தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

மைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை, சம்பந்தன் விளக்கம் - ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்: செல்வம்

இரு சிறுவர்கள் மீது வாகனத்தை மோதிவிட்டு இரவோடு இரவாக இந்தியாவுக்கு பறந்த சல்மான்கான்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 11:13.23 AM GMT ]
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்..
இவரது வாகனப் பேரணியில் சென்ற வாகனமொன்று நேற்று வெலிக்கடை, மாமரச் சந்தியில் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


http://www.tamilwin.com/show-RUmszCQUKaewy.html

யாழில் மைத்திரிக்காக மக்கள் அணிதிரள்வு - கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரி
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 06:30.12 PM GMT ]
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம். இன்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சரத்பொன்சேகா துமிந்த திஸநாயக்க விஜயகலா மகேஸ்வரன் ராஜித சேனாரத்தின றிசாட் பதியுதின் மற்றும் பல ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இப்போது ஜனாதிபதிக்கு கோபம் வருவதை நான் ஊடகங்களில் பார்க்கிறேன். நான் ஜனாதிபதிக்கு கூறவிரும்புகிறேன். கோபம் வேண்டாம். இந்த நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களை பாருங்கள் நாம் எவர் மீதும் பகைமை கொள்ள விரும்பவில்லை. எங்களை எதிரிகளாக பார்ப்பவர்களுக்கும் நாம்; அன்பு காட்டுகின்றோம். ஜனாதிபதி தனக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் அலையை புரிந்துகொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்றைய தினம் யாழ்.சங்கிலியன் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற வடக்கிற்கான முதலாவது பிரச்சாரக் கூட்த்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் கூறியிருக்கின்றார்.
நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் வீதிகளையும் பாரிய கட்டிடங்களையும் அமைப்பதால் மக்களுடைய மனங்களில் மகிழ்ச்சி உருவாகப்போவதில்லை.
வெறுமனே துப்பாக்கிச் சத்தங்களை நிறுத்துவதனாலும் ஒற்றுமையை உருவாக்க முடியாது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் முடியாது. பௌத்த மதமாக இருப்பினும் இந்து மதமாக இருப்பினும் இஸ்லாமிய மதமாக இருப்பினும் கிறிஸ்த்தவ மதமாக இருப்பினும் அனைத்து மதங்களும் மனிதர்களின் மனங்களை மாற்றும் மனி தர்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்படுத்தும் வலிகளை கூறியிருக்கின்றன.
அந்தவகையிலும் மக்களுடைய பிரச்சினைகளை அறிந்துகொண்டும். நாம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை வலுப்ப டுத்துவோம். பகைமையினால் எதனையும் சாதிக்க முடியாது.
இலங்கையில் 100 லட்சம் மக்கள் 3வேளை உணவில்லாமல் வாழ்கின்றார்கள். ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் அந்த நாட்டிலுள்ள மக்களுடைய பசி தீர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை. இப்போது தேர்தல் காலம் என்பதனால் மக்களுடய வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்குகின்றார்கள். ஆனால் அது தேர்தல் காலத்தில் மட்டுமே. ஒரு நேர்மையான ஆட்சியாளன் இவ்வாறு நடந்து கொள்வது அல்லது செயற்படுவது முற்றிலும் முறையற்றதாகும்
இந்த ஆட்சியைபோன்று மோசடியான ஊழல்மிக்க ஆட்சி இலங்கை வரலாற்றிலேயே இல்லை. என பொது எதிரணியின் ஜனாதி பதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் நடைபெற்ற போரினால் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் ஒற்றுமையின்மை உருவாகியிருக்கின்றது.
போரின் பின்னர் இவ்வாறான ஒற்றுமையை அல்லது புரிந்துணர்வை வளர்ப்பது சாத்தியமற்றது. ஆனால் அதனை நான் உருவாக்குவேன் என்றே உங்கள் முன் கூறுகின்றேன்.
