முதலில் சேர் டெஸ்மன்ட டி சில்வா தலைமையில் மூன்று பேரைக் கொண்டதாக இந்த ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டது. பின்னர் அதில் அவ்டாஸ் கௌஷாலும் பாகிஸ்தான் சட்ட நிபுணர் அமீர் பிலால் சூபியும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நியமனம் உறுதியாகி சில நாட்கள் தான் ஆகின்றன. ஆனால் முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு மறைப்பது போலவே அவ்டாஸ் கௌஷால் அதிகளவில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளார்.
அவரது பெயர் வெளிவந்த நாளில் இருந்து தெரிவித்து வரும் கருத்துக்களைத் தொடர்ச்சியாக அவதானிக்கும் எவருக்கும் அவ்டாஸ் கௌஷால் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக இந்த விவகாரத்தைக் கையாள்கிறாரோ என்ற சந்தேகமே எழும். அந்தளவுக்கு அவரது கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
அதைவிட, அவர் தனக்கான பணி என்னவென்று சரிவர அறிந்திருக்கிறாரா? தனது எல்லைகளை அவர் சரியாக உணர்ந்திருக்கிறாரா? இலங்கைப் பிரச்சினையை குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறாரா? என்பன போன்றெல்லாம் கேள்விகளை எழுப்பும் நிலை இப்போது உருவாகியுள்ளது.
முதலில் அவர், தமிழர்களுடன் இணக்கப்பாடு ஒன்றுக்கு செல்லுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குப் பரிந்துரை செய்வேன் என்றார்.
பின்னர், 13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டு வடக்கு மாகாண சபை முரண்டு பிடிப்பதால் தான் எல்லாமே முடங்கிப் போயுள்ளன என்றார்.
அதையடுத்து பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாண சபை கோரக்கூடாது என்றார்.
அத்துடன் தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதை மறந்துவிட்டு, தாம் இப்போது இலங்கை குடிமக்கள் என்பதை உணர்ந்து நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதித்துச் செயற்பட வேண்டும் என்கிறார்.
இலங்கை இறைமையை இந்தியா மதிக்க வேண்டும், அதற்கு உத்தரவிட முடியாது, ஆலோசனை மட்டும் தான் கூற முடியும். தலையீடு செய்ய முடியாது என்கிறார்.
தான் இலங்கைக்கு மட்டும் நண்பரல்ல என்றும், யாழ்ப்பாணத்தவர்களுக்கும் கூட நண்பராக இருப்பதாக கௌஷால் பிபிசி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் கௌஷால் வெளியிடும் கருத்துக்கள் ஜனாதிபதியின் நண்பர் என்ற வகையில் வெளியாகிறதா? பக்கச்சார்பற்ற முறையில் செயற்பட வேண்டிய ஒரு ஆணைக்குழுவின் பொறுப்பு வாய்ந்த ஆலோசகர் என்ற வகையில் வெளியாகிறதா? இந்திய மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் என்ற நிலையில் இருந்து வெளிவருகிறதா? என்று பார்க்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் இவை எல்லாம் ஒத்துப் போகக் கூடியவையல்ல.
ஜனாதிபதியின் நண்பராக இருக்கும் ஒருவரால், எப்படி பக்கச்சார்பற்ற ஓர் ஆணைக்குழுவின் ஆலோசகராக இருக்க முடியும்? அத்தகைய ஆலோசகர், தனக்கு வழங்கப்பட்ட பணி எல்லைக்கு அப்பால் சென்று எவ்வாறு அரசியல் பேச முடியும்?
இலங்கையின் உள்நாட்டு விவகாரம் குறித்து பேசும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை என்று வாதிடும் அவரால், எப்படி இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேச முடியும்? கருத்துக் கூற முடியும்?
இவையெல்லாம் முரண்பாடுகள் மிக்க சர்ச்சைக்குரிய விடயங்கள்.
இதனால் தான் அவ்டாஸ் கௌஷால் குறித்த கேள்விகள் இப்போது எழத் தொடங்கியிருக்கின்றன.
அவ்டாஸ் கௌஷாலின் கருத்துக்களை தெளிவாக அவதானித்து வரும் ஒருவருக்கு, அவர் இலங்கைப் பிரச்சினையின் தாற்பரியத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதை உணர முடியும்.
குறிப்பாக 13வது திருத்தச்சட்டம், அவற்றின் அதிகாரங்கள், அது பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் நிலை குறித்தெல்லாம் அவருக்கு எந்த அடிப்படை அறிவும் இருப்பதாகவே தெரியவில்லை.
அவ்வாறு தெரிந்திருந்தால் 13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாகவோ, பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டு வடக்கு மாகாணசபை முரண்டு பிடிப்பதால் தான் முடங்கிப் போயுள்ளதாகவோ நிச்சயம் அவர், கருத்து வெளியிட்டிருக்க மாட்டார்.
முதலில் அவருக்கு, இலங்கையில் என்னபணி தரப்பட்டுள்ளது என்பதே அவருக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
ஏனென்றால் அவருக்கான பணியின் எல்லையைக் கடந்து அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறார், அதற்குப் பரிந்துரை செய்வது குறித்துப் பேசுகிறார், பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்கிறார்.
