தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

ஜனாதிபதித் தேர்தல்: சிங்கள பௌத்த பேரினவாதத்தை அழிக்கவா? பலப்படுத்தவா? [

மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்பு சார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபக்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.
சிறீலங்காவின் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்தகால மற்றும் நிகழ்கால ஆட்சியில், தமிழ் மக்களுக்கு எதிரான அவரது செயற்பாடுகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை மீளப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.
எதிர்காலத்திலும் தமிழின அழிப்பில் முதன்மையான இடத்தை தக்க வைப்பதற்காக இன்றும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருப்பவர் மகிந்த ராஜபக்ச. இவரது ஆட்சி தொடர்ந்தும் நீடித்தால், சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு போன்ற கட்டமைப்பு சார் இன அழிப்பும் நீடிக்கும். ஆதலால் தமிழ் மக்களால் மகிந்த ராஜபக்ச நிராகரிக்கப்பட வேண்டியவர் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.
அதேவேளை, மைத்திரிபால சிறீசேனவும் பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு தகுதியனவரா என்பதை அவர் தொடர்பான கடந்த கால மற்றும் சமகால அரசியிலின் வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து எழுதப்படும் இப்பத்தி, தமிழர் அரசியல், எதிர்விளைவு அரசியலைக் கடந்து, தமிழர் தேசத்தின் நிலையான நீதியான எதிர்காலத்துக்காக, நீண்டகால இலக்கினை அடிப்படையாகக் கொண்டு முன்னகர்த்த வேண்டிய நிகழ்சிநிரலின் அவசியத்தை கோடிட்டு காட்டுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் பிரதானமானவர்கள்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இலங்கைத் தீவின் இன்றைய நெருக்கடிகளுக்கான தோற்றுவாயாகவும், இலங்கைத் தீவின் இனக்குழும மோதுகையின் அடிப்படையாகவும் திகழ்கின்ற தமிழரின் நியாயமான அபிலாசைகளையும், மனக்குறைகளையும் ஒரு பொருட்டாகத்தன்னிலும் எடுக்கவில்லை.
தமிழ் மக்கள் ஊதாசீனப்படுத்தப்பட்ட இந்த அரசியல் வரலாற்றுப் பதிவானது, அண்மைக்கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட அவமானப்படுத்தல் அரசியலின் உச்சபட்சமாகும்.
சிங்கள பௌத்த பேரினவாத வாக்குவங்கியை இலக்கு வைத்துள்ள இவர்களின் அரசியல் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றாலும், நேரடியாக கொத்தி உயிரைப் பறிக்கும் விசப் பாம்புக்கான பதிலீடு, பதுங்கியிருந்து வளைத்துப் பிடித்து மெதுமெதுவாக மென்று விழுங்கி உயிரைக் கொல்லும் பாம்பாக இருக்கலாமா என்பதை, அவலங்களை நேரடியாக சுமக்கின்ற மக்கள் தீர்மானிக்க வேண்டிய இக்கட்டு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மகிந்த ராஜபக்சவை நிராகரிக்க வேண்டும் என வாதிடும் இப்பத்தி, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூறுவோர் பின்வரும் காரணங்களையும் ஆழமாக கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் மீளவும் சுட்டிக்காட்டுகிறது.
மகிந்த ராஜபக்சவின் உண்மை முகத்தையும் ஆபத்து மிகுந்த எதிர்காலத் திட்டங்களையும் தமிழர்கள் அறிந்துள்ளதால், அவர் தொடர்பான ஆய்வினை செய்யாமல், மைத்திரிபால சிறிசேனாவின் அரசியல் பாதையையே ஆய்வு செய்கிறது.
தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது மட்டுமன்றி, மகிந்த அரசாங்கம் தமிழின அழிப்பின் உச்சக்கட்டத்தை மேற்கொண்ட போதும் அமைதி காத்து மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு வழங்கியவர்கள் பலரும் இன்றைய பொது எதிரணியின் பிரதானிகளாக உள்ளார்கள்.