அபிவிருத்தி அழகிற்கு பின்னால் பல ஊழல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. வடக்கிற்கு புகைவண்டிச் சேவை தொடங்கப்பட்டதன் மூலமாக வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில் பாலம் அமைக்கப் பட்டதாக கூறிய ஜனாதிபதி அந்த புகைவண்டிப் பாதை அமைப்பில் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் எத்தனை கோடி கமிஷன் பெற்றார் என்பதை கூறவில்லை.
அதேபோன்று பாரிய வீதிகள் அமைக்கப்படும்போதும் அதன் மதிப்பீடு என்ன என்பது வெளிப்படயாக கூறப்படுவதில்லை. மக்களுக்கு மட்டுமல்ல அமைச்சர்களுக்கும் கூட அது மறைக்கப்படுகின்றன. எனவேதான் கூறுகிறோம். இந்த ஆட்சியைப்போல் மோசமான ஊழல்மிக்க ஆட்சி இலங்கையின் வரலாற்றிலேயே இல்லை.
பல அரசியல்வாதிகள் போதைப் பொருள் விற்கின்றார்கள். பலர் பாலியல் பலாத்காரம் செய்கின்றhர்கள். பலர் கசினோ சூதாட்ட விடுதிகளை நடத்துகின்றார்கள். இன்று அவர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
மறுபக்கம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்துடன் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். இந்நிலையில் பல லட்சக்கணக்கான கடிகாரங்கள் இறக்கப்படுகின்றது. பல லட்சக்கணக்கான தொலைபேசிகள் கொண் டுவரப்பட்டிருக்கின்றன.
அவற்றைக் கொடுத்து எங்கள் வாக்குகளை பறிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் அனைத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு மாற்றத்திற்காக வாக்களியுங்கள். நான் ஒரு அரசன் வீட்டு பிள்ளையோ பிரபு வீட்டுப் பிள்ளையோ இல்லை. சாதாரண விவசாயின் பிள்ளை. எனக்கு விவசாயிகளின் பிரச்சினை தெரியும்.
ஆனால் இந்த ஆட்சியாளர்கள் விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருந்தால் பழங்களும் மரக்கறிகளும் தானியங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்நாட்டு உற்பத்திகள் ஊக்குவிக்கப்படும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்போவதில்லை.
மேலும் இந்த நாடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதனை மக்கள் அறிந்திருக்கின்றார்கள். அதனாலேயே இனமத போதமில்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் மஹிந்தவுக்கு எதிராக திரும்பியிருக்கின்றார்கள். நான் அரசனாக வாழ்வதற்காக வாக்கு கேட்கவில்லை. நாட்டு மக்களின் சேவகனாக இருப்பதற்கே வாக்கு கேட்கிறேன்.
இலங்கையின் ஜனாதிபதிக்கு 7மாளிகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் கூட நான் கால் வைக்கப்போவதில்லை. நிறைவேற்று அதிகார முiறை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கி அமைச்சரவைக்கு அதிகாரங்களை வழங்கி நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கி பொலிஸாருக்கு நடுநிலமையாக செயற்பட அங்கீகாரம் வழங்கி அரச ஊழியர்களுக்கு செயற்பாட்டு சுதந்திரம் வழங்கி ஒரு நிறைவான மக்கள் விசுவாசிக்கும் ஆட்சியை உருவாக்குவேன்.
இதேபோன்று நான் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்தேன். அதேபோன்று ஜனாதிபதியும்; அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றார்கள்.
எனவே இந்த பிரச்சாரமேடையில் வெளிப்படையாக கூற விரும்புகிறேன். நான் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தத்தையும் செய்யவில்லை. அதேபோல் ஜ.தே.கட்சியுடனும் நான் ஒப்பந்தங்களை செய்யவில்லை. இது மோசமான பொய் பிரச்சாரமாகும். எதிர்காலத்திலும் இவ்வாறே பொய் பிரச்சhரங்களை செய்வார்கள். அதனை மக்கள் நம்பவேண்டாம்.
