தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

சீனாவின் கனவுக்கு ஆப்பு வைக்குமா எதிரணி?

கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மூன்று கட்டங்களில் நடவடிக்கை: சுதந்திரக் கட்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 07:21.56 AM GMT ]
கட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மூன்று கட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு விரோதமான முறையில் செயற்பட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மூன்று கட்டங்களாக கட்சித் தாவிய உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சி உறுப்புரிமையை ரத்து செய்தல் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் மற்றும் கட்சியிலிருந்து நீக்குதல் ஆகிய மூன்று கட்டங்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr0.html
நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் பயணிக்கிறது: அனுரகுமார திஸாநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 07:29.25 AM GMT ]
நாடு அண்மைய கால வரலாற்றில் பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பணம் கொள்ளையிடப்பட்டமையே இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் அதிகாலையில் எழுந்ததும் யார் எந்த பக்கம் தாவினர், யார் தாவ போகின்றனர் என்பதையே பார்க்கின்றனர். என்ன அரசியல் இது?.
பணத்திற்கு விற்பனையாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாட்டில் இருக்கிறனர். பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாவுக்கு விற்பனையாகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் 5 கோடி ரூபா.
திஸ்ஸ அத்தநாயக்கவை பாருங்கள். மூன்று நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் அரசாங்கத்தை தோலுரித்தார். மூன்று நாட்களின் பின்னர் அரசாங்கத்திற்கு சென்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை வர்ணித்து வருகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr2.html
தமிழக மீனவர்களின் 10 நாள் போராட்டம் நிறைவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 07:55.23 AM GMT ]
தமிழ் நாட்டு பிராந்திய மீனவர்கள் கடந்த 10 நாட்கள் நடத்திய போராட்டம் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன.
இலங்கை நாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதியிலிருந்து போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
போராட்டத்திற்காக ராமேஷ்வரம், காரைக்கால், புதுக்கோட்டை போன்ற குறிப்பிடபட்ட பிரதேசங்களிலுள்ள 3500 மீனவர்கள் ஒன்றிணைந்திருந்ததாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
எப்படியிருப்பினும் இந்நாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்த பின்னரே தமிழக மீனவர்கள் போராட்டத்தை கை விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மீண்டும் அவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr3.html
சீனாவின் கனவுக்கு ஆப்பு வைக்குமா எதிரணி?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2014, 08:36.08 AM GMT ]
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமான கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் எதிர்காலமே இப்பொது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
இதுவரை, இலங்கையில் பலவேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சக்தி, விமானநிலைய கட்டுமானம் என்று பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் பிரதான அபிவிருத்தித் திட்டங்களுடன் மேற்கொள்ளப்பட்டவை தான்.  ஜப்பான், சீனா, இந்தியா, கொரியா போன்ற நாடுகளின் கொடைகளிலோ, அல்லது கடன்களிலோ தான் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தித் திட்டங்களில், சீனாவே அதிக பங்களிப்பை செய்திருக்கின்றது.
சீனாவின் இந்த அபரிமிதமான பங்களிப்பை, இலங்கையில் மட்டுமின்றி, பிராந்திய ரீதியாகவும், உலகலாவிய ரீதியாகவும் சந்தேகத்துடன் பார்க்கும் போக்கு காணப்படுகிறது.
இலங்கையில் சீனா மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதார இலக்குகளுக்கும் அப்பால், - இராணுவ நோக்கங்களை அடிப்படையாக வைத்து நகரத் தொடங்கியுள்ளதாக சந்தேகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வலுத்து வருகிறது.
ஆனாலும், இந்தியாவின் கவலைகளையும் பொருட்படுத்தாமல், சீனாவுடனான நெருக்கத்தை தற்போதைய அரசாங்கம் மென்மேலும் வலுப்படுத்திக் கொள்வதிலேயே ஆர்வமாக இருக்கின்றது.
