தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 december 2014

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்துக: நா.க.த அரசாங்கம் தீர்மானம்

மட்டக்களப்பில் மீன்களும் அழுது கொண்டுதான் இருக்கின்றன: அரியம் எம்.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 12:40.12 PM GMT ]
எதிர்வரும் 23,24ம் திகதி தபால்மூலமாக வாக்களிக்க வேண்டிய அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் உட்பட தமிழ் பிரமுகர்கள் அனைவரும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்க வேண்டும் என அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.
 அம்பிளாந்துறையில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கில் வாழும் நாம் கடந்த 65 வருடங்களாக சுதந்திரம் அற்றவர்களாக, அரசியல்தீர்வு இல்லாதவர்களாக அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
ஆயுதப்போர் கடந்த 2009 மௌனிக்கப்பட்டு ஐந்தரை வருடம் கடந்த நிலையிலும் நிம்மதியாக நடமாடமுடியாமலும் இறந்த உறவுகளுக்காக, ஒரு தீபம் கூடஏற்ற முடியாமலும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் காலத்தை ஓட்டுகின்றோம்.
இன்னும் சிறைகளில் ஏறத்தாள 500 தமிழ் அரசியல்கைதுகள் விடுதலை செய்யப்படாத நிலையிலும் சரண் அடைந்த முன்னால் போராளிகள் மீண்டும் கைதாகும் அவலமும் தொடர்ந்து கொண்டே செல்கிறது.
மட்டக்களப்புக்கு கடந்த 19ம்திகதி வருகை தந்த ஐனாதிபதி அவர்கள் 30 வருடத்திற்குப் பின் தற்போதுதான் மட்டக்களப்பில் மீன்பாடுவதாக கூறினார். அவருக்கு தெரியாது மீன்களும் இங்கு அழுதுகொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில்தான் ஐனாதிபதி தேர்தலுக்காக வாக்களிக்கக் போகின்றோம். இந்த தேரதலில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் மகிந்த அல்லது மைத்திரி இவர்களில் ஒருவரே வெற்றி பெறுவார்.
தற்போதைய நிலையில் பெரும்பாலானவர்கள் குடும்ப ஆட்சியை இல்லாமல்செய்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மைத்திரியின் சின்னமான அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து ஆட்சிமாற்றம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்படுகின்றனர்.
எம்மை பொறுத்தவரை ஆட்சிமாற்றத்தால் அரசியல் தீர்வு வராது என்பது உண்மை. ஆனாலும் அராஜகத்திற்கு மாற்று நடவடிக்கையாக இந்த கருத்தைசாதகமாக பரிசீலிக்க முடியும்.
அதேவேளை அரசதரப்பு அமைச்சர்கள் தொடக்கம் ஜனாதிபதி வரையும் வடகிழக்கு மக்களின் அரசியல் தலைமையாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்றும் எம்மை இந்த நாட்டின் தீண்டாச்சரக்கு போன்றும் ஏளனம் செய்துவருவதை காணலாம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசாங்கம் இவ்வாறு ஒரம்கட்டுவதானது முழு தமிழ் இனத்தையும் அவமதிக்கும் செயல் என்பதை உணர்வுள்ள தமிழர்கள் உணர்ந்து கொண்டு தற்போதய ஐனாதிபதி மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதே எமது கருத்தாகும்.
அதற்காக "மைத்திரி பட்டு வேட்டி தருவார் என்று நாம் கூறவில்லை. எஞ்சி இருக்கும் கொமணத்தையாவது உருவாமல் பாதுகாக்க மாற்றம் ஒன்றுக்காக நாமும் வாக்களிப்பதுதான்" சிறந்த புத்திசாரூதியமாகும் என்பதை அனைவரும் குறிப்பாக புத்தியீவிகளும் மதப்பெரியார்களும் ஏற்றுள்ளனர். குறிப்பாக திருமலை மறைமாவட்ட பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்களும் ஆட்சி மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு பல்வேறுபட்ட சமூகப் பெரியார்கள், சிவில் சமூக ஆர்வலர்களும் இக்கருத்துக்களை ஏற்றுள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நடாத்திய மக்கள் சந்திப்பில் ஒரு ஆட்சி மாற்றத்தை வடகிழக்கு மக்களும் விரும்புகின்றனர். இருந்தபோதும் இறுதி முடிவு தலைவர் சம்பந்தன் ஐயா அறிவிப்பார் என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajr2.html
ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்துக: நா.க.த அரசாங்கம் தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 01:55.33 PM GMT ]
ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில், பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அனைத்துலக சமூகத்திடம் கோரும் தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
கடந்த வாரம் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் தமிழீழம் உள்ளடங்கியதான அவர்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்து அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அத்தீர்மானம் அனைத்துலக சமூகத்திடம் கோரியுள்ளது.
இதவேளை புலம்பெயர்ந்தோர் தமிழர் அமைப்புகள் அனைத்திடமும், பொது வாக்கெடுப்புக் கோரி தீர்மானம் இயற்றுமாறும் அதற்கான பரப்புரைகளில் ஈடுபடுமாறும் அத்தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுமையான வடிவம்:
1. சனநாயகமே ஆட்சிமுறைகளுள் அதி உயரியது என்பதை அறிந்து கொண்டும்.
2. அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் உரிமையே சனநாயகத்தின் அடித்தளம் என்பதைப் புரிந்து கொண்டும்.
3. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று அனைத்துலக மனித உரிமைகள் பட்டயத்திலும் பன்னாட்டு குடியியல் அரசியல் உரிமைகள் பிரகடனத்திலும், ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு இணைவான சர்வதேச விதிகளின் அடிப்படையிலான நாடுகடளுக்கு இடையிலான நட்புறவும் ஒத்துழைப்பு தொடர்பான பட்டயத்திலும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானம் 2625,  ஒக்டோபர் 24, 1970 தெரிவு செய்யும் உரிமை உறுதியளிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டும்.
4. அரசாங்கத்தை தெரிவு செய்யும் உரிமை, ஒரு மனிதன் எந்த அரசியல் குழுமத்தின் கீழ் வாழ விரும்புகிறான் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைக்கும் சமமாகப் பொருந்தும் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டும்.
5. எந்த அரசாங்கத்தின் கீழ் வாழ்வது எனத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், எந்த அரசியல் குழுமத்திடன் வாழ்வது எனத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அடிப்படை மனித உரிமை என்பதனைக் கவனத்தில் கொண்டும்.
6. கொசாவா பொது வாக்கெடுப்பு, தெற்கு சூடான் பொது வாக்கெடுப்பு, செர்பியா பொது வாக்கெடுப்பு, புனித வெள்ளி உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்ட இனி நடக்கவிருக்கிற வட அயர்லாந்து வாக்கெடுப்பு மற்றும் போகன்வில் பொது வாக்கெடுப்பு ஆகியவற்றைக் குறித்துக் கொண்டும்.
7. ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்புக்கு பிரித்தானிய அரசு கொடுத்த ஒத்துழைப்புக்கும் அதன் அரசியல் முதிர்ச்சிக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டும்.
8. தேசிய முரண்களைத் தீர்ப்பதற்கு ஒரு வழிமுறையாக பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படுகின்றன என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டும்.
9. 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சுதந்திர, மதச்சார்பற்ற இறையாண்மை உள்ள ஒரு அரசை அமைப்பதற்கு தமிழ் மக்கள், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஆணையிட்டதும், அது, 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தொடர்ச்சியாக, பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டும்.
10. முற்று முழுதாகச் சிங்களவர்களைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது கொன்றொழிக்கப்பட்டனர் என்பதைக் கருத்தில் எடுத்துக் கொண்டும்.
11. தனது குடிமக்களைப் பாதுகாப்பதும் பேணுவதுமான சுதந்திரமும் இறைமையும் கொண்ட நாடு பரிகாரநீதியின் சட்டபூர்வமானதும் தார்மீகரீதியானதுமான வெளிப்பாடு என்பதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டும்.
12. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதன் அரசியல் யாப்பில் உறுதிசெய்யப்பட்டவாறு, சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழம் என்ற நாட்டை அமைக்கப் பாடுபடும் என்பதனை மீளவும் உறுதி செய்து கொண்டும்.
13. இலங்கைத்தீவில் வசிக்கும் தமிழ்மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்குப் பொதுசன வாக்கெடுப்புக் கோருகிறார்கள் என்ற 2012ம் ஆண்டு டிசம்பரில் பவ்லோ நகரில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது பாராளுமன்ற அமர்வின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மீள நினைவில் நிறுத்திக் கொண்டும்.
14. ஈழத்தமிழர்கள் தம் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை மனதில் இருத்திக் கொண்டும்.
15. தமிழ்த் தேசியப் போராட்டம் சர்வதேச பரிமாணத்தைப் பெருமளவு அடைந்து வருவதை அங்கீகரித்துக் கொண்டும்.
16. சர்வதேச அரங்கத்தில் ஒரு காத்திரமான செயல்பாட்டை சாத்தியப்படுத்த வேண்டுமென்றால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒரு வலுமிக்க அரசியல் சக்தியாக மாற வேண்டும் என்பதைம் கவனத்தில் எடுத்துக் கொண்டும்.
17. ஒரு வலுமிக்க அரசியல் சக்தியாக மாறுவதற்கு ஒரு ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை என்பதையும் அங்கீகரித்துக் கொண்டும்.
இவ்வாறாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒருமனதாகத் தீர்மானம் எடுத்துக் கொள்கிறது:
I. தமிழீழமாக அமையும் இலங்கைத்தீவின் வடகிழக்கு பகுதியில் சட்டபூர்வமாக வாழுகின்ற மக்களிடயேயும், தமிழீழத்தினை பூர்வீக தொடர்புடையவர்களாக இலங்கைத் தீவுக்கு வெளியே வாழும் மக்களிடையேயும் தமிழீழம் உள்ளடங்கியதான அவர்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்து அவர்கள் தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றது.
II. புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் அனைத்திடமும், பொது வாக்கெடுப்புக் கோரி தீர்மானம் இயற்றுமாறும் அதற்கான பரப்புரைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.
III. உலகெங்கும் உள்ள மத்திய மாநில அரசுகளையும், அரசியல் கட்சிகளையும், இலங்கைத்தீவில் நிலவும் தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கு நிலையான அரசியல் தீர்வுக்காக இவ்வாறான தீர்மானத்தினை நிறைவேற்றவும் கோருகின்றது.
IV. அனைத்துலக அரசுசாரா அமைப்புக்களையும், குடிசார் சமூகத்தையும் இத்தீர்மானத்தினை ஆதரிக்கும்படி கோருகின்றது.
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajr5.html

Geen opmerkingen:

Een reactie posten