எங்களுடன் இணைந்திருப்பவர்கள் அவர்களுடைய மனச்சாட்சியின் அடிப்படையிலேயே இணைந்திருக்கின்றார்கள். என்னுடைய 49வருட அரசியல் பாதையில் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்படியொரு மக்கள் எழுச்சியை நான் கண்டதில்லை. என்னுடைய அனுபவத்தினடிப் படையில் மக்கள் எந்தப்பக்கம் திரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன்.

http://www.tamilwin.com/show-RUmszCQUKbno1.html

பிரபாகரனை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று கூறினேன் - யாழில் சந்திரிகா
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 07:47.34 PM GMT ]
இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வவாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார்.
எனவே புதிய ஜனாதிபதி மைத்திரிபால உங்கள் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைக்கு சரியாக முறையில் தீர்வு காண்பார். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஒரு நாட்டில் அதன் எல்லைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன. அதேபோல பாதுகாப்பும் முக்கியமானது. ஆகவே பாதுகாப்பிற்கு எதுவிதமான பங்கம் ஏற்படாத வகையில் தான் நாம் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசை ஆதரித்து நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இன மோதல் , இராணுவ மோதல் காரணமாக எனது நாட்டில் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த நீங்கள் இன்று ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளீர்கள் இதனால் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
1994 இல் எனது ஆட்சி அமைக்கப்பட முன்னரும் பின்னரும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் , போர்நிறுத்தப்படும், தீர்வு காணப்படும் பிரச்சினைகளுக்கு என நான் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கினேன்.
எனது ஆட்சி அமைந்து 2 வாரங்களுக்கு உள்ளேயே நான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று கூறினேன்.
8 மாதங்களுக்கு நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்கி அமுலாக்கினோம். அந்த 8 மாதமும் எனது அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
துரதிர்ஷ்டவசமாக விடுதலைப் புலிகள் முழுமையான சமாதானத்திற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீண்டும் போருக்கே சென்றுவிட்டார்கள் .
இந்தநிலையில் நாட்டின் அரச சார்பிலும் மக்கள் சார்பிலும் நானும் அந்த போரில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஒரு தாய் என்ற வகையிலும் பெண் என்ற வகையிலும் போரின் காரணமாக நீங்கள், உங்களுடைய பிள்ளைகள், உறவுகள், உங்கள் நண்பர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட துன்பங்களை எண்ணி உண்மையில் கவலைப்படுகின்றேன். நேர்மையாக இந்தக் கவலையை தெரிவிக்கவும் விரும்புகின்றேன்.
விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாவிட்டாலும் கூட எனது அரசு 9 மாதங்களுக்குப் பின்பு இந்த நாட்டில் புதியதொரு அரசியல் அமைப்பினை அறிமுகப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.
குறிப்பாக எமது அரசியலின் இரண்டாவது இருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்ற வேண்டும் என்பது உள்ளடக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக இந்த அரசை மாற்றியமைக்கும் கூட்டு முயற்சியில் ஒரு பங்காளராகவே சரத்பொன்சேகா இந்த மேடையில் உள்ளார் .
எனது அரசு 11 ஆண்டுகள் பதவி வகித்தது. எனது காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் வாழக்கூடிய பெரும்பான்மை மக்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் மக்கள் மத்தியிலும் அதிகாரம் தொடர்பான அதிகாரப்பகிர்வு அமுல்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியல் அமைப்பினை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் என்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
அந்த நேரம் அரசியல் அமைப்பினை மாற்றுகின்ற கனவை நான் நனவாக்க வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலேயே முடியும். ஆனால் அன்றைய கால கட்டத்தில் என்னுடைய இந்த அரசியல் அமைப்பு யோசனைக்கு சார்பாக பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காமையினால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
ஆகவே இந்த அரசியல் அமைப்பை யதார்த்தமாக்க எமக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டன. விடுதலைப் புலிகள் மிகவும் வன்முறை சார்ந்த சில நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் இந்த நாட்டு மக்களை , முஸ்லிம் மக்களை பெரும்பாதிப்புக்கு ஏற்படுத்திய காரணத்தினால் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்கள் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியது.
