தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

பாதுக்க பிரதேசத்தில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி

தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை! டம்மி வேட்பாளர்கள் பெரும் தொல்லை!: தேசப்பிரிய
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 01:34.37 AM GMT ]
தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நடைபெறுவது முதல் இறுதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரையில் முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற எவ்வித வாய்ப்பும் கிடையாது.
தேர்தல் பொறிமுறைமை மிகவும் வலுவானது.
தேர்தல் அதிகாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
வாக்களித்தல், வாக்கு பெட்டிகளை எடுத்துச்செல்லல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட உள்ளது.
வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கண்காணிப்பு செய்ய இம்முறை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டு அச்சிடும் போதும் இரகசிய இலக்க முறைமையொன்று பின்பற்றப்பட்டுள்ளது.
தேர்தல் எவ்வளவு நேர்மையாக நடத்தப்பட்டாலும் தோல்வியடையும் வேட்பாளர் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்துவது வழமையானது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
டம்மி வேட்பாளர்கள் பெரும் தொல்லை! தேர்தல் ஆணையாளர் கவலை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது களமிறக்கப்பட்டுள்ள டம்மி வேட்பாளர்கள் காரணமாக தமது திணைக்களத்துக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தேர்தலொன்றின் போது பிரதான வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் வகையில் போட்டியிடும் டம்மி வேட்பாளர்கள் காரணமாக தேர்தல் திணைக்களம் பெரும் தொகைப் பணத்தை அநாவசியமாக செலவிட வேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்புகளை அளிக்கும் வகையில் இவர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பெருமளவான விடயங்களில் பெருந்தொகைப் பணம் வீணாக செலவிடப்படுவதாக மஹிந்த தேசப்பிரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை உரிய முறையில் பூர்த்தியடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை சீர் செய்யும் வகையில் எதிர்வரும் நான்காம் திகதி , தபால் திணைக்கள ஒத்தாசையுடன் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnp0.html
தபால்மூல வாக்களிப்பில் மஹிந்தவா, மைத்திரியா வெற்றி?
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 01:43.49 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பில் 60 வீதத்துக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களித்திருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
எம்.ஈ.எஸ். என்ற சுயாதீனமான தனியார் அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதிலுமுள்ள 160 தேர்தல் தொகுதிகளில் 16 ஆயிரம் பேரிடம் குறித்த நிறுவனம் கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 61 முதல் 63 வீதமான அரசாங்க உத்தியோகத்தர்கள் தபால்மூலம் வாக்களித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவுக்கு 36 முதல் 38 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.
அரசாங்க உத்தியோகத்தர்களை பலப்படுத்திய ஒரே தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டுமே.
தமது துறையை பலப்படுத்திய ஜனாதிபதிக்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர் என்பது இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேநேரம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்ட மக்கள் பேரணிகளில் இதுவரை சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இந்தளவு கூடுதல் எண்ணிக் கையான ஆதரவாளர்கள் கலந்துகொண்ட மக்கள் பேரணிகளை நடத்திய தலைவராக ஜனாதிபதி காணப்படுவதாகவும் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வீட்டுக்கு வீடு செல்லும் பிரசாரப் பணிகளின் இரண்டாம் கட்டம் பூர்த்தியடைந்துள்ளது. எஞ்சிய நாட்களில் விடுபட்ட வீடுகளுக்குச் சென்று ஜனாதிபதிக்கு ஆதரவு திரட்டப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnp1.html
பாதுக்க பிரதேசத்தில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 03:57.18 AM GMT ]
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாதுக்க, போப்பே பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது, வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பியோடியதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் போப்பே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடக பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnqy.html

Geen opmerkingen:

Een reactie posten