இவையெல்லாம் அவரது பணிகளல்ல. காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவது மட்டும் தான் அவரது பணி.
அதுவும் கூட ஆணைக்குழுவுக்குத் தேவைப்பட்டால் மட்டும் ஆலோசனை கூற முடியுமே தவிர வேறெந்த தலையீடும் செய்ய முடியாது.
ஆனால் கௌஷால் ஏதோ, முன்னர் எரிக் சொல்ஹெய்மின் இடத்துக்கு, நியமிக்கப்பட்டு விட்டது போன்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வருகிறார்.
விருதுகள் பல பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்த போதிலும், பொறுப்பு மற்றும் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்து கொண்ட ஒருவராக அவர் நடந்து கொள்ளவில்லை.
இதனால் தான் தமிழர்களுடன் இணங்கிச் செயற்படுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வலியுறுத்துவேன் என்று, அவர் ஆரம்பத்திலேயே கூறிய போது அவர் எல்லையை மீறிப் பேசுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து சலசலப்புகள் எழுந்தன.
இப்போது அவரது கருத்துக்கள் தமிழர் தரப்பை வெகுவாகவே சினங்கொள்ள வைக்கக் கூடியவை என்பதில் சந்தேகமில்லை.ஏனென்றால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், தம்மை வந்தேறு குடிகளாக ஒருபோதும் கருதியவர்களல்ல.
அவர்கள் தம்மைத் தாமே, ஏன், இலங்கையையே ஆட்சி செய்த வரலாறு இருக்கிறது.
இவையெல்லாவற்றுக்கும் அப்பால், தமிழர்கள் வந்தேறு குடிகளாக நினைத்துக் கொள்ளக் கூடாது என்ற கௌஷாலின் அறிவுரை விஷமத்தனமானது.
இலங்கையர்கள் என்ற நினைப்பில் இருந்து இங்குள்ள தமிழர்கள் ஒருபோதும் மாறவுமில்லை, தாம் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று ஒருபோதும் நினைத்ததுமில்லை.
இலங்கையின் சட்டத்தையும் அரசியலமைப்பையும் மதிக்க வேண்டும் என்று அறிவுரை கூறும் கௌஷாலுக்கு இலங்கையின் சட்டவாக்கத்துறையில் தமிழர்கள் எவ்வளவு பங்களித்துள்ளனர் என்பது தெரியாது போலும்.
அதைவிட, 13வது திருத்தச்சட்டம் குறித்து அதிகம் பேசும் அவருக்கு அதன் உள்ளடக்கம் என்னவென்றே தெரியாதுள்ளது. அதனால்தான் அவர் 13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி விட்டதாக இலங்கை அரசாங்கமே கூறவில்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று அரசாங்கமே திட்டவட்டமாக கூறுகிறது.
அதைவிட இந்திய அரசாங்கம் கூட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. ஆனால் கௌஷால் எல்லாமே நடைமுறைப் படுத்தப்பட்டு விட்டன, பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாணசபை கோருவதால் தான் பிரச்சினை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
13வது திருத்தச்சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது அவருக்குத் தெரியவில்லை. அதனால்தான் வடக்கு மாகாணசபை புதிதாக ஏதோவொன்றைக் கேட்பது போலவும், அதனால் தான் முடக்க நிலை ஏற்பட்டது போன்றும் கருத்துக் கூறியிருக்கிறார். இவை தவிர, தமிழர்கள் பொலிஸ் அதிகாரங்களைக் கோர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையானது.
அதுவும், இலங்கைக்கு இந்தியா உத்தரவிட முடியாது. அதன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறியுள்ள அவரே, பொலிஸ் அதிகாரங்களைக் கோர முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
தமிழர்கள் ஒரு அதிகாரத்தைக் கோர முடியாது என்று தீர்ப்புக் கூறுவதற்கு இவர் யார்?
ஒரு அதிகாரத்துக்காக போராடுவது ஒரு இனத்தின், மக்களின் விவகாரம், வெளியே இருந்து வரும் கௌஷாலுக்கு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரிக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அதைவிட இந்தியா தலையிட முடியாது என்று கூறிவிட்டு, அவர் மட்டும் தலையீடு செய்ய முனைவது வேடிக்கையானது.
பொலிஸ் அதிகாரங்களை இந்திய மாநிலங்கள் அனுபவிக்கலாம் என்றால், இலங்கையிலுள்ள மாகாணங்கள் அதனை ஏன் கோரக் கூடாது என்று கௌஷால் போன்றவர்களால் ஒரு காரணத்தைக் கூற முடியுமா?
இவையனைத்தையும் ஒன்றுதிரட்டிப் பார்க்கையில், கௌஷால் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை கூற வந்துள்ளவரா அல்லது, தமிழர்களை எப்படி நசுக்கலாம் என்று அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற வந்துள்ளாரா என்றே கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
இதுபோன்ற கருத்துக்களை அவர் தொடர்ந்து வெளியிடுவாரேயானால், ஜனாதிபதி ஆணைக்குழு மீது தமிழர்கள் கொண்டுள்ள கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தான் சிதைந்து போகும்.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo0.html
Geen opmerkingen:
Een reactie posten