இன்று போர் ஓய்ந்து விட்டது. ஆகவே நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
எமது எதிர்கால ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன ஐ.தே.க தலைவர் ரணிலின் ஓத்துழைப்பும் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பினையும் பெற்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை மிகவும் சுமுகமான முறையில் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தீர்த்து வைப்பார் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.
உங்கள் அனைவருக்கும் தெரியும் சட்டத்தின் ஆட்சி மஹிந்த அரசின் ஆட்சியின் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான இயங்கவும் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல பொலிஸ் திணைக்களத்திலும் அரசியல் மயமாக்கல் ஊடுருவியுள்ளது. சட்டத்தின் ஆட்சியில் மஹிந்த என்ன தொலைபேசியில் சொல்கின்றாரோ அதுவே நீதித்துறையும் சரி பொலிஸ் துறையாக இருந்தாலும் அவர் கூறியது போலவே நடந்து கொள்கின்றன.
கைதுசெய்திருந்தால் விடுவி, தண்டனையைக் குறை என்று கூறுவாராயின் அதனையே செய்யும் அளவிற்கு தான் இங்கு நிலைமை உள்ளது. ஆகவே அடிமுதல் நுனி வரை முழுமையாக இந்த அரசானது ஒட்டுமொத்தமாக ஊழல் , மோசடி மிகுந்த அரசாங்கமாக மாற்றமடைந்துள்ளது.
ஒரு குடும்பம் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் வளங்களையும் சொத்துக்களையும் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நாட்டினதும், அரசின் சொத்துக்களையும் இந்த அரசு மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் களவாடல்களுக்கும் உட்படுத்துகின்றது.
இந்த நாட்டில் ஜனநாயகம் சுதந்திரம் என்பவற்றை காப்பதற்கான சகல நிறுவனங்களும் செயலிழந்துள்ளன. பொலிஸ், அரச சேவை , நீதித்துறையோ வேறு சேவையோ உரிய முறையில் செயற்படாமல் உள்ளன. சட்டத்தின் ஆட்சி ஆட்டம் கண்டு வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்களுடைய எதிரிகளுக்கு எதிராக வன்முறையையும் ஆடாவடித்தனங்களையும் அச்சுறுத்தல்களையும் மஹிந்த அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
மனிதர்கள் என்ற வகையில் எமக்கு சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அந்த அனைத்து உரிமைகளையும் அவர்கள் களவாடி கொள்ளையடித்து உள்ளார்கள். அந்த உரிமைகளை செயற்படுவதற்கும் இடமளிக்காத வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
போர் முடிவடைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. ஆனால்இன்று போர் ஓய்ந்து விட்டது. அபிலாசைகள் , எதிர்பார்ப்புக்கள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை .
புதிய ஆட்சியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிலையான சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும். எமது நாட்டில் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் சமாதானமாகவும் வாழும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
இன்று பொதுவேட்பாளரை வெற்றியடையச் செய்ய இந்த நாட்டில் உள்ள ஐ.தே.க , சிறிலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை, முஸ்லீம் கட்சி, த.தே.கூ ஒன்றிணைந்துள்ளது.
இன்று நாம் உங்கள் முன்னிலையில் வழங்கக்கூடிய உறுதிமொழிகளை வெற்றிகரமாக செயற்படுத்தக்கூடிய சக்தியும் வலுவும் இந்தக் கூட்டணிக்கு உள்ளது.
தமிழ் , முஸ்லிம் , சிங்கள மக்களுக்கும் பல்வேறு உறுதி மொழிகளை வழங்கும் மகிந்த அரசு அவற்றை ஒன்றையும் நிறைவேற்றாத நிலையில் தொடர்ந்தும் பதவியில் உள்ளார்.
போரின் பின்னர் தமிழ் மக்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை மீள்குடியேற்றம். தங்களுடைய சொந்த நிலங்களுக்கு செல்ல முடியாது, குடியிருக்க முடியாது பலர் உள்ளனர்.