இவர்களுடைய நோக்கமோ மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவது. ஆனால், தமிழர் தேசத்துக்கோ மகிந்தவை சர்வதேச நீதியின் முன்நிறுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கு நிலையான, நீதியான, கௌரவமான, சுதந்திரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தொடரும் போராட்டத்தின் அடிநாதமும் நோக்கமும் ஆகும்.
அந்த அடிப்படையில், மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வரலாற்றை நோக்குவோமாக இருந்தால், இன்றைய அரசியல் தளத்தில் மைத்திரிபால சிறிசேன ஒரு பொம்மை. அவரை ஆட்டுவிப்பவர்களில் முதன்மையானவர்களாக முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உச்சமாக திகழ்பவருமான சம்பிக்க ரணவக்கவும், ரணில் விக்கிரமசிங்காவும், ஜே.வி.பியினரும் முதன்மையானவர்களாக திகழ்கிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் ஒருகாலத்தில் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்கள். இன்றும் வேறு வேறு நீண்டகால நிகழ்சிநிரலை தம்மகத்தே கொண்டவர்கள். ஆதலால், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ் வாக்காளர்கள் முடிவெடுப்பதற்கு துணையாக, தமிழ் மக்கள் தொடர்பான இவர்கள் ஒவ்வொருவரதும் பின்புலத்தை கவனத்திற்கொள்வோம்.
1. மைத்திரிபால சிறிசேன சிங்கள இனவாதக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக மூத்த உறுப்பினர். எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள போதும், இன்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று கூறி வருபவர். தமிழர்கள் மீது ராஜபக்ச ஆட்சிபீடம் நடாத்திய அத்தனை இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும் பக்கத்துணையாக இருந்ததோடு, அதனை நியாயப்படுத்தியும் வந்தவர். தமிழின அழிப்பை பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் வெற்றியாக கொண்டாடியவர்களில் முதன்மையானவர். ப
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், இந்த நாட்டின் ஒரு பிரசையைக் கூட சர்வதேச சக்திகள் தொடுவதற்கோ, துன்புறுத்துவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன் என தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள இவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ரணில் அரசாங்கத்திற்கும் இடையில் பெப்ரவரி 2002ல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனவரி 2008 ல் ஒருதலைப்பட்சமாக முறித்துக்கொண்ட போது அதனை நியாயப்படுத்தியவர்களில் பிரதானமானவர்.
2010 ஜனவரியில் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரத் பொன்சேகாவும் இணைந்து, பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு இணங்க பணியாற்றுவதாக அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்தவர். அத்துடன், தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றுதல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல், வடகிழக்கு மீள்இணைப்பு, விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற செயற்பாடுகளை கடுமையாக எதிர்த்து வந்தவர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் விடுதலைப் புலிகளை மீளஉருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மற்றுமொரு அபாண்டமான குற்றச்சாட்டை கடந்த ஆண்டுகூட இவர் முன்வைத்தவர்.
இந்த ஆண்டின் அரையாண்டு வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், சிறீலங்காவுக்கு எதிராக வகுக்கப்பட்டுள்ள உபாயங்களின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் பேய்களும், ஆதரவாளர்களும் இருப்பதாக வெளிப்படையாகக் கூறிவந்தார்.
அத்துடன், மறைமுக நிகழ்ச்சி நிரலை தயாரித்துள்ள சர்வதேச தரப்புகள் ஆட்சி மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்பட்டு வருகின்றன என்று 2014 யூலையில் டெயிலி நியுஸ் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். நீதியை பெற்றுக்கொள்ளும் தமிழர்களின் சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை நாட்டை பிரிப்பதற்கான இரண்டாம் கட்ட போர் எனவும் வர்ணித்திருந்தார். இதேவேளை, ஐ.நா அதிகாரிகளை இலங்கைத் தீவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற வட மாகாண சபையின் அழைப்பையும் கடுமையாக கண்டித்தவர் மைத்திரிபால சிறிசேன.
