தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

வடமாகாண சபையின் இரு நியதிச் சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு- ஓய்வூதியத்தை புதிய சம்பள அளவுத் திட்டம் படி வழங்க வேண்டும்

நல்லூரானின் நல்லருளால் நடைபெற்ற சங்கீத நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை! வடக்கு முதல்வர்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 07:11.22 AM GMT ]
நல்லூர்க் கந்தனின் நல்லருளால் நல்லதொரு நிகழ்ச்சி இன்று நடைபெறப் போகின்றது. பணிமனைகளைக் காலையிலும் நாட்டிய சங்கீத விற்பன்னர் அரங்கேற்றங்களை மாலையிலும் நிகழ்த்தும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகள் வரவேற்கப்பட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்.சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற தெய்வீக சுகானுபவம் என்னும் தலைப்பிலான நடன சங்கீத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
காலையிலே பயிற்சி, மாலையிலே கண்வழி செவிவழிக் காட்சி என்று அவற்றை நடைமுறைப்படுத்த எத்தனித்திருக்கும் விதம்ரசிக்கக் கூடியதாக இருக்கின்றது.
நல்லூர்க் கந்தனின் திருவிழாக் காலத்தில் இவற்றை ஆற்றுப்படுத்த முன்வந்ததால் எம் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி இந் நாட்டின் பல பிரதேசங்களில் இருந்து வரும் எமது சகோதர சகோதரிகளும், குழந்தைகளும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்பவர்களுங் கண்டு, கேட்டுச் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கர்நாடக இசையானது எந்தளவுக்கு எம்மை இன்று கவர்கின்றன, எந்தளவுக்கு அவற்றை வளர்க்க நாம் ஈடுபாடு காட்டி வருகின்றோம் என்பன ஆராய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களாவன. அதே போன்று சினிமாவும் தொலைக்காட்சியும் எந்தளவுக்கு எமது பாரம்பரிய கலைகளைப் பாதித்துள்ளன என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
விஞ்ஞான வளர்ச்சி இசைக் கலையில் பலவித முன்னேற்றங்களையும் அதே நேரம் பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. அவற்றை ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வது எமக்குப் பல நன்மைகளைத் தரும்.
எங்கள் இளமைக் காலத்தில் கிரிக்கட், கால்பந்து விளையாடுவது, இசைக் கலையில் ஈடுபடுவது நேரத்தை விரயமாக்குஞ் செயல்கள் என்றே கணித்திருந்தார்கள். இன்று கிரிக்கட் கலைஞர்களும், கால்பந்து விளையாட்டாளர்களும் சங்கீத விற்பன்னர்களும் பெருவாரியான பணம் சம்பாதிப்பவர்களாக இருந்து வருகின்றார்கள்.
என் வாழ்க்கையில் நடந்த சங்கீதம் பற்றிய ஒரு நிகழ்வை இங்கு கூறி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். சுமார் 65 வருடங்களுக்கு முன்னர் இது நடந்தது.
அந்தக் காலத்தில் பொதுவாக வானொலி தான் எம்மைத் தென்னிந்திய கர்நாடக இசைக் கலைஞர்களுடன் சேர்த்து வைத்தது. மதுரை மணி ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், வி.வி. சடகோபன் , உறையூர் இராஜ கோபாலசர்மா, அரியக்குடி இராமானுஜம் ஐயங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மாரியப்ப சுவாமிகள், மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் என்று பல இசை மேதைகளின் பெயர்கள் இப்பொழுதும் மனதில் பதிந்து இருக்கின்றன.
அவர்களின் பாடல்களைத் தான் காலையில் எழுந்தவுடன் ஆல் இந்தியா ரேடியோ, திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து கேட்போம். அவற்றைக் கேட்டுக் கேட்டு அடிப்படைச் சங்கீத அறிவு எதுவும் இல்லாமலே பல பாடல்களை அவர்களைப் போல் பாடும் ஆற்றலை அப்போது பெற்றிருந்தேன்.
அப்போது எனக்கு வயது 10 அல்லது 11 இருக்கும். ஒரு நாள் நான் என் தாயாரிடம் கர்நாடக இசை படிக்க வேண்டும் என்று கேட்டேன். அம்மாவுக்கு மயக்கம் வந்து விடும் போல் இருந்தது. “முதலில் பாடங்களைப் படி; அதற்குப் பிறகு கர்நாடக இசை பற்றிப் பார்க்கலாம் என்றார். நான் வற்புறுத்திக் கொண்டே வந்தேன்.
