ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கூட்டுப்படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்க கூட்டுப்படையைச் சேர்ந்த ஜோர்டான் நாட்டு போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். அப்போது விமானத்தில் இருந்து விமானி குதித்து உயிர்பிழைத்தார். அவரை தீவிரவாதிகள் சிறைபிடித்து பிணை கைதியாக வைத்து உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், ‘இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. கடத்தப்பட்ட விமானியை கடத்தல் காரர்கள் சர்வதேச மனித உரிமை சட்டத்தின்படி நடத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஜோர்டான் விமானத்தை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், அந்த விமானம் விபத்தில் சிக்கியபோது விமானி கடத்தப்பட்டு உள்ளார். இதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க கூட்டுப்படை விமானியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச்சென்று இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.Isis-fighters