தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

தனக்குத் தானே மண் வாரிய அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி!

போரோபுதூர் விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்காவே பொறுப்பு: தேசிய சுதந்திர முன்னணி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 11:22.58 AM GMT ]
உலகில் மிகப் பெரிய பௌத்த விகாரை என கருதப்படும் இந்தோனேசியாவின் போரோபுதூர் (Borobudur) விகாரை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை உருவாக்கி போஷித்து வளர்த்த அமெரிக்காவே பொறுப்புக் கூறவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த முன்னணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸாமில் இதனை கூறியுள்ளார்.
ஸ்லெட்போர்ம் இணையத்தளம் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக உலகில் மிகப் பெரிய பௌத்த விகாரையான போரோபுதூர் விகாரை மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அடிப்படைவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனை இலங்கையில் மாத்திரமல்லாது உலகில் சமாதானத்தையும் சகவாழ்வையும் விரும்பும் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளை மதிக்கும் பௌத்தர்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரின் விமர்சனங்களுக்கு உள்ளானது.
அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகள் ஈராக்கின் எண்ணெய் வளத்தை கொள்ளையிட அந்த நாட்டை ஆக்கிரமித்தன.
சதாம் உசேனை தூக்கிலிட்டுக் கொலை செய்தனர். போராளிகளுக்கு நவீன ஆயுதங்கள், வாகனங்களை கொடுத்து போஷித்து வளர்த்து சதாம் உசேனை கொலை செய்தனர்.
அமெரிக்கா, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு உதவிகளை வழங்கிய விதம் உலகத்திற்கு ஏற்கனவே வெட்டவெளிச்சமாகியது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அமெரிக்காவின் அடிப்படைவாத உருவாக்கம் என்பது மிகத் தெளிவானது எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அராபிய கலாச்சாரம் வேண்டாம்: தேசிய சுதந்திர முன்னணி
இலங்கையின் முஸ்லிம்கள் அராபிய கலாச்சாரத்தை பின்பற்றுவதால் சமூக பிரிவினைகள் ஏற்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாம், இலங்கைக்கு அராபியாவில் இருந்து வரவில்லை. இந்தியா மற்றும் ஆசியாவில் இருந்தே வந்தது.
இந்தநிலையில் முஸ்லிம் பெண் ஒருவர், தமது தலையை சாரியின் மூலமே மறைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.
எனினும் இன்று பலர் “அபாயா” என்ற ஆடையை கொண்டு தமது தலையை மறைக்கின்றனர்.
இது இலங்கையின் சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடும் என்று முஸம்மில் குறிப்பிட்டார். சில குழுக்கள் அராபிய நாகரீகத்தை இலங்கையில் புகுத்த முயற்சிக்கின்றன.
எனவே ஈராக்கில் அவர்கள் செய்ததை இலங்கையில் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று முஸம்மில் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp6.html