இனப்பிரச்சினைக்கான நிலையான நீதியான தீர்வு பற்றி எதனையும் குறிப்பிடாத மைத்திரிபால சிறிசேன ஊடாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம், சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையையும் அதனோடிணைந்த இறையாண்மையையுமே வலியுறுத்துகிறது. அத்துடன், சமஸ்டி ஆட்சிமுறைமையைக் கூட கவனத்திற்கொள்ளவில்லை.
சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையோ, அதன்பாற்பட்ட உள்நாட்டுப் பொறிமுறைகளோ தமிழர்களுக்கு என்றைக்கும் நீதியை வழங்கியதுமில்லை. வழங்கப் போவதுமில்லை.
இது மிகத் தெளிவானதும் உறுதியானதுமான விடயம். ஆதலால், அதனையே பின்பற்ற துடிக்கின்ற மைத்திரிபால சிறிசேன தரப்பிடம் இருந்து தமிழர் தேசம் நீதியையோ நிலையான தீர்வையே எதிர்பார்க்கலாம என்று தமிழ் வாக்காளர்கள் ஆழமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
2. சந்திரிகா பண்டாரநாயக்காவோ சமாதானத்துக்கான போரென்று ஆரம்பித்து தமிழர் தாயகத்தில் அவலங்களை தொடர்கதையாக்கியவர். செம்ணியில் தமிழ் உறவுகள் சுமார் 600 க்கு மேற்பட்டவர்களை சித்திரவதை செய்தபின் படுகொலை செய்து புதைத்தமைக்கான பொறுப்பு இவருக்குண்டென்ற குற்றச்சாட்டுள்ளது.
யாழ். மண் திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறுவதற்கான ஆக்கிரமிப்புப் போர் இவராலேயே ஆரம்பிக்கப்பட்டது. எழுபத்தைந்து சதவீதமாக போரை நானே முடிவுக்கு கொண்டு வந்தேன் என இம்மாதம் 16ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சந்திரிக்கா சூளுரைத்தமையும் இத்தருணத்தில் கவனத்திற்கொள்ளத்தக்கது.
3. சம்பிக்க ரணவக்க தமிழின அழிப்பை மையப்படுத்தி நீண்டகாலமாக செயற்பட்டு வருபவர். ராஜபக்ச அரசாங்கம் நடாத்திய தமிழின அழிப்பு போரில் தீவிரமாக முன்னின்று செயற்பட்டவர். தமிழர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் போதும். இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்களுக்கு தயார்படுத்தாதீர்கள் என்று 2012 யூன் 8ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிப்படையாகவே தமிழர்களை அச்சுறுத்தியவர்.
கட்சி தாவிய பின்னரும் கூட, நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிக்கக்கூடாது. ஏனெனில், அதுவே, சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் என வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்ததில் முதன்மையான பங்களிப்பை இவரே வழங்கியதாக சிங்கள ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சிறீலங்கா இராணுவத்தினர் எவரும் சர்வதேச நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கு அனுமதிக்கப் போவதில்லையென்ற திடமான நிலைப்பாட்டைக் கொண்ட சம்பிக்க ரணவக்க மென்போக்கு அரசியல் செய்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே கடுமையாக சாடுபவர்.
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை தீவிரமாக பெருக்கவேண்டும் என திட்டம் தீட்டி செயற்பட்டு வருவதோடு, தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதனை எதிர்ப்பவர்.
