சிறிலங்காவில் 2005ம் ஆண்டு நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் 10 ஆண்டுகள் கழித்தும் இன்றும் ஏற்படுத்தும் அதிர்வலைகள் பல. விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் ரணிலின் தோல்விக்கு காரணம் என விவாதங்கள் தொடர்கின்றன.
விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு தான் மகிந்த ராஜபக்ச வெல்லக் காரணம் என்றும், அதை வைத்தே தாம் விரும்பிய ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வரவில்லை எனப் புலிகள் மேல் தடைகளை விதித்த மேற்கத்தைய உலகம் ஒரு புறம், அது புலிகளின் உச்ச தவறு என இன்றும் சப்பை கட்டும் தமிழர் ஒரு புறம் என விவாதங்கள் தொடர்கின்றன.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன? இவர்களின் வாதங்கள் சரியானவையா? புள்ளி விபரங்களுடன் ஒரு அலசல் செய்வோம்.
முதலில் 2005ல் போட்டியிட்ட ரணில் மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்
2005 சிறிலங்கா சனாதிபதித் தேர்தல்
மாவட்டம் ரணில் மகிந்த மொத்த வாக்குகள்
மட்டக்களப்பு 1,21,514 28,836 1,54,615
திருகோணமலை 92,167 55,680 1,52,428
அம்பாறை 1,59,198 1,22,329 2,88,208
யாழ்ப்பாணம் 5,523 1,967 8,524
வன்னி 65,798 17,197 85,874
மொத்தம் 4,44,200 2,26,009 6,89,649
2005 தேர்தலில் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ரணிலே வெற்றி பெற்றார் என்பதும், இதைக் கடந்து சிங்கள தேசத்தின் 16 மாவட்டங்களான கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரேலியா, புத்தளம். பதுளை ஆகிய 6 மாவட்டங்களையும் ரணில் வென்றார் என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
சரி இப்போது; 2010ல் போட்டியிட்ட சரத் பொன்சேகா மற்றும் மகிந்த ஆகியோருக்கு தமிழர் தாயகத்தில் கிடைத்த வாக்குகளை மாவட்ட ரீதியாக நோக்குவோம்
2010 சிறிலங்கா சனாதிபதித் தேர்தல்
மாவட்டம் பொன்சேகா மகிந்த மொத்த வாக்குகள்
மட்டக்களப்பு 1,46,957 55,663 2,16,287
திருகோணமலை 87,661 69,752 1,64,504
அம்பாறை 1,53,105 1,46,912 3,09,474
யாழ்ப்பாணம் 1,13,877 44,154 1,85,132
வன்னி 70,367 28,740 1,07,680
மொத்தம் 5,71,967 3,45,221 9,83,077
ரணில் போன்றே சரத் பொன்சேகாவும் தமிழர் தாயகத்தில் அனைத்து ஆறு மாவட்டங்களிலும் மகிந்தவை கடந்து அமோக வெற்றி பெற்றார்.
ஆனால் சிஙகள தேசத்தின் 16 மாவட்டங்களில் நுவரேலியா தவிர எந்தவொரு மாவட்டத்திலும் பொன்சேகா வெற்றி பெறவில்லை.
அதாவது கடந்த இரண்டு சனாதிபதித் தேர்தலிகளிலும் தமிழ் பேசுகின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ராசபக்சவால் வென்றெடுக்க முடியவில்லை என்பதையே இம் முடிவுகள் வெளிகாட்டி நிற்கின்றன.
2005ம் ஆண்டு தேர்தலில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 191 வாக்குகளாலும், 2010 ஆண்டுத் தேர்தலில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 446 வாக்குகளாலும், ராஜபக்ச தமிழர் தாயகத்தில் பின்தங்கியே இருந்துள்ளார்.
இதில் 2005 மற்றும் 2010 தேர்தல்களில் பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ராஜபக்சவிற்கு எதிராக முறையே ரணில் மற்றும் பொன்சேகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது என்பதும், 2010ல் தமிழர் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவிற்கு வெளிப்படையான ஆதரவு நிலையை கொண்டிருந்தது என்பதுவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
சரி விடயத்திற்கு வருவோம்.
2010ல் பொன்சேகா 2005ல் ரணில் பெற்றதைவிட 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 அதிகம் வாக்குகளை தமிழர் பகுதிகளில் அதிகமாக பெற்றிருந்தார்.
சரி தமிழர் தரப்பில் எந்தவொரு வாக்குப் புறக்கணிப்பும் இன்றி 2010 போல் 2005 இலும் வாக்களிப்பு நடைபெற்றிருந்தால் ரணில், பொன்சேகா அதிகமாகப் பெற்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 767 வாக்குகளைப் பெற்றார் என வைத்துக் கொள்வோம்.
ஆனால் 1 லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகளால் ரணில் 2005ல் மகிந்தவிடம் தோல்வியுற்ற நிலையில் எவ்வாறு அவரால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற கேள்விக்கு யாராலும் பதிலளிக்க முடியுமா?
இதைத்தவிர விடுதலைப் புலிகள் வாக்கு புறக்கணிப்பு என்று தெரிவித்ததின் அர்த்தம் என்ன?
விடுவிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் எதற்காக ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கு சென்று இன்னொரு தேசத்தின் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
எனினும், அதைக் கடந்து யாழ் மாவட்டம் தவிர ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வாக்குப் புறக்கணிப்பை அவர்கள் பெரியளவில் முன்னெடுக்கவில்லை என்பதை முறையே 2005 மற்றும் 2010 தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை கவனத்தில் கொள்ளும் எவரும் அவதானிக்கலாம்.
வாக்குப் புறக்கணிப்பால் தமிழர் பகுதிகளில் யாருமே வாக்களிக்கவில்லை என்ற தோற்றப்பாடே இன்று வரை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் தமிழர் பகுதிகளில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 200 வாக்குகளை ரணில் எவ்வாறு பெற்றார் என்பதை யாரும் தெரிவிக்க முடியுமா?
2005 தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட போது அவ்வாறான ஒரு தோற்றப்பாடு இருந்தது என்பது உண்மையே, எனினும் 2010 தேர்தல் முடிவுகள் அக்கணிப்பு தவறு என்பதை துல்லியமாக வெளிப்படுத்தியது என்பதை இன்று வரை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே மேற்கண்ட புள்ளி விபரங்கள் துலாம்பரமாக காட்டி நிற்கின்றன.
ஆக மொத்தத்தில் இனியாவது விடுதலைப் புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே 2005ல் மகிந்த வெற்றிபெற வழிகோலியது என்ற தவறான வாதத்தை அனைவரும் முழுமையாக கைவிடுவார்களா?
மாறாக எந்தவொரு சிங்களத் தலைமையும் தமிழர் மனங்களை என்றும் வெல்லவில்லை, வெல்லவும் முடியாது அவ்வாறு நடந்து கொள்ளவும் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்களா?
நேரு குணரத்தினம்
Nehrug2015@gmail.com
Nehrug2015@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszCQUKaeu0.html
Geen opmerkingen:
Een reactie posten