தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

தமிழர் மறக்கும் ‘தட்டிவான்’!

ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்தியவர் ஜோதிடராக மாறியுள்ளார்

தென்பகுதி நகரமான காலியில் உள்ள பூசாவில் பிறந்த ரோகண, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதம மந்திரியை தாக்குவதற்கு தீர்மானித்த அந்த துரதிருஷ்ட நாளான 30 ஜூலை 1987 வரும்வரை ஸ்ரீலங்கா கடற்படையில் ஒரு சாதாரண அங்கத்தவராகவே இருந்தார். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீலங்காமீது ஆக்கிரமிப்பு செய்து, அப்போதிருந்த அரசாங்கத்தை 13வது திருத்தத்தை ஒப்பமிட வைத்த முறையையிட்டு ரோகண சந்தேகத்துக்கு இடமின்றி சீற்றம் கொண்டிருந்தார்.
கோபமும் மற்றும் ஏமாற்றமும் அடைந்தது
இந்தியா ஐநா மாநாட்டு தீர்மானத்தை மீறி வடக்கிலிருந்த மக்களுக்கு பருப்பு மற்றும் பங்கீட்டுப் பொருட்களை விமானமூலம் போட்டபொழுது, அவர் காங்கேசன்துறைப் பகுதியில் பி525 எனும் கப்பலில் கடமையிலிருந்தார். இரண்டு வாரங்களுக்குள் கொழும்பிலுள்ள ரங்கல கடற்படைத் தளத்துக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார், ஸ்ரீலங்காவிலிருந்து புறப்படும் இந்தியப் பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை செய்வதற்காக, அங்கிருந்து தெரிவு செய்யப்பட்ட 20 பேரில் அவரும் அடங்கியிருந்தார்.
“அவர்(காந்தி) எங்கள் இறையாண்மை மீது தலையிட்ட முறையை இட்டு நான் மன உளைச்சலும், வெறுப்பும் அடைந்திருந்தேன். துரோகி என்றும் கௌரவத்துக்கோ அல்லது மரியாதைக்கோ அருகதையற்றவர் என்று நான் கருதும் ஒருவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவதற்கு என்னைத் தெரிவு செய்ததையிட்டு நான் கோபமடைந்திருந்தேன். காந்தி மற்றும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோர் முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவிட்டு, ஸ்ரீலங்காவாசிகளாகிய எங்கள்மீது முழு விடயத்தையும் பலவந்தமாக திணித்த முறையை கண்டிக்க வேண்டும் என நான் விரும்பினேன். அது திடீரென நான் எடுத்த முடிவு மற்றும் எனது துப்பாக்கியின் அடிப்பாகத்தால் அவரைத் தாக்கிய பின்னர் ஏற்படப்போகும் பின் விளைவுகளைப் பற்றியோ அல்லது எனது வாழ்க்கையைப் பற்றியோ நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை”. நுகெகொடையில் அவர் நடத்தும் சிறிய கடையில் அமர்ந்தபடி ரோகண பழையனவற்றை நினைவு கூர்ந்தார், அந்தக் கடையில் கசெட்டுகள் மற்றும் டி.வி.டி க்களை விற்பனை செய்யும் அதேவேளை சிறைச்சாலையில் இருந்தபோது அவர் நிபுணத்துவம் பெற்ற ஒரு துறையான ஜோதிடக் கலையை பயன்படுத்தி மற்றவர்களின் ஜாதகங்களையும் வாசித்து பலன் சொல்கிறார்.
மிகுந்த தயக்கத்தின் பின் சர்ச்சைக்குரிய அந்த நகர்வை மேற்கொள்ள Rajiv_ghandhi_beatenஅவரைத் தூண்டிய தொடர்ச்சியான நிகழ்வுகளைப் பற்றி அவர் விளக்கினார். அவரது பிரதானமான ஆத்திரம் வடமாராட்சி மீதான நடவடிக்கையை திடீரென நிறுத்தியதுதான், அது தொடர்ந்து நடத்தப் பட்டிருந்தால்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே முறியடித்திருக்கலாம் என ரோகண சொன்னார்.
“ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா இந்த ஒப்பந்தத்தை அவரது மனச்சாட்சிக்கு விரோதமாகவே ஒப்பமிட்டார். அதில் கையெழுத்திடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி இருக்கவில்லை. தமிழ் நாட்டில் உள்ளவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அதன் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் வேண்டுகோளின்படி, காந்தி எங்கள் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களைப் போட்டார். இது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவை அச்சமடையச் செய்தது, அவர் சற்றும் தாமதிக்காமல் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சரான லலித் அத்துலத்முதலியை ஜனாதிபதி றொனால்ட் றீகனைச் சந்திப்பதற்காக உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்” அந்த நிகழ்ச்சியை றோகண நினைவுபடுத்தினார். “எனினும் அமெரிக்கா, இந்திய சந்தைமீது அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் இந்த நெருக்கடியில் தலையிடுவதற்கு மறுத்துவிட்டது. இதனால் ஜனாதிபதி ஜெயவர்தனா உதவியற்றவரானார் மற்றும் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை”
“எல்லாவற்றுக்கும் மேலாக, நான் முன் வரிசையில் நிற்பதற்குத் தெரிவு செய்யப் படவில்லை. அசல் பட்டியலின்படி மகேந்திரன் என்பவர்தான் முன் வரிசையில் நின்றிருக்க வேண்டும். ஆனால் அவரைத் தவிர்த்து விட்டதால் அந்த இடத்தில் நிற்கும்படி நான் கேட்டுக்கொள்ளப் பட்டேன். அணிவகுப்பு நடைபெறும் தினத்தன்று எங்கள் அனைவரையும் ஜனாதிபதி மாவத்தவுக்கு அழைத்துச் சென்று இரண்டு வரிசையில் நிற்க வைத்தார்கள். நான் முதலாவது வரிசையில் நின்றேன். நாங்கள் நிலையான துப்பாக்கி முனை ஈட்டிகள் உள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தோம். ஜனாதிபதி மாளிகையின் முன்னாலுள்ள நடைபாதை முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு காந்தி வந்ததும், அணிவகுப்புக்கு பொறுப்பாக இருந்த லெப்டினட் மென்டிஸ் அவரை அணிவகுப்பு மரியாதையை ஆய்வு செய்ய அழைத்தார். அவர் தனது ஆய்வை வலது புறத்திலிருந்து ஆரம்பித்தார்”.
ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்திடப் பட்டுவிட்ட உண்மை தனக்குள் புகைச்சலை ஏற்படுத்தியதாக ரோகண சொன்னார். “எங்கள் நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பேரிடருக்கு பழிவாங்குவதற்காக ஏதாவது செய்யவேண்டும் என நான் எண்ணினேன். இந்தியா எவ்வாறு எல்.ரீ.ரீ.ஈக்கு பணம், ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி என்பனவற்றை வழங்கியது என்பதை நான் சிந்தித்துப் பார்த்தேன். ராஜீவ் காந்தி எனக்கு முன்னால் இரண்டு அல்லது மூன்றடி தூரத்தில் வந்தபோதுதான் எனது துப்பாக்கியால் அவரைத் தாக்கும் எண்ணம் எனக்குள் உதயமானது”
எனினும் அந்த தாக்குதல் தடுக்கப்பட்டு, காந்தி உயிர் தப்பி விட்டார். “அவர் எனது நிழலைப் பார்த்து குனிந்து கொண்டார். ஸ்ரீலங்காவாசிகளான நாங்கள் அவரை விரும்பவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள அவர் தனது பாதுகாவலர்களுடன் வந்திருந்தார். வழக்கமாக அரச தலைவர்கள் அணிவகுப்பு மரியாதைக்கு தங்கள் சொந்த பாதுகாவலர்களுடன் வருவதில்லை. வெளிப்படையாகவே அவர் அச்சமடைந்திருந்ததுடன் மோசமான ஏதாவது நடக்கும் என அவர் எதிர்பார்த்தும் இருந்தார்.
தனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை என வலியுறுத்தியதுடன் ரோகண தனது பேச்சை தொடர்ந்தார், “ 13வது திருத்தத்தையும் மற்றும் இந்த நாட்டை துண்டாடும் எந்த நகர்வையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். எந்த வெளியாட்களுக்கும் நாம் என் பயப்பட வேண்டும்? உலகத்திலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பையே நாம் தோற்கடித்து விட்டோம், மற்றும் நாங்கள் இந்தியாவை கண்டு பயப்படுவதற்கு எந்தக் காரணத்தையும் என்னால் காண முடியவில்லை”.
“நாங்கள் இந்தியாவின் கீழுள்ள ஒரு மாநிலம் அல்ல மற்றும் நாங்கள் விரும்பியதை நாங்கள் செய்யவேண்டும். ஏனைய உள்ளுராட்சி அரசாங்க அங்கங்களுடாக நாங்கள் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும், ஆனால் அது மாகாணசபைகளுக்கு அப்பால் செய்யப்பட வேண்டும் ஏனெனில் இந்த மாகாணசபை ஒரு வெள்ளை யானையை போன்றது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. எங்கள் அரசியல் தலைவர்கள் ஏன் இன்னமும் இந்தியாவைப் பார்த்து தலை குனிவதுடன் 13வது திருத்தத்தினூடானக வழங்;கப்பட்டதைக் காட்டிலும் அதிக அதிகாரங்களை தருவதாக வாக்களிக்கிறார்கள்”?
வழக்கு வரலாறு படைக்கிறது
வெலிசார் கடற்படைத் தளத்தில் அமைந்துள்ள கடற்டை நீதிமன்றம் 1987 ஒக்ரோபர் 28ல் ரோகணவுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்தது. முனனாள் சபாநாயகரும் மூத்த சட்டத்தரணியுமான ஸ்ரான்லி திலகரத்ன ரோகணவுக்காக ஆஜராகி, இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அழைப்பாணை அனுப்பும்படி கடற்படை நீதி மன்றுக்கு சவால் விடுத்தார். அப்போதைய ஸ்ரீலங்கா பிரதமர் ஆர். பிரேமதாஸ,கமநல அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் காமினி ஜயசூரிய, பாராளுமன்ற செயலாளர் நாயகம், ஸ்ரீலங்கா கடற்படைத் தளபதி ஆனந்த சில்வா, வண.மடுல்வௌ சோபித தேரர், முன்னாள் ரத்கம பாராளுமன்ற உறுப்பினர் அசோகா சோமரத்ன, காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரா ஜெயவர்தன, குற்றவியல் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர், மற்றும் அந்த நேரத்தில் வெளியான சகல ஆங்கில மற்றம் சிங்கள பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஆகியோர் சாட்சி வழங்கினார்கள்.
