தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

சிறீலங்கா சனாதிபதித் தேர்தலும், இந்தியாவின் குழப்பமும்! அதன் பின்னணியும்!

ஐ.தே.க வின் உறுப்பினர்கள் 4 பேர் மகிந்த பக்கம் தாவினர்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:00.54 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 4 பேர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் இன்று அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப் போவதாக தெரிவித்ததாக ஜனாதிபதி தேர்தல் பிரசார அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாத்தளை நகர சபை உறுப்பினர் துஷார பிரனாந்து, மாத்தளை பிரதேச சபை உறுப்பினர் அசித்த சேனாரத்ன, தொடாங்கொடை பிரதேச உறுப்பினர் பி.ஜே.எ.யு சிரிசேன, ஊவா பரணகம பிரதேச சபை உறுப்பினர் டி.எம். சிரிசேன ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaepy.html
முந்தையன்கட்டுக் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்ற நடவடிக்கை!
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:09.43 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய முத்தையன்கட்டுக் குளம் நிரம்பியதால் அதன் வான் கதவுகளைத் திறந்து மேலதிக நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார். முத்தையன்கட்டு நீர்ப்பாசனக் குளத்தின் கீழுள்ள 6 குளங்களில் ஏற்கனவே வான் பாய்ந்து வரும் நிலையில், முத்தையன்கட்டு குளத்தின் நீர் மட்டம் தற்போது 20 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சராசரியாக 57 மில்லிமீற்றர் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் குளத்தின் நீர்மட்டம் இன்று திங்கட்கிழமை காலைக்குள் 21 அடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முத்தையன்கட்டு குளத்தின் 2 வான் கதவுகளையும் திறந்து விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முத்தையன்கட்டு குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்படும் போது, வான் பாயும் பிரதேசங்களான வசந்தபுரம், மல்லாககண்டல், மற்றும் கன்னுத்திரபுரம் ஆகிய இடங்களை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, முத்தையன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள தண்ணிமுறிப்பு குளத்திலும் நீர்மட்டம் 20 அடி 9 அங்குலமாக காணப்படுகின்றது. இந்த குளத்தில் வான் கதவுகளும் திறக்கவேண்டிய தேவையுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முத்தையன்கட்டு குளத்தின் கீழுள்ள தட்டமலை, விஸ்வமடு, கணுக்கேணி, உடையார்கட்டு, மருதமடு, மடவாளசிங்கம் ஆகிய குளங்கள் ஏற்கனவே வான் பாய்;ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaepz.html
இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது: ரஞ்சன் ராமநாயக்க
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:18.23 AM GMT ]
இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளதாக பிரபல நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கலைஞர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல கோடி ரூபா செலவில் வெளிநாட்டு கலைஞர்களுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கூட்டமைப்பு அரசாங்கம் இலங்கைக் கலைஞர்களை அவமரியாதை செய்துள்ளது.
ஒரு சிலரைத் தவிர இலங்கைக் கலைஞர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை.
இலங்கை பற்றி எவ்வித தெளிவும் அற்றவர்களை அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்தின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ரஞ்சன் ராமநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep0.html
பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம நிபந்தனை பிணையில் விடுதலை
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:26.15 AM GMT ]
பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பத்தேகம நீதவான் சந்தன எதிரிமான்ன பிணையில் இன்று விடுதலை செய்தார்.
பத்தேகம நீதிமன்ற பிரிவில் இருக்கும் 8 பொலிஸ் நிலையங்களுக்கு முத்துஹெட்டிகம செல்லக் கூடாது என நீதவான் தடை விதித்துள்ளார்.
தலா இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு நெருங்கிய உறவினர்களின் சரீர பிணையில் பிரதியமைச்சரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அவரை கடுமையாக எச்சரித்த நீதவான், நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்திருந்த நிலையில், சிங்கப்பூர் சென்றாலும் அங்கு செல்லும் போது நீதிமன்றத்தை மதித்து 29 ஆம் திகதி சரணடைவதாக ஊடகங்களில் தெரிவித்ததை கவனத்தில் கொண்டு பிணை வழங்குவதாக கூறியுள்ளார்.