ஒரு நாள் என்னை எங்கள் கொழும்பு வீட்டு வாசலுக்கு அழைத்தார். “அந்தா போகின்றார் அவரைப் பார்த்தாயா?” தெருவில் சென்ற ஒருவரைச் சுட்டிக் காட்டிக் கேட்டார் என் தாயார். நான் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு முதியவர். சுதேச உடையில் காட்சி தந்தார். வெற்றிலையைச் சப்பி சப்பிக் கொண்டே சென்று கொண்டிருந்தார். ஒரு கையில் குடை, மறு கையில் சுருதிப் பெட்டி, மிக உக்கிரமாக வெய்யில் தகித்துக் கொண்டிருக்க தமது பருத்த உடலைத் தூக்க முடியாது ஆடி ஆடி நடந்து போய்க் கொண்டிருந்தார்.
“இந்தக் கர்நாடக இசை அது இது என்று உன் மனதைக் குழப்பிக் கொண்டாயானால் அந்த ஐயங்காரைப் போல நீயுந் தெருத் தெருவாய் அலைய வேண்டி வரும். இசைப் பாடகர்கள் எவ்வளவு வறிய வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று உனக்குத் தெரியுமா? உன் தந்தை தாய் இரு பக்கத்துக் குடும்பங்களில் எல்லோருமே வழக்கறிஞர்கள்.
முதலில் அதற்கேற்றவாறு படி. அதன்பின் சங்கீதம் பற்றிப் பார்க்கலாம்” என்றார். தெருத் தெருவாய் அலைய வேண்டி வருமோ என்ற பயத்தில் கர்நாடக சங்கீதம் பற்றி என் தாயாருடன் அதன்பின் பேசவில்லை.
ஆனால் அந்த இசையில் ஈடுபாடு இருந்து கொண்டே இருந்தது. சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக பதவி பெற்று வந்ததும் யாழ்ப்பாணத்தின் ஏன் இலங்கையின் சிரேஸ்ட கர்நாடக இசை விற்பன்னர் திரு சண்முகரத்தினத்தை வீட்டிற்கு அழைத்து முறையாகக் கர்நாடக இசையைப் படிக்க எத்தனித்தேன்.
என் போதாத காலம். மூன்று மாதத்திலேயே அவரை மாடு முட்டி அவர் அகால மரணமடைந்து விட்டார். இது என்னைப் போன்ற பழையவர்கள் கதை.
ஆனால் இன்று பல இளைஞர்கள், யுவதிகள் தம் படிப்பில் மிக நன்றாகப் பிரகாசிக்கும் அதே நேரம் கலைகளிலும் சிறந்து விளங்குகின்றார்கள்.
அவர்களுக்குத் தெருத்தெருவாய் அலைந்து திரிந்து தான் எமது கலைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. அவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டே இன்று இசை உலகிலும் பிரகாசிக்கின்றார்கள். நல்ல வருமானத்தைப் பெற்று வருகின்றார்கள்.
இசையும் தற்பொழுது பல விதங்களில் காலத்துக்குத் தக்கவாறு மாறி வருகின்றது. அடிப்படைக் கர்நாடக இசை அத்திவாரத்தை அமைத்துக் கொண்டால் எந்த ஒரு பிற மொழி இசையையும் கையாளக் கூடிய தகைமையையும் எமது பாடகர்கள் பெற்று விடுகின்றார்கள். அந்த வரிசையில் வந்தவர் தான் எமது இன்றைய கர்நாடகக் கலைஞர் திரு ராம் பிரசாத் அவர்கள்.
அடிப்படையில் இருந்து வழுவாதவர் அவர் என்று சொல்லிக் கேட்டுள்ளேன். பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து தமது சங்கீத பாரம்பரியத்தை அந்த நாடுகளில் பரப்பி வருபவர் அவர். எம்மைப் போல் அவர் ஒரு சட்டத்தரணி. அது மட்டுமல்லாமல் ஒரு பதிவுபெற்ற கணக்காளருங் கூட. ஆனால் அவர் சங்கீதத்திலும் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார்.
என் தாயார் எதை என்னிடம் எதிர்பார்த்தாரோ அதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கும் ஒருவர் திரு.ராம் பிரசாத் அவர்கள். சங்கீத நுணுக்கங்கள் பற்றிய பல நூல்களை எழுதியுள்ளார். பல பட்டங்களையும் பெற்றுள்ளார் எமது இன்றைய இசைக்கலைஞர். அவரை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
அவரின் வருகையை உறுதி செய்த என் நண்பர் கௌரவ பதில் ஸ்தானிகர் அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. எமது கர்நாடக விற்பன்னரின் கச்சேரியைக் கேட்க யாவரும் ஆவலாய் இருப்பீர்கள். அவரை வரவேற்று எம்மை எல்லாம் மகிழ்ச்சிக் கடலினுள் ஆழ்த்த அழைத்து, என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். 