4. ஜே.வி.பி ஆட்சிகள் மாறிய போதும், சந்திரிகாவும் மகிந்தவும் நடாத்திய தமிழின அழிப்புப் போரை ஆதரித்தும் நியாயப்படுத்தியும் வந்தது. தனது எதிரியாக கருதிவந்த சம்பிக்க ரணவக்க சார்ந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் சேர்ந்து, இணைந்த தமிழர் தாயகமான வடகிழக்கை தனித்தனியாக பிரிக்கவேண்டும் என வழக்குப் போட்டு ஒக்டோபர் 2006 ல் வெற்றியீட்டியவர்கள். போருக்குப் பின்னரான சூழலில், கட்டமைப்புசார் இனஅழிப்புத் தொடர்பாக கவனத்திற்கொள்ளாத இவர்கள், தாயகத்தில் வாழும் இளையவர்களை வன்முறைப் பாதைக்குள் தந்திரோபாயமாக நகர்த்தி பலிக்கடவாக்க முற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுமுண்டு.
5. ரணில் விக்கிரமசிங்காவை தலைமையாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த ராஜபக்சவை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாக்கும் வல்லமை மைத்திரிபால சிறிசேனவிற்கே உண்டென தெரிவிப்பதோடு, ஜே.ஆர். ஜயவர்த்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிப்பதுடன், 18வது திருத்தச் சட்டத்திலேயே மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்ற தொனியில் கருத்து தெரிவித்து வருகிறது.
6. சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அமைவாக விடுவிப்பதற்க பெரும் முட்டுக்கட்டையாக விளங்கியவர். தமிழின அழிப்புப் போரில் முள்ளிவாய்க்கால் வரை சிறீலங்கா இராணுவத்துக்கு தலைமை வகித்ததோடு, சிறீலங்கா இராணுவத்தை தண்டிக்கும் எண்ணம் கொண்ட சர்வதேச நீதிக்கு என்றைக்கும் தான் அனுமதியேன் என்ற தொனியில் பேசிவருபவர். தமிழின படுகொலைக்கு தயங்காத இவர், இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என வெளிப்படையாகவே கனடாவின் நசனல்போஸ்ட் ஊடகத்துக்கு தெரிவித்திருந்தவர்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒரு துளியளவேனும் கவனத்திற்கொள்ளாது, சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் முக்கியத்துவமளித்து, தமிழின அழிப்பில் பங்குதாரர்களாகவும், பக்கத்துணையாகவும் அண்மைக்காலம் வரை இருந்தவர்களை கொண்ட இத்தகைய கூட்டணியிடமிருந்து, தமிழர் தேசத்துக்கு நியாயமான தீர்வோ நீதியோ கிடைக்குமா என்று தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
தமிழர் அரசியல் மகிந்தவை நிராகரித்தால் மட்டும் என்ற குறுங்காக அரசியலுக்குள் சிக்குப்படாமல், மறுக்கப்பட்ட உரிமையையும் இறையாண்மையையும் மீள அடைவதற்கும் , இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்குமான பணிகளை தூரநோக்குப் பார்வையுடன் முன்னெடுக்க வேண்டும்.
ஏனெனில். தமிழர் தேசத்தினை அழிப்பதை இலக்காக கொண்டது மகிந்த அரசாங்கம் மட்டுமல்ல. மாறாக, மகாவம்ச மாயைகளால் கட்டியெழுப்பப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மனப்பாங்கிற்கு அமைய உருவாக்கப்பட்ட சிறீலங்கா அரசின் இருப்பும் அத்தகையதே.
இலங்கைத் தீவில் நிலையான நீதியான அமைதி உருவாக வேண்டுமானால், சிங்கள பௌத்த பேரினவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். ஆதலால், சிங்கள பௌத்த பேரினவாதத்தை மையப்படுத்தியதாக நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலை, தமிழ் மக்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தை இல்லாதொழிப்பதற்கான ஒரு அங்கமாக பயன்படுத்த வேண்டுமே தவிர, தமிழின அழிப்பை நோக்காகக் கொண்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதாக மாற்றிவிடக்கூடாது.
நிர்மானுசன் பாலசுந்தரம்-

bnirmanusan@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszCRdKafv2.html

Geen opmerkingen:

Een reactie posten