பிரதியமைச்சர் போன்ற மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை உலகமே பார்த்து கொண்டிருக்கும் போது அவர்கள் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை முத்துஹெட்டிகமவின் சாரதியை ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் தடையுத்தரவுக்கு அமைய முத்துஹெட்டிகம, வந்துரம்ப, பத்தேகம, யக்கலமுல்ல, உடுகம, நெலுவ, இனிதும, நாகொட, போத்தல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது.
பொலிஸ் நிலையத்தில் ஏதேனும் முறைப்பாடு செய்ய வேண்டுமாயின் அதனை உதவி பொலிஸ் அத்தியட்கரிடம் மேற்கொள்ளுமாறும் நீதவான் கூறியுள்ளார்.
இந்த வழக்கு ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep1.html
சிறீலங்கா சனாதிபதித் தேர்தலும், இந்தியாவின் குழப்பமும்! அதன் பின்னணியும்
[ திங்கட்கிழமை, 29 டிசெம்பர் 2014, 09:40.58 AM GMT ]
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அதனை எதிர்கொள்வது எப்படி என்ற வாதப்பிரதிவாதங்களும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவராலயங்களிடமும், முக்கிய நாடுகளின் அரச தலைமைகளிடமும் ஏற்பட்டது என்பதுவும் பலராலும் யூகிக்கக் கூடிய விடயமே.
எனினும் ஆரம்பத்தில் இவர்களின் நிலைப்பாடு குறித்த பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்தமையையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். குறிப்பாக இந்தியா மற்றும் மேற்குலகம் ராஜபக்ச குறித்து அவ்வளவாக திருப்தி கொள்ளவில்லை என்ற எதிர்பார்ப்பே எங்கும் இருந்தது.
ஆனால் சமீபத்தில் நடந்த சார்க் மாநாடுகளின் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி ராஜபக்ச வெற்றிபெற வாழ்த்தியதாக வெளிவந்த செய்தி இவ்விடத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உண்மையில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெறுவதை மோடி விரும்புகிறாரா என்பதே இக்குழப்பங்களின் பின்னணி.
உண்மையில் இந்திய நிலைப்பாட்டின் பின்னணி தான் என்ன? சிறீலங்கா சனாதிபதித் தேர்தல் குறித்து ஆய்வொன்றை இந்திய வெளிவிவகாரத்துறை மேற்கொண்டது. இதில் பலரின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது. ராஜபக்சவிற்கு நெருக்கமான இந்து ராம், சுப்பிரமணியம் சுவாமியும் இதில் அடக்கம்.
என்ன குளறுபடிகள் செய்தாவது ராஜபக்சவே வெல்வார் என்பதை இத்தரப்புக்கள் வலியுறுத்தி நின்றன. எப்படியும் வெல்லக்கூடிய ஒருவரை தேவையில்லாது பகைத்துக் கொள்வது இந்தியாவின் நலனை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கும் எனவும் அடித்துக் கூறப்பட்டது.
இன்னும் மலையாள இனத்தவர்களால் நிறைந்து நிற்கும் இந்தியாவின் தீர்மானிக்கும் மையமான சவுத்புளக் இம்முடிவையே தானும் வலியுறுத்தி நின்றது. இதனையே இந்தியப் பிரதமர் மோடியும் பிரதிபலிக்க முனைந்து நின்றமையே இந்தியாவின் குழப்பகரமான ஆரம்ப செயற்பாடுகளின் வெளிப்பாடு.
சரி இந்தியா இந்நிலைப்பாட்டிலேயே தற்போதும் தொடர்ந்தும் உள்ளதா என்றால் இல்லை என்பதே அதற்கான பதில். இவ்வாறான ஆரம்ப குழப்பங்களின் பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவல் கடந்த மாத இறுதியில் சிறீலங்காவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
உறவை பலப்படுத்துதல் என்ற போர்வையில் அவ்விஜயம் அமைந்தாலும் சனாதிபதித் தேர்தலின் போக்கை தானே நேரடியாக கண்டறிவதே அவரின் பிரதான நோக்கமாக அமைந்தது. அவ்விஜயத்தின் போதே ராஜபக்ச தோல்வியை தழுவுவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு என்பது கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அதை நோக்கிய இந்திய நகர்வுகளும் முனைப்புப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த இந்திய மாற்றத்தை அனுமானித்துள்ள ராஜபக்ச தரப்பும் தமது நகர்வுளை நெருங்கியவர்களுடன் பலப்படுத்தி வருகிறது.
இதைக்கடந்தும் பல குழப்பங்கள் இந்திய மற்றும் மேற்குல அரசுகளிடம் காணப்படுகிறது. குறிப்பிட்டவாறு சனவரி 8ல் தேர்தல் நடாத்தப்படுமா? தேர்தல் நடத்தப்பட்டாலும், தோல்வியுறும் நிலை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப்படுமா? இராணுவத்தை வைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ராஜபக்ச முயல்வாரா? ராஐபக்ச தோல்வியடைந்தால் சுமுகமான ஆட்சி மாற்றம் சாத்தியமா? தேர்தலில் வரலாறு காணாத குழறுபடிகள் நடந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? என பல விடயங்கள் இவர்களை அதீத குழப்பத்தில் ஆழ்த்திய வண்ணமே உள்ளன.
நேரு குணரத்தினம்
nehrug2015@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep2.html

Geen opmerkingen:

Een reactie posten