உங்களுக்கு சொந்தமான காணிகளை அரசு அத்துமீறி உரித்தாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இந்த நாட்டில் பாதுகாப்பு முக்கியம் பாதுகாப்புக்கு தேவையான நிலப்பரப்பை மாத்திரம் வைத்துக் கொண்டு எஞ்சிய உங்களது நிலங்களை மீள திருப்பி வழங்குவோம்.
தொழில் வாய்ப்பும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில் வாய்ப்புக்களை வழங்க எங்களால் இயன்ற முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கும் தொழில் வாய்ப்புக்களையும் ஏனைய மாகாணங்கள் போல சம உரிமையுடன் வழங்குவோம்.
நீண்ட காலமாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த நீங்கள் வடக்கு மாகாண சபையை பெரும்பான்மை வாக்குடன் தெரிவு செய்தீர்கள். சர்வதேச அழுதங்கள் காரணமாகவே மாகாண சபை தேர்தலை மஹிந்த வடக்கில் நடத்தினார்.
தேர்தலின் பின்னர் சரியாக முறையில் வடக்கு மாகாண சபையை சரியான முறையில் நடத்த தடை விதித்து வருகின்றனர்.
நாங்கள் ஏனைய மாகாண சபைகள் இயங்குவதற்கு வழங்கும் நிதி, வளங்கள் வழங்குவது போல வடக்கு மாகாண சபையும் இயங்க தேவையான அனைத்தையும் நாங்கள் வழங்குவோம் என்று உறுதி கூறுகின்றோம்.
எனவே மக்களாகிய நீங்கள் உங்களுடைய எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு வாக்களியுங்கள்  என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKbno2.html

மைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை, சம்பந்தன் விளக்கம் - ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்: செல்வம்
[ செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2014, 08:04.52 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆளுந் தரப்பினர் தெரிவித்துவரும் நிலையில், ..
..பொது எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
மூவின மக்களும் ஏற்கக்கூடிய தீர்வே தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். இரகசியமாகவோ, பின்கதவு வழியாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்றும், அவ்வாறானதொரு தீர்வுக்கு கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை என்றும் தெரிவித்த அவர், இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இடம்பெறும் பேச்சுகளும், பெறப்போகும் தீர்வு வெளிப்படையானவையாக இருக்கவேண்டும். நாட்டு மக்கள் அனைரும் அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்பந்தன் எம்.பி. பதிலளித்தார்.
சம்பந்தன் எம்.பியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரது பதில்களும் வருமாறு:
கேள்வி: இரு தரப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் நீங்கள் தீவரமாக ஆய்ந்ததாக கூறினீர்கள். மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 பற்றி குறிப்பிடப்படவில்லை. இது குறித்து உங்களது கருத்து என்ன?
பதில்: அதன் உள்ளடக்கம் குறித்து நாம் பார்த்தோம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது விடயத்தை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. கடந்த 10 வருடமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை நாம் அவதானித்து வருகின்றோம். இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் அவரது அரசு தோல்வியடைந்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் ஒரு வாய்ப்பை வழங்கவுள்ளோம்.
கேள்வி: வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால்சென்று அரசியல் தீர்வுகாண வேண்டும் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் பொது எதிரணிக்கும் உங்களுக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளனவா?
பதில்: அரசியல் தீர்வைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியாக இருக்கிறது. பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள், ஒரு நியாயமான நிரந்தரமான, நடைமுறைக்குச் சாத்தியமான நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு. அதில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கு இடமில்லை. இந்த விடயத்தை வாய்மூலமாகவும், எழுத்துமூலமாகவும் தற்போதைய அரசிடம் நாம் சமர்ப்பித்துள்ளோம். இதை அடைவதற்கு நாங்கள் உழைப்போம். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த நிலைமை தொடந்து பரிசீலிக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவடைந்த பின்னர் எமது முயற்சி தொடரும். எமது மக்களை நாங்கள் அமைதிகாத்து, நாங்கள் அவர்களுக்கு கூறியிருக்கின்ற கருத்தை மதித்து, மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம். அவ்விதமான ஒரு முடிவின் மூலமாக பாரிய மாற்றம் ஏற்பட இடமிருக்கும் என்பதும், நாட்டுக்கு எவ்விதமான பாதகம் ஏற்படாமல் அதே சமயம் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்கள் கெளரவமாக சுயமரியாமையுடன் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அதனால்தான் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
கேள்வி: இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்பவில்லையா?
