ஒருவரைச் சந்திக்கச் செல்வதாயின் ஏதாவது ஒரு கையுறை கொண்டு செல்ல வேண்டும் என்பது நியதி.
எதுவுமற்ற குசேலர் என்ன செய்யமுடியும்? இருந்தும் குசேலரின் மனைவி எஞ்சிக் கிடக்கும் அவலைக் குளைத்து குசேலரிடம் கொடுத்து விடுகிறாள். குசேலர் அவலோடு கிருஷ்ணபரமாத்மாவைச் சந்திக்கிறார்.
குசேலரைக் கண்ட கிருஷ்ணபரமாத்மா அகமகிழ்வடைந்ததுடன், குசேலர் கொண்டு வந்த அவலையும் உண்டு மகிழ்ந்து குசேலரின் வறுமையை போக்கினார் என்பது புராணக் கதை.
இந்தக் கதைக்கும் இன்றைய தினம் வட பகுதிக்கு வருகை தந்து தேர்தல் பிரசாரம் செய்யவுள்ள எதிரணியின் பொது வேட்பாளர் அடங்கிய குழுவினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரம் இன்று வடமாகாணத்தில் நடைபெறவிருக்கின்றது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைதிரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்றைய பிரசாரக் கூட்டத்தில் பேச இருக்கின்றனர்.
2009ம் ஆண்டு வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த மிக மோசமான யுத்தத்தின் பின்னர் அந்த யுத்தத்தை நடத்தியவரை எதிர்த்துப் போட்டியிடும் மைத்திரியும் அவரது அணியினரும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் தேர்தல் பிரசாரம் நடத்துவதென்பது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படக் கூடியது.
2009ம் ஆண்டு நடந்த யுத்தத்தின் பின்னர் எல்லாம் இழந்து ஒரு தனி இனமாக, இந்த நாட்டில் ஓரம் கட்டப்பட்ட இனம் என்ற மன உளைச்சலோடு இருக்கக் கூடிய தமிழ் மக்களைச் சந்திக்க வருகின்ற எதிரணியினர் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு ஏதாவது கொண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்ற ஒரு பலமான அணியினர் வடக்கிற்கு வருகை தந்து தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கவுள்ளனர்.
இவ்வாறு வாக்குகளைக் கேட்கும் போது, அன்பார்ந்த தமிழ் மக்களே! நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் தாயகமான வடக்கையும் கிழக்கையும் இணைத்து சுயாட்சி அதிகாரத்தைத் தருவேன் என்றாவது மைத்திரிபால சிறிசேன சொல்ல வேண்டும்.
அல்லது மைத்திரி ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்று சந்திரிகாவும் ரணிலும் கூறவேண்டும்.
இதைச் சொல்லாமல் வெறுமனே தேர்தல் பிரசாரம் செய்வது தமிழ் மக்களுக்குப் பிரயோசனப்பட மாட்டாது.
மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனமாகிய 100 நாள் வேலைத்திட்டம் என்பதை முன்வைத்துப் பிரசாரம் செய்வதாலும் தமிழ் மக்கள் திருப்தியடைய மாட்டார்கள்.
எனவே வறுமைப்பட்ட குசேலர் கூட அவலைக் கொண்டு சென்றார் எனில், பலமான எதிரணியினர் என்று கூறக் கூடிய நீங்கள், நொந்துபோய் இருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கு அவர்களின் துன்பத்திற்கு முடிவு கட்டக் கூடிய பெறுமதியான வாக்குறுதியை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறோம்.
அந்த வாக்குறுதி இன்றைய உங்களின் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaev1.html
Geen opmerkingen:
Een reactie posten