ஸ்ரீலங்காவில் முதல் முறையாக காணொளிக் காட்சிகளை, சாட்சிகளாக கருதியதால், இந்த வழக்கு நீதித்துறையில் வரலாறு படைத்தது. வாதி மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் சூடான வாக்குவாதங்களைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை படம் பிடித்திருந்த ரூபவாகினிக் கூட்டுத்தாபன காணொளிப் பதிவாளர் ஜிகான் சமரநாயக்காவினால் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை பார்வையிட அவர்கள் சம்மதித்தார்கள். அதற்கு மேலதிகமாக கடற்படை நீதிமன்றம் துப்பாக்கிக்கு அகப்படாமல் காந்தி குனிந்து விலகும் மிகவும் பிரபலமான புகைப்படத்தை எடுத்த லேக் ஹவுஸ் படப்பிடிப்பாளரான சேன விதானகமவுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
கடற்படை நீதிமன்றம் தனது விசாரணையை 12 நாட்கள் நடத்தியபின் தனது தீர்ப்பை 20 நவம்பர் 1987ல் வழங்கியது. ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலிருந்து ரோகண விடுவிக்கப் பட்டார். ஆனால் கொலையாகக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார். அவருக்கு ஆறு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும்  ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவினால் வழங்கப்பட்ட ஒரு மன்னிப்பு காரணமாக 3,ஏப்ரல் 1990ல்  வெலிக்கடை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சுமார் 700 கைதிகளின் மத்தியில் அவரும் இருந்தார்.
அரசியலில் நுழைவு
சிறையிலிருந்து விடுதலையானபின் ரோகண ஜோதிடம் கணிக்க ஆரம்பித்தார், மற்றும் சிறைச்சாலை நூலகத்தில் அது சம்பந்தமாக கிடைத்த புத்தகங்களைப் படித்து தான் அதைக் கற்றுக் கொண்டதாக ரோகண சொன்னார். தேசியவாத கருத்தியல் கொண்ட கட்சிகள் ஊடாக அவர் பிரதான நீரோட்ட அரசியலுக்குள் நுழைந்தார்,ஆனாலும் பிரதான நீரோட்டத்தில் உள்ள எந்தக் கட்சிக்கும் தேசப்பற்றுள்ள தேசியவாத கொள்கைகள் இல்லாதபடியால் அவருக்கு எந்தக்  கட்சியிலும்  போட்டியிட ஆர்வம் உண்டாகவில்லை.
ஸ்ரீலங்காவின் எதிர்காலம்
காந்தி தொடர்பான சம்பவத்தைப் பற்றி தனக்குப் பேசிப்பேசி அலுத்து விட்டதால் ‘மவ்பிமட்ட உத்தும்மாச்சார’ (தாய்நாட்டுக்கு உன்னத வணக்கம்) என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளதாகவும் அதில் அந்த சம்பவம் பற்றிய முழு விவரங்கள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள யாவும் விளக்கப்பட்டள்ளதாகவும் ரோகண சொன்னார். அவர் மேலும் தொடர்கையில் தற்போதைய அரசியல் தலைவர்களிடையே உண்மையாகவே நாட்டையும் அதில் உள்ள ஏழைகளையும் நேசிக்கும் ஒரு தலைவர் இல்லை.”நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், துட்டகைமுனு மற்றும் வாலகம்பாகு போன்ற அச்சமற்ற அரசர்களின் ஜாதகங்களை நாங்கள் ஆராய்ந்துள்ளோம். தற்சமயம் அத்தகைய அச்சமற்ற குணாதிசயமுள்ள ஒரு தலைவர் கூடக் கிடையாது என்பதை என்னால் உங்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும்”.
இந்த வருடம் நவம்பர் 2ல் சனி விருச்சிக இராசிக்கு வருகிறான், அத்துடன் உலகின் பல இடங்களிலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு யுத்தம் வெடிக்கலாம். அதேபோல விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கும் ஆபத்தான காலம், சனி விருச்சிகத்தில் வருவது மோசமானது. கலகங்கள், அமைதியின்மை மற்றும் சிறிய அளவில் போர்கள் கூட நாட்டில் உருவாகலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பம் உள்ளது
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 http://www.jvpnews.com/srilanka/80764.html

தமிழர் மறக்கும் ‘தட்டிவான்’!