பதில்: நாங்கள் இது விடயம் சம்பந்தமாக எல்லோருடனும் பேசியிருக்கின்றோம். ஜனாதிபதியுடனும், ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேசியிருக்கின்றோம். அது விடயம் தொடர்பாக நாம் தொடர்ந்தும் அவர்களுடன் பேசுவோம். அதைப்பற்றி தற்போது அதிகம் பேசவேண்டிய தேவை இருப்பதாக எமக்கு தெரியவில்லை.
கேள்வி: கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்கு 10 ஆசனங்களும், எதிர்க்கட்சிக்கு 26 ஆசனங்களும் இருக்கின்றன. இந்நிலையில், கிழக்கில் ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு நடத்தியுள்ளீர்களா?
பதில்: நாங்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்த காலத்திலேயே எம்முடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தோம். அந்த அழைப்பை அவர்கள் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிந்த பின்னர் அவ்வாறானதொரு வாய்ப்பு இருந்தது. அப்பொழுதும் அவர்கள் அரசுடன் இணைந்து ஆட்சியமைத்தனர். இதுவிடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான பதிலையும் கூறமுடியாது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் இவ்விதமான விடயங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படலாம்.
கேள்வி: மு.காவின் கரையோர மாவட்ட கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்: சிறுபான்மை மக்களது கோரிக்கைகள் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படவேண்டும். அவதானிக்கப்பட வேண்டும். அந்தக் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்து. ஆனால், தற்பொழுது நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் எமது கவனத்தைச் செலுத்துகின்றோம். இது விடயம் தொடர்பில் அனைவருடனும் பேசி எல்லா மக்களுக்கும் நன்மை பெறக்கூடிய தீர்வை எடுப்போம்.
கேள்வி: ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜாதிக யஹல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் இருக்கின்ற கூட்டணியில் உங்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?
பதில்: நாங்கள் எவரையும் உதாசீனம் செய்ய மாட்டோம். எவரையும் நாங்கள் உதாசீனம் செய்யத் தயாராயில்லை. நீங்கள் கூறிய கட்சி அரசில் இருந்த ஒரு கூட்டுக்கட்சி. தற்போது பிரிந்து ஒரு வழியில் செல்கின்றனர் அதனால் நாம் எவரையும் நம்பவுமில்லை. நம்பாமலுமில்லை. அவரை நம்பலாம். இவரை நம்ப முடியாது என நாம் முடிவெடுக்க முடியாது. ஒட்டுமொத்தமாக உள்ள சூழலைப் பார்த்து, இந்த சூழலில் எவ்விதமான நகர்வை எமது மக்கள் அடையலாம் எனக் கருதி நாங்கள் முடிவெடுக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக நாங்கள் ஒன்றையும் கூற முடியாது.
கேள்வி: பொது வேட்பாளருடன் நீங்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக ஐ.தே.கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: அவருடைய கதைகளுக்கு நாங்கள் மதிப்பளிப்பது முடியாத விடயம். அவரைப்பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
கேள்வி: இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுவது, காணி பொலிஸ் அதிகாரம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தியுள்ளீர்களா?