கடந்த செப்டெம்பர் மாதம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொழும்பு வந்திருந்த போது, செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளில் ஒன்று தான் கொழும்பு துறைமுகநகர அபிவிருத்தித் திட்டமாகும்.
காலிமுகத்திடலுக்கு அப்பால் கடலுக்குள் உருவாக்கப்படும் சிறிய தீவு ஒன்றை பொருளாதாரக் கேந்திரமாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.
எட்டு ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் 233 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் 170 ஹெக்ரேயர் நிலப்பரப்பு சீன நிறுவனத்தின் கையிலேயே இருக்கப்போகிறது.
எஞ்சிய நிலப்பரப்பு தான் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்.
கேந்திர முக்கியத்துவம் மிக்க கொழும்புத் துறைமுகத்துக்கு அருகான இடத்தில் அமையவுள்ள இந்த துறைமுக நகரம், சீனாவின் கட்டுப்பாட்டில் செல்வதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் விரும்பும் எனக் கருத முடியாது.
இந்த திட்டத்துக்காக, சீனா இதுவரையில்லாதளவுக்கு 1.43 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளது. கிட்டத்தட்ட இதனை, சீனாவின் ஒரு கனவு திட்டம் என்று கூட குறிப்பிடலாம்.
இந்தியப் பெருங்கடலின் வழியாக ஐரோப்பாவையும், சீனாவின் தென் கிழக்குப் பகுதியையும் இணைக்கும் கடல் வழிப் பட்டுப்பாதையின் கேந்திர மையமாகவே கொழும்புத் துறைமுகம் அமைந்துள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்ள இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்து விட்டது.
அண்மையில் மாலைதீவும் கூட அதற்காக இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் வெற்றிக்காக மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான கேந்திர நிலையமாகவும் இலங்கை அமைந்துள்ளது.
ஏற்கனவே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் அதனைச் சார்ந்த உட்கட்டமைப்பு திட்டங்களையும் செயற்படுத்திய சீனா, அடுத்த கட்டமாக கொழும்புத் துறைமுகத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.
ஏற்கனவே கொழும்புத் துறைமுகத்தின் தென்பகுதியில், 500 மில்லியன் டொலர் செலவில் கொள்கலன் முனையம் ஒன்றை அமைத்துக் கொடுத்த சீனா அதன் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
இந்த இறங்குத் துறைப் பகுதியில் தான் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகளும், போர்க்கப்பல்களும் அவ்வப்போது வந்து தரித்து நின்று விட்டு செல்கின்றன.
இது போலவே, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீனா செயற்படுத்தினால் அதன் மீதான சீனாவின் கட்டுப்பாடு இன்னும் அதிகமாகும்.
அது இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்தியாவும் இது குறித்து கரிசனை கொண்டிருக்கின்றது.
எல்லலைமீற முற்படுகின்ற தருணங்களில் இலங்கை அரசாங்கத்தை இந்தியா எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.
என்றாலும், சீனாவின் பக்கம் இலங்கை அதிகளவில் சாய்ந்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவே, இந்தியா பெரியளவில் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் தான், தாம் ஆட்சியமைத்தால், சட்டரீதியற்ற வகையில், சீனாவுடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று எதிர் கட்சிகள் அறிவித்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன அதிகாரத்துக்கு வந்தால் துறைமுக நகரத் திட்டம் கைவிடப்படும் என்றும் அது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அது தவிர பல்வேறு சுற்றுசூழல் அமைப்புகளும் கூட, இந்த திட்டத்தினால், சுற்றாடலுக்குப் பாதிப்பு வரும் என்று இப்போது எதிர்ப்பை வெளியிடத் தொடங்கியுள்ளன.