1995 காலப்பகுதியெண்டு நினைவு. பள்ளமடுதான் இப்ப ஓமந்தை மாதிரி வடக்கையும் தெற்கையும் பிரிக்கிற இடமா இருந்தது. இங்கால இருந்து பெடியங்கள் செக் பண்ணுவாங்கள். அங்கால இருந்து அவங்கள் செக் பண்ணுவாங்கள். பெடியங்களின்ர கட்டுப்பாட்டுப் பக்கமிருந்து போற ஆக்கள, ஏத்திக் கொண்டு போற ஆக்கள் ஆமிக்காரன்ர பொயின்ட் அடி வரைக்கும் கொண்டு போய் விட்டிட்டு, அங்கியிருக்கிற சனங்கள ஏத்திக் கொண்டு வருவாங்கள்.
எங்கட பெரியவருக்கு முதலிடம்தானே வேணும். வாகனத்திலயும் முதலிடம். ட்ரைவருக்குப் பக்கத்திலயே இருந்திட்டார். பெடியள் செக் பண்ணி அனுப்பிட்டாங்கள். வாகனம் ஆமீன்ர பொயின்ருக்குள்ள போயிட்டு. அவன் இறங்கி வேகமாத்தான் ஓடச் சொல்லுவான் (2004,2005 களில் முகமாலைப் பொயின்ட்ல நடக்கிற ஆமி செக்கிங்க கற்பனை பண்ணிக் கொள்ளுங்கோ). சனமெல்லாம் பழக்க தோசத்தில இறங்கி வேகமா ஓடிக் கொண்டிருக்கு. எண்டைக்குமில்லாம, எவரெடி பட்டரிய கண்டோஸ்க்குள்ள வச்சிக் கடத்தின மனுசிய பிடிச்ச கடுப்பில நிண்ட ஆமிக்காரர் கிழடுகட்டயளயும் அடிச்சி விரட்டிக் கொண்டிருக்கிறாங்கள். பெரியவருக்கு எல்லாம் புதுசுதானே, ஆறுதலா இறங்கி, மெல்லம பொயின்ற நோக்கி நடந்தவர். இதையெல்லாம் பாத்துக் கொண்டிருந்த ஆமிக்காரன் வந்து விட்டான் அடி. றோட்டில போட்டு, கும்மி எடுத்திட்டான். அடி தாங்க முடியாத பணக்கார ஐயா வந்த பாதையாள பெடியங்களின்ர பொயின்ற் பக்கமா ஓடத் தொடங்கிட்டார். ஆமிக்காரனும் விடுறதா இல்ல. திரத்தித் திரத்தி அடிக்கிறான். இனி வந்தா பெடியளின்ற துப்பாக்கி சூடுவிழும் எண்ட இடம் வரத்தான் துரத்திறத விட்டவன்.
ஐயா அண்டைக்கு ஓடின ஓட்டத்த ஊர் சனம் முழுவதும் பார்த்து, சிரிப்புக்கும், அழுகைக்கும் இடையிலான ஒரு உணர்வில நிண்டவையாம். ஐயா அதுக்குப் பிறகு முள்ளிவாய்க்கால் சண்ட முடியும் வரைக்கும் ஆமிக்காரன் பக்கம் தலைவச்சும் படுக்கேல்ல.
இப்பிடியான ஒரு மரண நினைவ கந்தையாண்ணைக்கு குடுத்தது தட்டிவான் (பயணிகளை சுமந்துசெல்லும் வாகனம்) தான் என்று சொல்லி சிரிக்கிறார். அந்த நினைவு கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்திருந்தது.
இன்னொன்று, சாவகச்சேரிப்பக்கம் இது அடிக்கடி நடக்கும். பயணிகள் பேருந்துக்காகக் காத்திருப்பர். தட்டிவான்கள் புறப்படும். யாரும் ஏறமாட்டார்கள். உரிய இடங்களுக்கான பேருந்து வரும். ஏறமாட்டார்கள். எல்லாப் பேருந்துகளும் போய் முடிந்ததும், அவர்கள் அங்கேயே காத்திருப்பர். கடைசித் தட்டிவான் இரவு 8 மணிக்குப் புறப்படும். எல்லோரும் பாய்ந்தடித்து அதில் ஏறிக் கொள்வர். ஏன் முதலே ஏறியிருக்கலாமே, பேருந்தில் அல்லது தட்டிவானில் என்று கேட்டால், பகலில தட்டிவான்ல போறது வெட்கமாம்ஸம். இப்பிடியும் ஒரு லா..லா.. பயணம்!