பதில்: நாம் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். ஆனால், நீங்கள் கூறிய விடயங்களைப் பற்றியல்ல. நாட்டில் ஏற்பட வேண்டிய அரசியல் தீர்வு தொடர்பில் நாம் அனைவருடனும் பேச்சு நடத்தியுள்ளோம். மைத்திரிபால சிறிசேவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை. அரசியல் ரீதியாகவோ அல்லது முகாம்களை அகற்றுவது தொடர்பிலோ எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை. எமது முடிவை நாம் மிகத் தெளிவாக அறிவித்துள்ளோம். முழு நாட்டு மக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பதே எமக்கு தேவையான முதலாவது காரணியாகும். அதனால், ஜனநாயக சூழல் உருவாக்கப்பட்டதன் பின்னர் நாம் எவருடனாவது பேச்சு நடத்த தயார். அவ்வாறு ஜனநாயக சூழல் இருந்தால், அனைவரும் பேச்சு நடத்துவதற்கு சரியான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான நிலைக்கு நாடு மீண்டும் செல்ல வேண்டும். இது எமக்கு மட்டுமல்ல நாட்டில் வாழும் அனைத்து தரப்பினருக்கும் முக்கியமான பிரச்சினையாகும். அதனால் நாட்டுக்காக நாம் இந்தத் தீர்வை எடுத்துள்ளோம். கதவுக்கு பின்னால் சென்று தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் தயாரில்லை. அது ஒருபோதும் நடக்காது. அதுபோன்ற ஒப்பந்தங்களைச் செய்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் தயாரில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது. முழுநாட்டுக்கும் என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும். என்ன பேச்சு? என்ன தீர்வு என்று முழு நாட்டு மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுபோன்றதொரு நிலைக்கே நாம் தயார். தேசிய பிரச்சினைக்கு தீர்வானது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வே எமக்கு வேண்டும். அதனால், கதவுக்கு பின்னால் சென்று பேச்சு நடத்தி தீர்வுகாண முடியும் என்று நாம் நம்பவில்லை. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அனைத்து மக்களும் ஏற்கும், அனைவருக்கும் நன்மை பயக்கும் தீர்வாக அமையவேண்டும். அப்படியில்லையயன்றால், அது நிலைத்திருக்காது. அதனால், நாம் நடத்தும் பேச்சு, நாம் தேடும் தீர்வு அனைவருக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் தீர்வே எமக்கு தேவை. நாம் தேடும் அரசியல் தீர்வு, தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலே அது இடம்பெற வேண்டும்.
கேள்வி: மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக கூட்டமைப்பு பிரசார மேடைகளில் ஏறுமா?
பதில்: இல்லை
கேள்வி: எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் எதிரணியின் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கின்றீர்கள்?
பதில்: 60 வருடங்களுக்கும் மேலாக இருந்த தேசிய பிரச்சினைக்கு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தீர்வுகாண தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நாம் அனுபவமிக்க, சிரேஷ்ட அரசியல்வாதியான மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியும் என நினைக்கின்றோம். இந்த வாய்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இருந்தது. அவர் செய்யவில்லை. அதனால், இன்னொருவருக்கு அந்த வாயப்பை வழங்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம். அரசியல் தீர்வை வழங்குவதில் மஹிந்த அரசு தோல்வியடைந்துள்ளது. அத்துடன், ஜனநாயகத்தை நிலைநிறுத்தல், நீதித்துறை சுதந்திரம், சட்டவாக்கத்துறை சுதந்திரம், ஊடகச் சுதந்திரம் என்பவற்றில் அரசு தோல்வியடைந்துள்ளது.
கேள்வி: இந்தத் தேர்தலினூடாக ஆட்சிமாற்றமொன்று ஏற்படும் என்று பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளீர்கள். ஆனால், ஆட்சிமாற்றமொன்று ஏற்படாவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: ஒரு தேர்தல் வருகின்றபோது அந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளும் மக்களும் தங்களுடைய சிந்தனைகளின் அடிப்படையில், அப்போதுள்ள நிலைமைகளின் அடிப்படையில் சில முடிவுகளை எடுத்துச் செயற்படுவார்கள். சில சமயம் அது வெற்றியில் அமையலாம், சில சமயம் தோல்வியில் அமையலாம். தோல்வியில் அமைந்தால், அது குறித்து அப்போது தீர்மானிக்கலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு ஆதரவு! - ஆதரவளித்தமை ஏன் கூட்டமைப்பு விளக்கம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தலைவர் ஆர்.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கூட்டம் தொடர்ந்தும் நடைபெறுகிறது.
மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தெர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு,
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும் ஒழுங்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் பின்வருமாறு:
1. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறிவருகின்றார். அத்தோடு தான் நினைத்தபடி சட்டத்திருத்தங்களைச் செய்து மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.
2. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டத்திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுகின்றன.
த.தே.கூ. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 18வது சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததையிட்டு பெருமைகொள்கின்றது. அன்று 18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துத் தவறு செய்தவர்களுக்கு தமது தவறை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.
3. ராஜபக்ஷ அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி நாட்டிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக இன்று எமது பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைபொம்மையாக மாறிக்கிடக்கின்றது.
4. அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்களை, நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 17வது சட்டத்தை மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணையம், அரசசேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர்பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார். இது நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது சுதந்தர ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கானது ஜனநாயகத்தை நலிவுறச் செய்து நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே த.தே.கூ. வின் துல்லியமான கருத்தாகும்.
ராஜபக்ஷ அரசு எப்பொழுதும் தமிழ்பேசும் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழர் பிரச்சினைகளுக்கு பிளவுபடாத இலங்கைக்குள் நேர்மையானதும், நியாயமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஒரு அரசியல் தீர்வினைக் காண த.தே.கூ. அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.
அத்தீர்வு பற்றிய எமது நிலைப்பாட்டை எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் நாம் பகிரங்கமாக நாட்டுக்குத் தெரியப்படுத்திவந்துள்ளோம். யுத்தத்திற்குப் பின்னர் ராஜபக்ஷ அரசானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர முயலாது காலத்தை வீணடிக்கும் கபடத்தனமான செயல்களையே செய்துவந்துள்ளது.
யுத்தம் காரணமாக வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. வீடுகளோ, வாழ்வாதாரங்களோ, பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வடக்குக் கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை ராஜபக்ஷ அரசு ஆக்கிரமித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பொருட்படுத்தாது ராஜபக்ஷ அரசு இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டபடி காணிகளைச் சுவீகரித்து வருகின்றது.
பாதைகளையும், பாலங்களையும் கட்ட கண்மூடித்தனமாகச் செலவிடப்பட்ட பெரும்தொகைக் கடன் பணம், வரி என்ற பெயரில் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்து நீண்டகாலமாகியும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ராஜபக்ஷ அரசு உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இன்றும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தகுந்த வாழ்வாதாரமோ, வீடுகளோ இல்லை. போதுமான உணவோ, சுய மரியாதையோ, பாதுகாப்போ இன்றி அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். குறிப்பாகப் பெண்களும், பிள்ளைகளும் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகின்றனர்.
யுத்தத்தால் இறந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் எவ்வித இழப்பீடும் நீதியும் இன்னும் கிடைக்கவில்லை. ராஜபக்ஷ அரசு தமிழ்பேசும் மக்களுக்கு மோசமான துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே வழங்கியுள்ளது.
இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வணக்கஸ்தலங்கள்மீது தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களுக்கு இடமளித்தது. அத்தோடு நில்லாமல் தாம் அரங்கேற்றிய இன, மத வன்செயல் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கவும் முயன்றது.
இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து, 18வது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு களம் இறங்கியுள்ள பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம்.
பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாய், சமத்துவமாய், சுய கௌரவத்துடன் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படுவதற்கு சகல இன மக்களுடனும் முறையாக ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது த.தே.கூ. வின் கருத்தாகும்.
எனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும்,நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.
இதற்காக அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களும் தமது வாக்குகளை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்: செல்வம் எம்.பி
நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எங்களைப் பொறுத்தமட்டில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லை. வெளிப்படையாகவே ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினை சார்ந்து பல விடயங்களை இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் தேவையென்ற மன நிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKbno3.html

Geen opmerkingen:

Een reactie posten