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu2.html

ஒன்றரை வயதுக் குழந்தையைக் கொலை செய்த தந்தை- மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 07:13.31 AM GMT ]
பேருவளை மாகல்கந்த பிரதேசத்தில் ஒன்றரை வயது நிரம்பிய தனது குழந்தையை தந்தை ஒருவர் கல் தரையில் எறிந்து கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதேச விகாரையொன்றின் கற்தரை நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த குழந்தை களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிப்பட்ட போது உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப முறுகலே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை கற்தரையில் எறியப்பட்ட சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அதன் தாய் அங்கு இருக்கவில்லை எனவும், சந்தேகத்திற்குரிய தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்ற நிலையில் வாரத்தில் ஒரு தடவை ஒரு ஞாயிற்றுக் கிழமை தோறும் குழந்தையை தந்தைக்கு
காண்பிப்பதற்காக அழைத்துச் செல்ல வேண்டும் என பொலிஸாரினால் முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, சந்திப்பதற்கான ஒரு இடமாக மாகல்கந்த பிரதேச விகாரையை பயன்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், 24.08.2014 அன்று குறித்த குழந்தையின் பாட்டியினால், அதனை தந்தையிடம் காண்பிப்பதற்காக விகாரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமான தனது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தந்தை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 29 வயதான குறித்த தந்தையை, மனநல வைத்தியரிடம் அனுப்பி வைத்திய அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா
ஆப்தீன் உத்தரவிட்டார்.
களுத்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் 25.08.2014 அன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செப்டெம்பர் 4ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தோட்ட அதிகாரியை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - போராட்டத்தி​ல் தொழிலாளா்க​ள்
மஸ்கெலியா தோட்டத்திற்குரிய 4 தோட்ட பிரிவுகளை சேர்ந்த சுமார் 1000ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 26.08.2014 அன்று காலை முதல் மஸ்கெலியா தோட்ட தொழிற்சாலைக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்ட அதிகாரியை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் என இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
5 மாதங்களுக்கு முன்பு இந்த தோட்ட தொழிற்சாலைக்கு வந்த  மானல் -டீ லாவ்ப் என்ற தோட்ட அதிகாரி ஒழுங்கான முறையில் தனது சேவைகளை மேற்கொண்டு வந்தார்.
இவரை திடீரென இடம்மாற்றம் செய்வது கவலைக்குரிய விடயம் இவரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் தொடர்ந்தும் இந்த தோட்டத்திலேயே தனது சேவையை அவர் தொடர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாம் தோட்ட நிறுவனத்தில் உயர் அதிகாரியிடம் கேட்ட போது...
மேற்படி தோட்ட அதிகாரியை அவரின் தனிப்பட்ட ஒரு காரணத்திற்காக இடம்மாற்றம் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu3.html
வடமாகாண சபையின் இரு நியதிச் சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பு- ஓய்வூதியத்தை புதிய சம்பள அளவுத் திட்டம் படி வழங்க வேண்டும்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 07:33.33 AM GMT ]
வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட 3 நியதிச் சட்டங்கள் பேரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டம், மற்றும் முத்திரை வரி கைமாற்றுச் சட்டம் ஆகிய 2 நியதிச் சட்டங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் கைப்பற்றப்பட்டு 9 மாதங்களின் பின்னர் முத்திரை வரி கைமாற்று நியதிச்சட்டம், நிதி நியதிச்சட்டம், முதலமைச்சர் நிதியம் நியதிச்சட்டம் ஆகிய 3 நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
இவை ஆளுநரின் சிபார்சு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், நிதி நியதிச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளுமாறும் முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டத்திற்கு சிபார்சு வழங்க முடியாதெனவும் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 05.08.14ம் திகதி நடைபெற்ற நியதிச் சட்டங்களுக்கான விசேட அமர்வில் மேற்படி 3 நியதிச்சட்டங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்க எதிர்க்கட்சி மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பில் நடுநிலமை வகித்தன. எனினும் ஆளும் தரப்பின் பெரும்பான்மை பலத்துடன் அங்கீகாரம் பெறப்பட்டது.