இப்படித்தான் வடக்கில் வாழும் நடுத்தர வயதைத் தொட்ட பெரும்பாலானவர்கள் இந்தப் பயணத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்க்கையின் நிழற்படம் மாதிரி நினைவு வைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான் இந்த லா..லா.. பயணங்கள்.
அதென்ன லா.. லா..பயணம்?
சில பயணங்கள் 110 வயசு ஆச்சியையும் குழந்தையாக்கிவிடும். பொக்கை கன்னங்களில் பங்கர் வெட்டும். அந்தப் பயணங்களை நினைக்கவே சந்தோச மிகுதிபொங்கும். துள்ளிக் குதிக்கச் செய்யும். அப்படி குதிக்கச் செய்யும் பயணங்களைத் தருவது தட்டிவான்கள். சிலர் இதனை தட்டிபஸ் என்று நினைவுபடுத்துகின்றனர். மகிழ்வின் உச்சத்தில் பலரும் பல சொற்களை உச்சரிப்பர். அதில் பிரபலமானது லாஸ லாஸ லல்லல்லாஸ ஆகவே, அதையே தட்டிவான் பயணத்துக்கும் பொருத்தி லா..லாஸ பயணமாக மினுக்கித் தந்தார் உடுத்துறையில் இருக்கும் துஸ்யந்தன் என்கிற தட்டிவான் சாரதி..
இனி போவோமா லா..லாவுக்குள்ள?
தட்டிவான், இதன் தாயகம் பிரிட்டன். தரமான பொருள்களைக் கொள்வனவு செய்வதில் வல்லவர்களான எம்மவர்கள் ஜப்பான் பொருள்களைக் காணமுன்பு, பிரிட்டன் பொருட்களைத்தான் கண்டனர். ஜப்பான் யமஹா மாதிரி 1980களுக்கு முதல் பிரிட்டன் தட்டிவான்தான் நம்மவர் இறக்குமதியில் முன்னிலையில் நின்றது. எங்கள் படலைகளுக்குள் மாடு வராமலும், தெருவில் செல்வோர் எட்டிப் பார்த்தால் வளவுக்குள் இருப்போர் தெரியாமல் இருப்பதற்கும் கிடுகினால் மறைப்பானாக உருவாக்கப்பட்டதே தட்டி. வெள்ளைக்காரனிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரக வாகனங்களின் இருபக்கங்களிலும், கிடுகுக்குப் பதிலாகக் கம்பியினால் அமைத்து, உள்ளே இருப்பவர்கள் தெரிந்தும் தெரியாமலும், இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. காரணப் பெயர் வைப்பதில் கில்லாடிகளான நம்மவர்கள் அதற்கு உடனே சூட்டிய திருநாமம், ‘தட்டிவான்’.
அதுக்கு மட்டுமில்ல, இதுக்கும் 30 வயசு!
தட்டிவான் அறிமுகமானதுடன் இலங்கையும் இரண்டாகப் பிளவுபட்டது. தமிழர்கள் பொருளாதாரத் தடைகளைக் கண்டனர். எரிபொருள் விலையேற்றத்தால் தேங்காய் எண்ணெயில் வாகனம் செலுத்தும் பொறிமுறையைக்கூட நம்மவர்கள் கண்டுபிடித்தனர். பஞ்சில் விளக்கெறித்தனர். பனங்காய் சவர்காரமாகியது. இப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்தெட்டுப் புதிய கண்டுபிடிப்புக்களில் ஒன்றுதான், தட்டிவான்களில், குறைந்த செலவில் பயணம் போகலாம் என்பது. யாழ்ப்பாணத்துக்கு உள்ளேயேதான் பரீட்சார்த்த பயணங்கள் நடந்தன. யாழ். நகரப்பகுதியிருந்து சுன்னாகம், அச்சுவேலி, சாவகச்சேரி என்றும், பின்னர் சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்தின் இதர ஊர்களுக்கும் தட்டிவான் பயணம் ஆரம்பமானது.
