்ற சுலோகங்களை எழுப்புகின்றது என்பதைப் புரிந்து கொள்வது கடினமானது அல்ல.
மேற்குலகின் இந்த அணுகுமுறையை ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள். இதுபற்றி 1994ஆம் ஆண்டு ‘விடுதலைப் புலிகள்’ ஏட்டின் மாசி மாத இதழில் எழுதிய பத்தியன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தத்துவாசிரியருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தார்: ‘இலங்கையில் பெருமளவு முதலீடு செய்வதற்கோ, அன்றி இத் தீவை உலக முதலாளியத்தின் ஒரு வர்த்தக வலயமாக மாற்றுவதற்கோ, முடிவில்லாமல் தொடரும் இப்போர் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்க முயலுமாறு மேற்குலகம் சிறீலங்காவுக்கு அழுத்தம் போடுகிறது.’
அமெரிக்காவிடமிருந்தும், ஏனைய மேற்குலக நாடுகளிடமிருந்து தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை சிறீலங்கா எதிர்நோக்குவதாக இப்பொழுது கோத்தபாய குறிப்பிட்டிருப்பதானது, உலக முதலாளித்துவத்தின் விரிவாக்கம் ஈழத்தீவில் முழுமையாக இடம்பெறுவதற்கு இடமளிக்கும் எண்ணம் சிங்களத்திற்குக் கிடையாது என்ற செய்தியையே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. இது சிங்களத்தின் விடயத்தில் எதிர்காலத்தில் கடும்போக்கான நிலைப்பாட்டை அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் எடுப்பதற்கான வாய்ப்புக்களைத் திறந்து விட்டுள்ளது எனலாம்.
‘தவளை தன் வாயால் கெடும்’ என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. இதனை சிங்களத்தின் விடயத்தில் நிரூபிக்கும் வகையில் கோத்தபாயவால் எழுதப்பட்டிருக்கும் கட்டுரை அமைந்திருக்கிறது.
2005ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைக்கு விளக்கமளித்து உரையாற்றும் பொழுது ஒரு கருத்தைத் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் குறிப்பிட்டிருந்தார்: ‘சிங்களவனுக்கு மேல்மாடியில் (அதாவது தலையில்) ஒன்றும் இல்லை’ என்பதுதான் அந்தக் கருத்து. அக்கருத்தை இப்பொழுது கோத்தபாய உண்மையாக்கி விட்டார்!
ஆக என்ன நோக்கத்திற்காக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணிலை மண்கவ்வ வைத்துச் சிங்களத்தின் ஆட்சிக்கட்டிலில் மகிந்தர் ஏறுவதற்குத் தமிழீழ தேசியத் தலைவர் இடமளித்தாரோ, அந்த நோக்கத்தை இப்பொழுது மகிந்தரும், அவரது சகோதரர்களும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பதைத்தான் கோத்தபாயவின் கட்டுரை உணர்த்துகிறது.
கலாநிதி சேரமான்
http://www.jvpnews.com/srilanka/80693.html
சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
இலங்கை அரசாங்கத்திடமும் ஐ.நா. மனித உரிமைகளின் உறுப்பு நாடுகளிடமும் இவ்வாறு கேட்டுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமை பேரவையால் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணைகளில் தகவல் கொடுக்கக்கூடியவர்களுக்கு எதிரான மிரட்டல்கள், பயமுறுத்தல்கள், பழிவாங்கல்கள் பற்றி அறியாது நாம் அச்சம் கொண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான கடிதத்தை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ‘பவுடெலெயர் என்டொங் எல்லா’வுக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவுக்கும் அனுப்பிவைத்துள்ளது.
ஐ.நாவுடன் ஒத்துழைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கைளிலிருந்து மனித உரிமை பாதுகாவலர்களையும் வேறு தனிப்பட்டவர்களையும பாதுகாக்க தேவையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மனித உரிமையிடமும் கேட்டுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/80690.html
Geen opmerkingen:
Een reactie posten