தொடர்ந்து முத்திரைவரி கைமாற்றுச் சட்டம் சபையில் ஏகமனதாகவும், நிதி நியதிச்சட்டம் சில திருத்தங்களுடனும் சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த 3 நியதிச்சட்டங்களில் 2 நியதிச் சட்டங்கள் மீள ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த 19.08. 14ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பேரவை தலைவர் நேற்றய தினம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், எந்தவொரு நியதிச் சட்டமும் பேரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர் ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னரே அது சட்டமாக்கப்படும்.
மேலும் முதலமைச்சர் நிதியம் நியதிச் சட்டம் அரசியலமைப்பின் 24:1ன் கீழ் அடங்காமையினால் அதற்கு ஆளுநரின் சிபார்சு பெறத்தேவையில்லை என முன்னர் நாம் கூறியிருந்தோம்.
ஆனாலும் அதற்கு சபை அங்கீகாரம் பெறப்பட்டதன் பின்னர் சட்டமாக்குவதற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த அடிப்படையில் 3  மொழிகளிலுமான நியதிச் சட்டங்களை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
ஆனால் நிதி நியதிச் சட்டத்தின் மொழி பெயர்ப்பு பணிகள் நிறைவடையாமல் இருக்கின்றன. குறிப்பாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆங்கில மொழிபெயர்ப்பு நிறைவடைந்துள்ளது. அவையும் நிறைவடைந்த பின்னர் நாங்கள் அதனையும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்றவர்களுக்கு புதிய சம்பள அளவுத் திட்டத்தின் படி வழங்க கோரி தீர்மானம்
வடமாகாணத்தில் அரச சேவையிலிருந்து 2006.01.01ம் திகதிக்கு முன்னர் ஒய்வுபெற்றவர்களுடைய ஓய்வுதியக் கொடுப்பனவுகளை 2006.01.01ம் திகதி அமுலாக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள அளவுத்திட்டத்தின் படி வழங்குமாறு கோரி கடந்த 21ம் திகதி வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐனாதிபதியின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006.01.01ம் திகதி அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள அளவுத் திட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதன் பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய சம்பள அளவுத்திட்டத்தின் படி ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
ஆனால் மேற்குறித்த திகதிக்கு முன்னதாக அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அவ்வாறு வழங்கப்படவில்லை. குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி 2006.01.01ம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் புதிய சம்பள அளவுத்திட்டத்தின் பிரகாரம் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என கோரி கடந்த மாகாணசபை அமர்வில் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பிரேரணை ஒன்றிணை முன்மொழிந்திருந்தார்.
குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2006 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலாக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள அளவுத்திட்டத்தின்  படியே அத்திகதிக்கு பின்பு ஓய்வு பெற்ற ஊழியர்களது ஓய்வூதியம் கணிக்கப்பட்டு வருகின்றது  எனினும் 2006.01.01ஆம் திகதிக்கு முன்பு ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களது  ஓய்வூதியம் தொடர்ந்தும் மாற்றமடையாது மீளாய்வு செய்யப்படாமலே வழங்கப்பட்டடு வருகின்றது.
இந்த நடைமுறையினால் இந்தத் தரப்பினர் பாரிய பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவிலும் சமநிலை பேணப்படாது பாகுபாடு உள்ளது. ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள் இந்தப்பாகுபாடு நீக்கப்படுமென காலத்துக்கு காலம் தெரிவித்து வந்த போதும் உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத அதேவேளை வருடாந்த வரவு செலவுத்திட்டங்கள் மூலம் சிறிய சலுகைகள் மட்டும் வழங்கப்பட்டு வந்துள்ளன.
எனவே 2006.01.01ஆம் திகதிக்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களது ஓய்வூதியத்தை  அத்திகதியிலிருந்து அமுலாக்கப்பட்ட 6/2006 இலக்க பொது நிருவாக சுற்றறிக்கையின் படியான சம்மள அளவுத்திட்டத்திற்கு அமைய மீளாய்வு செய்ய வேண்டுமெனவும் நிதி நெருக்கடி காரணமெனின் நிலுவையின்றி இந்த மீளாய்வை 2015.01.01ஆம் திகதியிலிருந்து அமுல் செய்யவேண்டு மெனவும் நிதி அமைச்சரான அதி உத்தம ஜனாதிபதி அவர்களை இச்சபை வேண்டிக்கொள்கின்றது என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சின் செயலாளர், ஓய்வூதிய பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இவ்விடயத்தை உள்ளடக்கும் படியும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu4.html

Geen opmerkingen:

Een reactie posten