தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமானது அரசாங்க உயர்மட்டத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஜயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் பகிரங்கமாகவே அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பாராளுமன்றத் தூதுக்குழு கடந்தவாரம் புதுடில்லிக்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் உட்பட பலரையும் சந்தித்து பேசியிருந்தது.
இந்தச் சந்திப்பின் போது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று இலங்கைவாழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதையும் கூட்டமைப்பினரிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கூறியிருக்கின்றார்.
இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்கள் குறித்தும் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் வடக்கு, கிழக்கில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. இராணுவப்பிரசன்னம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இந்தியத் தலைவர்களிடம் எடுத்துக்கூறியுள்ளனர்.
இதனைவிட இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதிலும் அரசாங்கம் பின்னடிக்கின்றது. வடமாகாணசபை செயற்பட முடியாத நிலையில் காணப்படுகின்றது போன்ற விடயங்கள் குறித்தும் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேசுவதற்கு தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார். மொத்தத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்திய விஜயமானது வெற்றியளித்துள்ளது என்றே குறிப்பிட வேண்டியுள்ளது.
கடந்த மே மாதம் இடம் பெற்ற இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றிருந்தார்.
இந்தப் பதவியேற்பை அடுத்து இந்தியப் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தில் பிரதமரை சந்தித்துப்பேசுவதற்கான தமது விருப்பத்தை கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து மூன்று மாதங்களின் பின்னர் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று கூட்டமைப்பினர் புதுடில்லி சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
கூட்டமைப்பினரின் புதுடில்லி விஜயமானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் கூட்டமைப்பினரது விஜயத்தை கண்டித்துள்ளனர்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு விஜயம் செய்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான முறைப்பாடுகளை செய்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஆச்சரியமடையவில்லை. வரலாறு முழுவதும் கூட்டமைப்பினர் இவ்வாறே செயற்பட்டு வந்துள்ளனர்.
எவ்வாறெனினும் முக்கியமான ஒரு விடயத்தில் இந்தியாவும் கூட்டமைப்பும் முரண்பாடான நிலைமையை கொண்டுள்ளன. சர்வதேச விசாரணை கூடாது என்று இந்தியா கூறுகையில் சர்வதேச விசாரணை வேண்டுமென்று கூட்டமைப்பு கூறியுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக செயற்படாமல் புலம்பெயர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றது. அவர்கள் உள்நாட்டு தத்துவத்தின் ஊடாக செயற்படாமல் சர்வதேச தத்துவத்தின் ஊடாக செயற்பட்டு வருகின்றனர்.
கூட்டமைப்பானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு வராமல் எந்த வெளிநாடுகளுக்கு சென்றாலும், எதுவித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.
இதேபோல் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இலங்கையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்கின்றமையே இன்று அரசாங்கத்திற்கு இருக்கும் பெரிய சவாலாகும். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோன தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா இணங்குவது அதிர்ச்சி அளிக்கின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனித்து இயங்கும் ஒரு சாராரை மட்டும் ஆதரிக்கும் பிரிவினைவாத கட்சியாகும். கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட ஒருபோதும் விரும்பவில்லை. கூட்டமைப்பு இந்தியாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ பேசுவதனால் இலங்கையில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைபோகக் கூடாது. இலங்கையின் நிலைப்பாட்டினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தை கண்டித்திருக்கின்றார். இந்தியாவைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தை அச்சுறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இத்தகைய அச்சுறுத்தலை விடுப்பதற்கு இந்தியாவிற்கு அதிகாரம் இல்லை. இந்தியா உத்தரவிட்டால் அதற்கு அடிபணிய வேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கின்றார்.
இவ்வாறு கூட்டமைப்பினரது இந்திய விஜயம் விமர்சிக்கப்படுகின்றது. இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியத் தலைவர்களை சந்திக்கவேண்டி ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றி சிந்திக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
இவ்வாறு கூட்டமைப்பினரது இந்திய விஜயம் விமர்சிக்கப்படுகின்றது. இவ்வாறு விமர்சிப்பவர்கள் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியத் தலைவர்களை சந்திக்கவேண்டி ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றி சிந்திக்கவில்லை என்றே தோன்றுகின்றது.
தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வொன்றை பெறுவதற்காக கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஜனநாயக ரீதியில் மூன்று தசாப்தங்களும் ஆயுத ரீதியில் மூன்று தசாப்தங்களும் போராட்டங்கள் இடம்பெற்றன. ஆயுதப் போராட்டம் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து சொல்லொணாத் துயரங்களை சந்தித்தனர். இவ்வாறு சந்தித்த பின்னரும் கூட இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்படாத சூழ்நிலை நிலவி வருகின்றது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை வந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் உறுதி வழங்கப்பட்டது. இதேபோல் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அன்றே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமும் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதி வழங்கியிருந்தார்.
இவ்வாறு உறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் 2011ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்திய அரசாங்கம் அதிலிருந்து தன்னிச்சையாக விலகியதுடன் கூட்டமைப்புடன் தனித்துப் பேசுவதற்கு தயாரில்லை என்று அறிவித்து விட்டது.
பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு அரசியல் தீர்வுக்கான மார்க்கம் திறக்கப்படும் என்று தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்த்த போதிலும் அந்த எதிர்பார்ப்புக்கள் கானல் நீராக மாறிவிட்டன. இந்த நிலையில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கூட்டமைப்பினர் தமது ஆதங்கத்தை தற்போது தெரிவித்திருக்கின்றனர்.
13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியப் பிரதமர் மோடியின் கருத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் வரவேற்றிருக்கின்றார். இதிலிருந்து தமிழ் தரப்பினரது நிலைப்பாடு விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதாகின்றது.
எனவே இனியும் தமிழ் தரப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தாது உரிய தீர்வுக்கான வழிவகைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முனைவது நல்லது.
என்னிடம் விட்டுவிடுங்கள்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன்: கூட்டமைப்பிடம் மோடி தெரிவிப்பு
இலங்கையின் அரசியல் தீர்வு விடயத்தில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் போக வேண்டும் என்பதில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அக்கறை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
எனினும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே இது குறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுவராஜ் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது, 13வது திருத்தச் சட்டமா? அல்லது அதற்கு அப்பால் சென்ற தீர்வா என்பதை தான் ஆராயவதாகவும் அதனை தன்னிடம் விட்டு விடுமாறும் மோடி கூறியதாகவும் செல்வராசா கூறினார்.
அத்துடன் இந்தியா 100க்கு 100 வீதம் தம்முடன் இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் பொன். செல்வராசா இந்த தகவல்கள் வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdeu7.html
Geen opmerkingen:
Een reactie posten