தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

தேர்தல் பிரச்சாரத்தில் போர்க்குற்றங்கள்!



எதிர்வரும் ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களினதும், தேர்தல் அறிக்கைகளில் போர்க்குற்றங்கள் என்ற விவகாரத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
முன்னர் போர்க்குற்றங்கள் என்று வெளிப்படையாகப் பேசுவதற்கு, அது ஆளும் தரப்பாக இருந்தாலும் சரி, எதிர்த்தரப்பாக இருந்தாலும் சரி, அச்சமான ஒரு சூழ்நிலையே நிலவியது.
அதுபற்றி யாரும் அதிகம் பேசுவதும் இல்லை, பேச முற்படுவதும்இல்லை.
அதுபற்றி பேச முனைந்தால், தாம் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடலாம் ,தமது கருத்து திரிபுபடுத்தப்படலாம் என்றே கொழும்பு அரசியல் மட்டத்தில் இருப்பவர்களால் பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது போர்க்குற்றங்கள் குறித்து, தேர்தல் அறிக்கைகளில் பிரதான வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்குகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர், முடிவுக்கு வந்த போது தான், போர்க்குற்றங்கள் என்ற விவகாரம் ,இலங்கையில் சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தது.
போருக்குப் பிந்திய ஐந்தரை ஆண்டு காலத்தில் இந்த விவகாரம் எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஊடறுத்து விட்ட ஒன்றாக மாறியிருக்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது அரசாங்கமும், தாம் தமிழ் மக்களுக்கு எதிராகப் போரை நடத்தவில்லை என்றும் புலிகளுக்கு எதிராகவே போரை நடத்தியதாகவும் கூறிவந்தாலும், இந்தப் போரின் போது போர் நியதிகளை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
படையினர் ஒரு கையைக் கட்டிவிட்டே போர் புரிந்தனர் என்றும் எந்தப் போர்க்குற்ற மீறல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் ஆரம்பத்தில் கூறிய அரசாங்கம், பின்னர் ஒரு கட்டத்தில் போரில் சில பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சமாளிக்கப் பார்த்தது.
ஆனால், சர்வதேச சமூகம் விடுவதாக இல்லை. தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களினால் ,முதலில் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இதையடுத்து, அதன் பரிந்துரையின் பேரில் காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, கடந்த ஜுலை மாதம் போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரிக்கும் படி, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையும் வழங்கப்பட்டது.
ஆனாலும், சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையிலான நம்பகமான, உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்தத் தவறியிருந்தது.
அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படாததால் தான், இப்பொழுது ஐ.நா நேரடியாகவே விசாரணை நடத்தும் நிலை உருவானது.
ஐ.நா நடத்தும் விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் 25 ஆம் திகதி ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தான், இரண்டு பிரதான வேட்பாளர்களுமே போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்த தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் எதிர்கொண்ட முக்கிய சவால் போர்க்குற்றச்சாட்டுகள் தான்.
இந்த சவால் எதிர்கொள்ளவும், சமாளிக்கவும், அரசாங்கம் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.
பல்வேறு நாடுகளின் கால்களில் விழுந்து ஆதரவு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்றாலும், ஜெனீவாவில், அரசாங்கம் தோல்வியைத் தான் தழுவியது.
ஒருகால கட்டத்தில், போர்க்குற்றங்கள் நிகழவேயில்லை என்று அடித்துக்கூறிய அரசாங்கம் இப்போது, நடத்திருக்கலாம் என்றளவுக்கு தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் சர்வதேச அளவில் கொடுக்கப்பட்ட அழுத்தங்களும், முன் வைக்கப்பட்ட ஆதாரங்களும் தான் அதற்குக் காரணம்.
அரசாங்கத் தரப்பு, தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு, போர் வெற்றியையும் அதன் விளைவான போர்க்குற்றச்சாட்டுகளையும் பயன்படுத்தி வருகிறது.
தம்மை தோற்கடித்துவிட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு உள்நாட்டு ,வெளிநாட்டு சக்திகள் சதி செய்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரசார மேடைகளில் அனுதாபம் தேடி வருகிறார்.
ஒரு பக்கத்தில் போர் வெற்றியைக் காட்டி சிங்கள மக்களை உசுப்பேற்றும் அரசாங்கம் மறுபக்கத்தில் அந்த வெற்றியைத் தேடித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலிக்கு அனுப்ப சூழ்ச்சி செய்யப்படுவதாகவும் கூறி வருகிறது.
இத்தகைய கட்டத்தில், அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் இருக்கின்றனர்.
போர்க்குற்றம் சாட்டப்படும் படையினரும், அவர்களின் உறவினர்களும் இருக்கின்றனர்.