உள் அமைப்பு
ஆரம்ப கால தட்டிவான்களின் முன் அமைப்பு பிரமாண்டாதாக இருக்கும். பெரிய லைற் ஹெற்கள். ஆந்தையின் கண்கள்போல இருக்கும். வாகனத்தின் முன் பகுதி சதுரமாக இருக்கும். ஹோர்ன், இப்போது மீன் விற்பவர்கள் அடிப்பதுதான். கொஞ்சம் பெரியதாக இருக்கும். மாடுகளையும், சன நெரிசலையும் சைற் எடுக்க, அதை அமத்தினால் போம்பிஸ போம்பிஸ என்று சத்தம் வரும்.
தட்டிவானின் பின் பக்கம் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்வர். சிலர் கதவு யன்னல் எல்லாம் வைத்து, திறந்து ஏறக்கூடிய வசதியுடன் அமைத்திருப்பர். அதன் கீழே ஏறுவதற்கு ஒரு இரும்புப் படியிருக்கும். அதில் காலை வைத்து, மேலிருந்து கட்டித் தூக்கப்பட்டிருக்கும் கயிற்றில் பிடித்துக்கொண்டு ஏறலாம். உள்ளே இருபக்கமும் நீளமான வாங்கு வாகனத்தோடு அசையாதபடி இணைக்கப் பட்டிருக்கும். அதில் நெருக்கமாக அமர்ந்து, நடுவில் கீரைப்பிடி போல பயணிகள் அடுக்கிக் கொள்வர். ஊர்கதை, உறவுக் கதையுடன் பயணம் பறக்கும். ஊர்ப் பெரியவர்கள், மாமன், மச்சான், வாகனக்காரரின் குடும்ப அங்கத்தவர்கள் போன்றவர்கள் தட்டிவான் ட்ரைவரின் அருகில் வசதியாக அமர்ந்து கொள்வர். பின் படியில் கயிற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு புழுதியோடு பகிடிவிட்டுக் கொண்டு வருவார் நடத்துநர். பயணிகள் அதிகமென்றால், தட்டிவானுக்கு மேலாகவும் காளையர்கள் அமர்ந்து பயணம் செய்வர். தட்டிவானுக்கு மேலிருந்து பயணம் செய்வது காளையடக்கி, காதலியை கரம் பற்றுவதற்கு சமமானது. காதலியுடனோ, காதலிக்க காத்திருக்கும் பெண்ணுடனோ பயணிக்க வாய்ப்புக் கிடைக்கும் காளையர்கள் தட்டிவான் முதுகில் பயணம் செய்து, பாடல் பாடி, தங்கள் வீரத்தை நிலைநாட்டுவதுண்டு. மேலிருந்து குண்டுகள் விழுமென்றோ, மல்யுத்தம், காளையடக்கல் நடக்குமென்றோ நினைக்கக்கூடாது. காட்டுவழியால் தட்டிவான்கள் 20 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும்போது, மரக் கிளைகள் தலையில் அடிக்கும். அதில் அடிவாங்காமல், தப்பிப்பது அந்தக் கால காளையர்களின் வீரங்களில் ஒன்று.
சேவையும், சேவைக் காலமும்
1980ஆம் ஆண்டுகளில் தொடங்கி யாழ்ப்பாண இடப்பெயர்வு ஊடாக, சமாதானம் நெருங்கிய 2000ஆம் ஆண்டு வரைக்கும் தட்டிவான்களின் சேவை மிக முக்கியமாக இருந்தது.