தனக்குத் தானே மண் வாரிய அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 11:42.47 AM GMT ]
இந்திய அரசியலில் கோமாளி என்று பொதுவாக வர்ணிக்கப்படும் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையிலும் அவ்வாறே கருதப்படும் நிலையொன்றை தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள, சுப்பிரமணியன் சுவாமி, வெளியிட்டு வரும் கருத்துக்கள், இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி வருவது வெளிப்படை.
புதுடில்லியில் பா.ஜ.க. ஆட்சியமைத்த பின்னர், கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டு முறை இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட போதும், வெளியிட்ட பல கருத்துக்கள் அவரது கண்முன்பாகவே பொய்யாகிப் போயின.
சுப்பிரமணியன் சுவாமி தன்னை ஒரு மாபெரும் இந்தியத் தேசியவாதியாக காட்டிக் கொண்டு, வெளியிட்டு வரும் கருத்துக்கள், இந்திய மத்திய அரசுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடியவை.
அதனால் தான், எந்த அதிகாரமுமில்லாத சுப்பிரமணியன் சுவாமி இலங்கை தொடர்பாகவும், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாகவும், வெளியிட்டு வரும் கருத்துகள் குறித்து இந்திய அரசாங்கம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று சர்வதேச ஊடகம் ஒன்று எச்சரித்திருந்தது.
தனது கொழும்பு பயணங்களின் போது சுப்பிரமணியன் சுவாமி, பல ஊடகங்களுக்கு நீண்ட பேட்டிகளை கொடுத்திருந்தார். அவை எல்லாவற்றிலும், தான் இந்திய அரசின் அதிகாரம் மிக்க ஒருவர் போலவும் முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளவர் போலவும் கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமரோ, வெளிவிவகார அமைச்சரோ கூட இதுபோன்று நேரடியாகப் பதிலளிக்க மாட்டார்கள். ஆனால், சுப்பிரமணியன் சுவாமிக்கு, எந்தப் பொறுப்பும் இல்லாததால், அவரால் ஒரு நாடக நடிகரைப் போன்று தானே அதிகாரம் மிக்க நபர் என்று கருதிக் கொண்டு, கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
மிக அண்மைக்காலத்தில், அவர் வெளியிட்ட சில தகவல்களும் கருத்துக்களும், சர்ச்சைகளை மட்டும் ஏற்படுத்தவில்லை, கோமாளித்தனமாகவும் இருந்தன.
“மோடி ஆட்சியின் கீழ் இந்தியா" என்ற தலைப்பில் கொழும்பில் நிகழ்த்திய உரையில், இலங்கை - இந்திய உறவுகளில் இருந்து, தமிழ்நாட்டையும், தமிழர் பிரச்சினையையும் நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
அதாவது, இந்த இரண்டு விவகாரங்களையும் மறந்துவிட்டு, இரு நாடுகளும் உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்பதே அவரது கருத்தின் அடிப்படை. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது.
ஏனென்றால், தமிழர் பிரச்சினை, தமிழ்நாடு, இந்தியா, இலங்கை இந்த நான்குமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை ஒதுக்கி விட்டு, இரண்டு நாடுகளும் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதென்பது, முடியாத காரியம். அவ்வாறானதொரு முயற்சியில் இறங்கினால், அது, தமிழ்நாட்டையும், இலங்கைத் தமிழர் பிரச்சினையையும், தனிமைப்படுத்துவதாக அமையும்.
அது புதிதான பிரிவினைக் கோரிக்கைகளுக்கும் வழிவிடலாம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தனிநாடு அமைவதை இந்தியா எதிர்ப்பதற்குக் காரணம், தமது நாட்டிலும், அத்தகைய பிரிவினைக் கோரிக்கைகளைப் பலப்படுத்திவிடும் என்பதேயாகும்.
சுப்பிரமணியன் சுவாமியின் யோசனைப்படி நடந்து கொண்டால், இந்தியா எதையிட்டு அஞ்சுகிறதோ, அது தானாகவே உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. இலங்கை இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்குகளில், இப்போது சுப்பிரமணியன் சுவாமி தவிர்க்க முடியாத ஒரு பிரமுகராகி விட்டார்.
காரணம், அவர் தமிழர் விரோதக் கருத்துக்களை தாராளமாகவே அள்ளிவீசக் கூடியவர். சுப்பிரமணியன் சுவாமி மூலம் தமிழர் விரோதக் கருத்துக்கள் வெளிப்படுவதையிட்டு அரசாங்கத்துக்குச் சங்கடமில்லை.
ஆனால் இதையே சிங்கள புலமையாளர் ஒருவரைக் கொண்டு வெளியிட்டால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்படும். எனவே தான், இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்குகளில் சுப்பிரமணியன் சுவாமி நிரந்தரமான விருந்தினராகி விட்டார்.
இம்முறை, பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பிய போது, தான் அதில் பங்கேற்றே தீருவேன் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் அடித்துக் கூறினார்.
அதுமட்டுமன்றி, இந்தக் கருத்தரங்கில் தான், இலங்கைக்கு எந்த நாடு எந்தளவு இராணுவ உதவிகளை செய்யப் போகிறது என்று தீர்மானிக்கப்படும் என்றும், சீனா என்ன இராணுவ உதவிகளை வழங்கப் போகிறது என்று கண்காணிப்பதற்காக தான் அங்கு சென்றேயாக வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கின் நோக்கத்தை அவர் விளங்கிக் கொள்ளவில்லையா அல்லது தமிழ்நாட்டுக்காரர்கள் எதுவும் தெரியாத முட்டாள்கள் என்று அவர் நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