இந்த இரண்டு தரப்பினருக்கிடையிலும் போர்க்குற்றங்கள் குறித்து நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய நிலை இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அதனால் தான் தமது தேர்தல் அறிக்கைகளில் போர்க்குற்றங்கள் தாம் எவ்வாறு பதிலளிப்போம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். 
என்றாலும், இரண்டு பேரினது அணுகுமுறைகளிலும், வாக்குறுதிகளும் பெரியளவிலான வேறுபாடுகள் எதையும் காண முடியவில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில் ,சர்வதேச விசாரணைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் உள்நாட்டில் நம்பகமான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை,ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் ,சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன் என்றும் உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பேரினதும் வாக்குறுதிகளில் ஒரு மேன்போக்குத் தன்மையே இருக்கிறது.
தெளிவாக எதையும் வரையறுக்கவோ விளக்கமளிக்க முற்படவோ இல்லை.
ஏனென்றால் ,இந்த விடயத்தில் ஆழமாக இறங்கி வாக்குறுதிகளை கொடுக்க முனைந்தால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் இரு தரப்பினருக்குமே உள்ளது.
படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் .அது குறித்து விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவேன் என்று மைத்திரிபால கூறியிருப்பதில் ஆச்சரியமில்லை.
அவர் இப்போது எந்த அதிகாரத்திலும் இல்லை. பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய நிலையிலும் இருந்திருக்கவில்லை.
ஆனால் ,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் நிலைமை அவ்வாறாக இல்லை.அவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்.
சர்வதேச அழுத்தங்களுக்கும், படையினரைப் பாதுகாக்கும் கடப்பாட்டுக்கும் இடையில் அவர் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியிருக்கிறது.
இந்த விடயத்தில் தெளிவானதொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதிருப்பதற்கு இதுவே காரணம்.
சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் கழுத்தைப் பிடித்து இறுக்குவதை அரசாங்கம் எப்போதோ தடுத்திருக்கலாம்.இப்போது நம்பகமான உள்நாட்டு விசாரணை ஒன்றை மேற்கொள்ளப் போவதாக உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை இந்த ஆண்டின் தொடக்கத்திலாவது செய்திருக்கலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்கள் ,நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றைத் தான் கோரி வந்தனவே தவிர,சர்வதேச விசாரணையை அல்ல.
அந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்ததால் தான்,இப்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் நிலை உருவானது.
இந்த விசாரணையின் அறிக்கை தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தான்,அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
அவ்வாறாயின்,ஏற்கனவே தொடங்கப்பட்ட விசாரணைகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்திருந்தாலும், அதற்கான அரசாங்கத்தின் பதில் ஏதும் இல்லை.
தேர்தலுக்குப் பின்னர் இந்த வாக்குறுதி எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
எவ்வாறாயினும், சர்வதேச அழுத்தங்கள் போர்க்குற்றங்கள் குறித்த இலங்கையின் பிரதான அரசியல் சக்திகளின் நிலைப்பாடுகளில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
இப்போது போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளத் தயார் என்ற பகிரங்கமாக வாக்குறுதி கொடுக்கும் அளவுக்கு பிரதான வேட்பாளர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
இந்த வாக்குறுதிகளைத் தனியே,உள்நாட்டு வாக்காளர்களுக்காக வழங்கப்பட்டதாக மட்டும் எடுத்துக் கொள்ளமுடியாது.
வெளிநாடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியாகவே கருதலாம்.பொறுப்புக் கூறல் விவகாரத்தில் பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன என்பதை,சர்வதேச சமூகம் முக்கியமாக எதிர்பார்க்கிறது.
அதனால் தான், இரண்டு பிரதான வேட்பாளர்களும் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை குறித்த வாக்குறுதிகளுக்கே சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்திருந்தன.
இதன் மூலம் தம்மைத் தோற்கடிக்க சர்வதேச நாடுகள் திட்டங்கள் எதையும் முன்னெடுக்காமல் தடுக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம்.இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவர் வெற்றிபெறப் போவது உறுதி.
இருவருமே சர்வதேச விசாரணையை நிராகரித்து விட்ட நிலையில்,வெற்றி பெறப் போகிறவர் புதிய வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதை சர்வதேச சமூகம் நிச்சயம் எதிர்பார்க்கும்.அதற்கு ஒரு கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
அதற்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால்,வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் தான் ஏறும்.

- சுபத்ரா -
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr5.html

Geen opmerkingen:

Een reactie posten