தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

ராஜபக்சவின் பொய்ப் பிரச்சாரம்! இந்திய அரசும், பாஜகவினரும் ஏமாறக்கூடாது! திருமாவளவன் வேண்டுகோள்!

மஹிந்தவுக்கு வாக்குச் சேகரிக்கும் சல்மான் ஒரு நம்பிக்கைத் துரோகி: வைகோ
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 06:56.02 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் பொலிவூட் நடிகர் சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சல்மான் கான் இலங்கைக்கு வந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் வைகோ கூறுகையில்,
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து உலகத் தமிழர்களை சல்மான்கான் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சல்மான் கான் ஒரு நம்பிக்கைத் துரோகி.
இலங்கையைச் சேர்ந்தவரும், பொலிவூட் நடிகையுமான ஜெக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ராஜபக்ஷவுக்காக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
அவரது இந்த செயல் தமிழகத்திலும் அதிர்ச்சி அலைகளைப் ஏற்படுத்தியுள்ளது என்றார். இதேவேளை, சல்மான் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தமைக்கு தி.மு.க கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaeu5.html
ராஜபக்சவின் பொய்ப் பிரச்சாரம்! இந்திய அரசும், பாஜகவினரும் ஏமாறக்கூடாது! திருமாவளவன் வேண்டுகோள்!
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 08:06.20 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதன் மூலம் இந்தியாவையும் தமிழில் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டையும் ஏமாற்ற ராஜபக்ச முயற்சிக்கிறார். அவரது மோசடிக்கு பாஜகவினர் பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எல்லாவிதமான ஏமாற்று வழிமுறைகளையும் ராஜபக்ச கையாண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல் அதற்கு சாட்சியமாக இருக்கிறது.
தமிழக மீனவர்களைத் தாக்கக்கூடாது எனக் கண்டிப்பாகக் கூறியிருக்கிறோம் என ராஜபக்ச சொல்கிறார். ஆனால் உண்மை என்ன என்பதை உலகம் அறியும்.
ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். வலைகள் நாசமாக்கப்படுகின்றன. மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வடக்கு மாகாணத்துக்கு அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லையே எனக் கேட்டால் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியவில்லை எனக் கேலி பேசுகிறார்.
தமிழர் பகுதிகளில் தொடர்ந்து சிங்கள இராணுவத்தை நிறுத்தி வைத்தும்; தமிழர்களின் நிலங்களையெல்லாம் அபகரித்துக் கொண்டு அங்கே சிங்களவர்களைக் குடியேற்றியும், இந்துக் கோயில்களை இடித்து விட்டு பௌத்தக் கோயில்களைக் கட்டியும் அட்டூழியம் செய்துவரும் ராஜபக்ச அரசு தமிழர்கள் தமது வீட்டில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட இராணுவத்திடம் அனுமதிபெறவேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு செய்ய மறுக்கிறது. இத்தனை அநீதிகளையும் செய்துகொண்டு தமிழர்களை நான் சமமாக நடத்துகிறேன் என ராஜபக்ச சொல்வது கேலிக்கூத்தே தவிர வேறல்ல.
இந்தியப் பெருங்கடலில் அண்மைக்காலமாக சீனப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவற்றுக்கு இலங்கைத் துறைமுகங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா எங்களுக்கு உறவு! சீனா எங்களுக்கு நட்பு எனக் கூறும் ராஜபக்ச ஒரு சீனச் சார்பாளர் என்பதும் சீனாவைக் காட்டி இந்தியாவை மிரட்டுகிறார் என்பதும் உலகறிந்த உண்மை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்வதன் மூலம் இந்தியாவையும், தமிழில் பேசுவதன் மூலம் தமிழ்நாட்டையும் ஏமாற்ற ராஜபக்ச முயற்சிக்கிறார். அவரது மோசடிக்கு பாஜகவினர் பலியாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
போர்க்குற்றங்களுக்காக ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் ராஜபக்ச அதிலிருந்து தப்பிப்பதற்காகவே அவசரம் அவசரமாகத் தேர்தலை நடத்துகிறார்.
ராஜபக்ச மீண்டும் அதிபராவது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும்கூட ஆபத்தாகவே முடியும். இதை இந்திய அரசும் பாஜகவினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்துக்குத் துணைபோவதைக் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaevz.html

Geen opmerkingen:

Een reactie posten