தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த

கெஞ்சிய மஹிந்த! கொதித்தெழுந்த கோத்தபாய! ஹக்கீம் வெளியேற்றத்தின் பின்னணி
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 11:21.38 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசிவரை ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு முதல் நாள் இரவு அலரி மாளிகையில் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையான கரையோர மாவட்டக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதனை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்துள்ளார். அதற்கு ஹக்கீம், ஜனாதிபதியின் வாக்குறுதியை எழுத்து வடிவில் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை அது தொடர்பில் தான் யாரிடமும் வாய்திறக்கப் போவதில்லை என்றும் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முஸ்லிம்கள் தொடர்பில் கேவலமான வார்த்தைகளைப் பிரயோகித்து திட்டியுள்ளார். மேலும் தான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் வரை கரையோர மாவட்டத்தை வழங்க விடமாட்டேன் என்றும் கர்ஜித்துள்ளார்.
இதன்போது ஹக்கீமுக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச மீது சீறிவிழுந்த ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலையிட்டு, தனது சகோதரனின் வார்த்தைகளுக்காக மனவருத்தம் தெரிவித்திருந்ததுடன் தொடர்ந்தும் தனது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்குமாறு ஹக்கீமிடம் கெஞ்சியுள்ளார்.
எனினும் கோத்தபாயவின் செயலால் சீற்றம் கொண்டிருந்த ஹக்கீம், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காது வெளியேறிச் சென்றிருந்ததுடன், அதற்கடுத்த நாள் அரசாங்கத்திலிருந்தும் வெளியேறும் தனது முடிவை அறிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKbno4.html
தமிழ் கூட்டமைப்பின் அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றும் செயல்!- கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 02:20.22 AM GMT ]
எதிரணி வேட்பாளர் மைத்திரியுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை எனக் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் மைத்திரிக்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரப் போகிறது? என பாதுகாப்பு செயலாளரும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.
எதிரணி வேட்பாளர் மைத்திரியுடன் உடன்படிக்கை எதுவும் இல்லை என்றால் யுத்தம் முடிவடைந்த பின் வடபகுதி மற்றும் கிழக்கு பகுதியில் அனைத்து அபிவிருத்தி உட்பட சமாதானத்தை நிலைநாட்டி யதார்த்தபூர்வமாக செய்து காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையே ஆதரித்திருக்கலாமே என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு அலுவலகத்தில் நேற்று அனைத்து தமிழ் அச்சு ஊடகங்களினதும் ஆசிரியர்களை சந்தித்து உரையாடினார்.
இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரியை ஆதரிப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. ஆனால் எதுவித உடன்படிக்கையும் இல்லை என்றும் கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? என அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித உடன்படிக்கையும் இல்லை என மைத்திரி தெரிவித்திருப்பது ஏன்? தென் பகுதி மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காகவா?
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிக்கு ஏன் ஆதரவு வழங்குகிறது என்பது பற்றி இருதரப்பும் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இந்த கூட்டின் சரியான தெளிவான விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மைத்திரியை எந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கிறது. தமிழ் மக்கள் ஏன் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் என கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மைத்திரி என்பவர் யார்? அவர் அரசில் இருந்த ஒரு சிரேஷ்ட அமைச்சர், கட்சியின் பொதுச் செயலாளர் அவர் அரசுக்குள் இருக்கும் போது எதனையும் கூறியதில்லை. பாராளுமன்றத்திலாவது அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எந்த கருத்தையும் கூறியதில்லை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