ஏனென்றால், இலங்கை இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கும், இலங்கைக்கு அளிக்கப்படும் வெளிநாட்டு இராணுவ உதவிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
சீன – இலங்கை உறவுகள் குறித்து இந்தியா அஞ்சவில்லை என்று கூறும் சுப்பிரமணியன் சுவாமி, இலங்கைக்கு சீனா என்ன உதவிகளை வழங்கப் போகிறது என்று எதற்காக கண்காணிக்க வேண்டும்?
அதுமட்டுமன்றி, இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்று பலமுறை கூறிவிட்ட சுப்பிரமணியன் சுவாமியே, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நிகழ்த்திய உரையின் போது, நோர்வேஜியர்களுக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்கக் கூடாது என்று பகிரங்கமாக கூறினார்.
அது நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள தனிப்பட்ட விவகாரம். அது இருநாடுகளினதும் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான விவகாரம். அதில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை சுப்பிரமணியன் சுவாமிக்கு யார் கொடுத்தது?
இதுமட்டுமல்ல, பாதுகாப்புக் கருத்தரங்கில் சீனப் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, இலங்கையுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு குறித்து இந்தியா கவலை கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
அதுவும், தன்னை இந்திய அரசின் அதிகாரபூர்வ பிரதிநிதி போலக் கருதியே அவர் அப்படிக் கூறியிருந்தார். ஆனால், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து இந்தியா கடுமையான கவலை கொண்டுள்ளது என்பதும், அதனை முறியடிப்பதற்கு கடுமையான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதும் வெளிப்படையான உண்மை.
உதாரணத்துக்கு, சீன தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவும் கொழும்பிலுள்ள தனது தூதரகத்தில் பாதுகாப்பு அலகை விரிவுபடுத்தி புதிதாக கேர்ணல் குரிந்தர் எஸ் கிளேயர் என்ற இராணுவ புலனாய்வு அதிகாரியை பிரதி பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளது.
இப்படியான நிலையில், சீனாவின் தலையீடு குறித்து இந்தியா கவலை கொள்ளவில்லை என்று சுவாமி கூறியது சீனப் பிரதிநிதிகளுக்கே ஆச்சரியமான விடயமாகத்தான் இருந்திருக்கும். எனினும், சுவாமி இந்திய அரசியலில் ஒரு கோமாளியாகவே கருதப்படுபவர் என்பது சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னரைப் போல நினைத்த மாத்திரத்தில், இந்தியப் பிரதமரைச் சந்திக்க முடியாது, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டும் தான்,  நரேந்திர மோடி கூட்டமைப்பைச் சந்திப்பார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி, தனக்குத்தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்.
அவர் அவ்வாறு கூறியது கடந்த 20ம் திகதி. மறுநாள் 21ம் திகதி கூட்டமைப்பு புதுடில்லி செல்லும் அறிவிப்பு வெளியானது. அதுவும், இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் அவர்கள் அங்கு சென்றனர்.
இந்தியப் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகாரச் செயலர் என்று அனைத்து உயர்மட்டத் தலைவர்கள் அதிகாரிகளும் அவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதி பெறப்படவில்லை. சுப்பிரமணியன் சுவாமி ஒரு கோமாளிதான் என்பதை, இலங்கை அரசாங்கமும், சிங்கள, ஆங்கில ஊடகங்களும், தெளிவாக உணர்ந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் இது தான்.
இந்திய அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே, சுவாமி வெளியிட்ட கருத்து அவருக்கே ஆப்பாக அமைந்து விட்டது. ஆனால், அதுபற்றியெல்லாம் சுவாமி அலட்டிக் கொள்ளவில்லை.
ஏனென்றால், இதுபோன்று மூக்குடைபட்டுக் கொள்வது அவருக்கு ஒன்றும் புதியதல்ல. அதேவேளை, சுப்பிரமணியன் சுவாமி இந்திய அரசியலில் என்ன பங்கை வகிக்கிறார்?
இந்திய அரசாங்கத்தில் அவரது நிலை என்ன? என்ற கேள்விக்கு இடமேதுமின்றி, அவரது தமிழர் விரோதக் கருத்துக்களை குதூகலத்துடன் வெளியிட்ட ஊடகங்கள் அனைத்துக்கும் இப்போது கூச்சம் கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்துக்கள் அனைத்தையும் புறக்கணிக்க முடியாது. அதேவேளை, அவர் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தையும், இந்திய அரசின் நிலை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
சுவாமி தனது கருத்தையே இந்திய அரசின் நிலைப்பாடு என்பது போல வெளியிடுபவர். இந்த உண்மையை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் புரிந்துகொள்ளாமல் போனதால் தான், அவருக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தன.
இப்போது சுவாமியின் உயரம், எடை என்னவென்பதை சிங்கள மக்களும், இலங்கை அரசாங்கமும் நன்றாகவே உணர்ந்திருக்கும்.
எனவே, இனிமேல் அவர், இலங்கைக்கு அடிக்கடி வந்து செல்வதும் சரி, ஊடகங்கள் அவருக்கு அளிக்கும் முக்கியத்துவமும் சரி குறைந்து போய் விடும்.
ஏனென்றால், அவர் தன்னை ஒரு அரசியல் கோமாளி என்பதை இலங்கை மக்களுக்கும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp7.html

Geen opmerkingen:

Een reactie posten