பாணந்துறை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கடலோரப் பகுதியின் சுற்றாடலுக்கு இந்த துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சூழல் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இயற்கையின் விதியை மீறி, கடலை நிரப்பி செயற்கையான தீவை அமைக்கும் திட்டம், சுற்றாடலின் சம நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
ஆனால் தாம் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தான், இந்த திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவோ, இந்த திட்டம் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில், இதனை நடைமுறைப்படுத்த அனுமதிக்க முடியாது என்கின்றார்.
ஆனால், இதன் உண்மையான நோக்கம் அதுவா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
முன்னதாக, சீனாவைச் சாய்ந்து செல்லும் போக்கில் இருந்து விலகி இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவோம் என்று ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
அதையடுத்து, சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட முறையற்ற உடன்பாடுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், கடந்தவாரம் சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு அளித்த பேட்டியில், சீனாவுடன் நல்லுறவு பேணப்படும் என்றே கூறப்பட்டுள்ளது.
அதாவது, சீனாவை எதிர்ப்பதனாலும், அதனை வெளிப்படையாக செய்ய முடியாத அறிவிக்க முடியாத நிலையில் தான், எதிரணி உள்ளது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுவதற்கு சீனாவுக்கு ஒரு காரணத்தை முன்வைத்தாக வேண்டும்.
இந்தியாவை சமாதானப்பத்துவதற்குத் தான் இதனைக் கைவிடுகிறோம் என்று வெளிப்படையான காரணத்தைக் கூற முடியாது. எனவே தான், சுற்றுசூழல் காரணத்தை முன்வைக்க எதிரணி தயாராகியுள்ளதாக கருதப்படுகிறது.
சுற்றுசூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தை அடிப்படையாக வைத்து, இந்த திட்டத்தை கைவிட முடிவு செய்தால், அதனை சீனாவினால் அவ்வளவாக எதிர்க்க முடியாது.
என்றாலும், இந்த விடயத்தில், சீனாவுடன் அதிகளவுக்கு எதிரணியால் முரண்பட முடியும் எனக் கூறவும் முடியாது. சீனாவிடம் இலங்கை பெற்றுள்ள கடன்கள், அதற்கு இலங்கை அரசாங்கம் கொடுக்க வேண்டிய வட்டி என்பவற்றக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இப்போதைய அரசாங்கம் மட்டும் பொறுப்பல்ல.
தற்போதைய அரசாங்கம் வாங்கும் கடன்களுக்கு, அடுத்து வரப்போகின்ற அரசாங்கம் பதில் கூறித் தான் ஆக வேண்டும்.  அவற்றை ஒரேடியாக வெட்டித் தீர்ப்பதற்கு ஒன்றும், இந்தக்கடன் சுமைகள் சாதாரணமானதல்ல.
எனவே, சர்வதேச அரசியல் போக்குகளையும், சீனாவின் செல்வாக்கையும் கருத்தில் கொண்டு, அடுத்து ஆட்சியமைக்க எத்தனிக்கின்ற தரப்புகள் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடித்தாக வேண்டிய நிலையில் தான் இருக்கின்றன.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், சீனாவின் திட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும் கொழும்புத் துறைமுகநகரத் திட்டத்திற்கு ஆப்பு வைப்பதில் எதிரணி குறியாக இருக்கின்றது.
அதற்காக சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் எல்லாத் திட்டங்களுமே கைவிடப்பட்டு விடும் என்று அர்த்தமில்லை. அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டால், இலங்கை பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை எதிர் கொள்ளும்.
அதேவேளை, மற்றெல்லாத் திட்டங்களில் கைவைத்தால் கூட சீனா அவ்வளவு கவலை கொள்ளாது.
கொழும்பு துறைமுக நகரத் திட்ட விடயத்தில், இலங்கை மீது சீனா மிகப் பெரிய அழுத்தங்களைக் கொடுக்கவே முனையும்
ஏனென்றால் அது சீழுனாவின் கனவுத் திட்டத்துடன் தொடர்புடையது.
- ஹரிகரன் -
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr4.html

Geen opmerkingen:

Een reactie posten