எந்தவித உடன்படிக்கையும் இல்லை என்று கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரி வென்றதன் பின்னர் அவர்களுக்கு என்ன உரிமையை வழங்கப் போகிறார்? உரிமைகள் எதனையும் வழங்கவில்லை முடியாது என்று கூறிவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரியுடன் மோதப் போகிறதா? இதனைத் தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இருந்த போது மைத்திரி ஜனாதிபதியின் கொள்கையிலேயே இருந்தார். ஆனால் இப்போது அவர் எதிரணியில் இணைந்திருப்பது குரோத அரசியல் நோக்கமே காரணம். இவ்வாறான ஒருவருக்கு ஆதரவு வழங்குவதை விட யதார்த்த பூர்வமாக நடைமுறைச்சாத்தியமாக அனைத்தும் நிகழ்த்திக் காட்டிய ஜனாதிபதிக்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
ரிஷாத் பதியுதீன் வன்னியில் குறிப்பாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கிறார் என ஜனாதிபதியிடம் தினமும் முறைப்பாடு செய்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரி ஊடாக காணிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமா?
ஏனெனில் ரிஷாத் பதியுதீனும் இப்போது மைத்திரியுடன் இருப்பதால் தமிழ் மக்களின் காணிகளை திரும்ப பெற்றுத் தருமாறு கேட்கலாமே கேட்குமா?
முல்லைத்தீவு பகுதியிலும், மன்னாரிலும், வவுனியாவில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக த.தே.கூட்டமைப்பு கடந்த காலங்களில் கூறிவந்தது. இந்தப் பிரச்சினை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. இப்போது த.தே. கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது.  ஜனாதிபதியுடன் இருந்த போது கூடாதவர்கள், மைத்திரியுடன் இணைந்த பின்னர் நல்லவர்களா?
அரசிலிருந்து சென்றவர்கள் ஜனாதிபதி வென்றதன் பின்னர் மீண்டும் அரசுடன் இணைந்து கொள்வதற்காக வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்னை பொறுத்தவரையில் ஒருபோதும் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை. நான் அனுமதிக்கப் போவதுமில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றி என்ன கூறுகிaர்கள்?
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆனால் ஜனாதிபதி வென்றதன் பின்னர் அரசுடன் இணைந்தது மட்டுமல்ல அமைச்சுப் பதவி உட்பட அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டது.
இதேபோன்று 2010ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காமல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.
மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசுடன் இணைந்து கொண்டது மட்டுமல்லாமல் நீதி அமைச்சுப் பொறுப்பும் பெற்று எல்லாவித வசதி வாய்ப்புகளும் பெற்றுக்கொண்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்களுக்குக்கூட கொடுக்காத அளவு நிதி அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. என்றாலும் மீண்டும் இந்த தடவையும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காமல் எதிரணிக்கு ஆதரவு வழங்க சென்றுவிட்டது.
இனிமேல் இவர்களை இணைத்துக் கொள்வது என்பது நடக்காத விடயம்.
தங்களை விட முஸ்லிம் காங்கிரஸூக்குத்தான் கூடுதல் வசதி வாய்ப்புகள் நிதி வழங்கப்படுகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் எம்.பிக்கள், உறுப்பினர்கள் கூறியதும் உண்டு.
ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான கேவலமான வேலையைத்தான் செய்து வருகிறது என்றும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnp5.html
தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 02:43.07 AM GMT ]
தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை மைத்திரியிடம் அடகு வைத்துள்ளது தமிழ் தலைமைகள், தமிழ் மக்களுக்கு நான் எப்போதும் நண்பன், இந்தியா எனது நேச நாடு அவர்கள் என்னை நம்புகின்றனர்.
8ம் திகதிக்கு பின் நான் தான் ஜனாதிபதி, எவரும் பயப்பட தேவை இல்லை.
எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும்.
ஆகவே நான் சொல்வதைத்தான் செய்வேன், செய்வதைத்தான் சொல்லுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 20 வீத வாக்குகளைக் கூட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் பெற முடியவில்லையே என்று, எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, தாம் இம்முறை வடக்கில் 30 தொடக்கம் 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்று தனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிர்வாகம் நடத்த முடியாது என்பதை, மக்களுக்கு புரிய வைப்பதற்காகவே தாம் அங்கு தேர்தலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnp6.html

Geen opmerkingen:

Een reactie posten