தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

இந்தியாவில் பிறந்த அகதிகள் இலங்கை குடியுரிமை பெற 25 ஆயிரம் ரூபா அபராதம்!

[ பி.பி.சி ]
இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாம் கிரமமான நிரந்தர வருமானத்திற்கு வழியற்ற நிலையில் உள்ளபோது, தமது வளர்ந்த பிள்ளைகளுக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான அபராதத் தொகையைச் செலுத்த முடியாதிருப்பதாக நாடு திரும்பியுள்ள குடும்பங்கள் கூறுகின்றன. 
இத்தகைய குடும்பங்களுக்கு தம்மால் நிதியுதவி செய்ய முடியாதிருப்பதாகக் கூறும் சட்ட உதவி ஆணைக்குழுவினர், இந்த விடயத்தில் கொள்கை வகுப்பாளர்கள் அல்லது அரசியல்தலைவர்கள் மட்டத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புக்கள் அங்கு பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு இலங்கையில் மீண்டும் பதிவு செய்ததன் பின்னர் இலங்கை பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
பிறப்புச் சான்றிதழ் பெற்றதன் பின்னரே, இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு வயதெல்லை எதுவும் கிடையாது என்று வவுனியாவில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், பிறப்புச் சான்றிதழ் பெற்றிருப்பவர், 16 வயதை எட்டிய பின்னரே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், தேசிய அடையாள அட்டையைக் கொண்டிருந்தால் மட்டுமே கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுள்ள பலர் 21 வயதைக் கடந்துள்ள போதிலும், பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்காத காரணத்தினால் அவர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாத சிக்கல் நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறை குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், இடம்பெயர்ந்து சென்று தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பலர் கல்வித் தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடு செல்வதற்குரிய கடவுச்சீட்டைப் பெற முடியாத நிலைமைக்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.
அவ்வாறானவர்கள் பிரஜாவுரிமையைப் பெற்று அதன் பின்னர் கடவுச்சீட்டுக்கான அபராதத் தொகையை செலுத்திய பின்னரே கடவுச்சீட்டைப் பெறவேண்டி உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq3.html

Geen opmerkingen:

Een reactie posten