யாழ்ப்பாண இடப்பெயர்வில் சிறியளவு பணியாற்றினாலும், உள்ளூரளவில் அதிக பணியை தட்டிவான்கள் ஆற்றியிருக்கின்றன. பயணிகளை, அலுவலக உத்தியோகத்தர்களை ஏற்றி இறக்குவதை விட, வியாபாரிகளை ஏற்றி இறக்கும் பணியையும் செய்திருக்கின்றன.
விடுதலைப் புலிகள் நடத்திய சண்டைகளுக்கும், காயப்பட்ட, மரணித்த போராளிகளை களமுனைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் தட்டிவான்களைப் பயன்படுத்தினர். புலிகளிடம் தட்டிவான்கள் இருக்கவில்லை. “டீசலுக்கு ஓட்டம்” என்ற பிரிவுக்குள் இது இடம்பெறும். முதல் நாள் பொதுமக்களை ஏற்றினால், மறுநாள் முழுதும் புலிகளுக்கு தட்டிவானை ஓடவேண்டும். அதற்குப் பணமில்லை. பயண செலவுக்கான டீசலை வழங்குவார்கள்.
மரணித்த போராளிகளை உரிய பெற்றோர்களின் வீட்டிலிருந்து துயிலுமில்லங்கள் நோக்கி எடுத்துச் செல்லும் பணியையும் தட்டிவான்கள் ஆற்றின. மனதை உருக்கும் ஒரு துயரக் கீதத்தை பிறப்பிக்கும் ஸ்பீக்கரை தட்டிவானின் மேலாகக் கட்டி, அதனைச்சுற்றியும் சிப்பு மஞ்சள் கொடிகள், வாழை மரங்கள் கட்டி, நடுவில், தட்டிவானின் நடுவில் குறித்த விடுதலைப் புலிப் போராளியின் உடலம் வைக்கப்பட்டிருக்கும். அதன் கால் மாட்டில் இரு போராளிகள் துப்பாக்கிகளுடன் நிற்பர். தலை மாட்டில் தாயும் ஏனைய உறவினர்களும் அமர்ந்து, துயிலுமில்லம் வரைக்கும் அழுதபடி வருவர். அந்தத் தட்டிவானைக் கண்டதும் மக்கள் வீதியால் பயணிப்பவர்களும், ஊர்களுக்குள் வேலை செய்கின்றவர்களும் தட்டிவான்களைப் பார்த்தபடி அமைதியாக நிற்பர். டயர்கள் தட்டுப்பாடான அந்தக் காலகட்டத்தில் வைக்கோல் அடைந்தும், மண் அடைந்தும், காற்றில்லாமலும் போரில் மரணித்தவர்களின் உடல்களைக் காவின தட்டிவான்கள்.
இப்போது உடுத்துறையில் 10 தட்டிவான்கள் இயங்கும் நிலையில் இருக்கின்றன. அவை கிளிநொச்சிக்கு மீன் கொண்டு செல்பவர்களை ஏற்றி இறக்கும் பணியைச் செய்கின்றன.
இப்படியே பொருளாதாரத் தடைகள், பாதைத் தடைகள், இடப்பெயர்வுகள் என அலைந்துழன்ற தமிழர்களைக் காவியதில் தட்டிவான்களின் பங்கு, மாட்டு வண்டில்களுக்கும், சயிக்கிள்களுக்கும் முந்திய இடத்தில் இருந்தது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிலிருந்து வந்த மினி பஸ்கள் அந்த இடத்தைப் பிடித்துத் தட்டிவான்களை மறக்கச் செய்துவிட்டன.
ஜெரா

Thattivan-1
http://www.jvpnews.com/srilanka/80767.html

Geen opmerkingen:

Een reactie posten