தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 december 2014

மன்னார் ஆயரைச் சந்தித்த மைத்திரி! ஆசியும் பெற்றுக் கொண்டார்- இந்த அரசியல்வாதிகள் எமக்கு ஒன்றும் தரவில்லை: மன்னார் ஆயர் !



பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மன்னார் ஆயரை சந்தித்து கலந்துரையாடி அவரிடம் ஆசியையும் பெற்றுக் கொண்டார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக, ரிஷாத் பதியுதீன், காலஞ்சென்ற ஜயலத் ஜயவர்தனவின் புதல்வரும் அரசியல்வாதியுமான காவிந்த, மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை, ஆயரின் செயலாளர் அருட்பணி முரளி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த அரசியல்வாதிகள் எமக்கு ஒன்றும் தரவில்லை: மன்னார் ஆயர்
தமிழ் ஈழத்தைத் தவிர தமிழ் மக்களுக்கு எல்லாம் தருவேன் என இந்த அரசியல் வாதிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களுக்கு ஒன்றும் தரவில்லை. எங்களுக்கு ஈழம் தேவையில்லை. மாறாக நாங்கள் சுய மரியாதையோடு வாழும் மக்களாக இருக்க வேண்டும் இதனையே எதிர்பார்க்கிறோம் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் மன்னாருக்கு இன்று செவ்வாய்கிழமை வருகை தந்து மன்னார் ஆயரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே ஆயர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற மைத்திரிபால உள்ளிட்ட குழுவினர் வந்தார்கள். இதன் நோக்கம் என்னவென்றால் தமிழ் மக்களின் ஆதங்கங்களை அறிந்து கொள்வதே. ஏனென்றால் அவர்கள் கூட்டம் வைக்கும்போது தமிழ் மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு நேரம் இன்மையாலும் அத்துடன் அவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி விட்டு சென்று விடுவார்கள் என்பதாலும் என்னுடன் பேசுவதற்காக இங்கு வருகை தந்திருந்தார்கள்.
அவர்களுடன் மக்களின் முக்கிய பிரச்சினைகளை பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம். இருந்தும் அதைப் பற்றி பேசவேண்டியது சம்பந்தமாக அரசியல் விடயமே பேசினோம். இந்த நாடு பல இனங்களைக் கொண்ட நாடு. அத்துடன் பல சமயங்கள் கொண்ட நாடு. ஆனால் ஒரே மக்கள் ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற இந்த ஆட்சியில் துன்பங்களை தாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் கருத்துக்கள் அவர்களின் சிந்தனைகளுக்கு வருவதில்லை.
மாறாக தமிழ் மக்களுக்கான எதிர்ப்பு உணர்வுகளையே அவர்களிடமிருந்து நாங்கள் சந்தித்துள்ளோம். இவ்வாறான இடர்களை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை. தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் சிங்கள மக்கள் தங்களுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பார்கள் என ஒரு மாயையில் அவர்கள் சிக்குண்டு இருந்தார்கள். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரே நாட்டு மக்கள்.
அனைவரும் சமரசமாக வாழவேண்டியவர்கள். அப்படித்தான் நாங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் தமிழ் மக்களைப் பற்றி தவறான எண்ணத்தையும் சிந்தனையையும் தோற்றுவிக்கும் முகமாகவே சிங்கள மக்களிடம் அரசியல்வாதிகள் கருத்துக்களைக் கூறிவந்துள்ளனர். ஆனால் தமிழ் மக்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை. ஏனென்றால் ஒரு துன்பம் நேருமானால் அது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நேர்ந்ததாகத்தான் நாம் உணர்கிறோம்.
ஆகவே இந்த நாட்டிலுள்ள அரசால் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும். தமிழ் ஈழத்தை தவிர தமிழ் மக்களுக்கு எல்லாம் தருவேன் என இந்த அரசியல் வாதிகள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் எங்களுக்கு ஒன்றும் தரவில்லை. எங்களுக்கு ஈழம் தேவையில்லை மாறாக நாங்கள் சுய மரியாதையோடு வாழும் மக்களாக இருக்க வேண்டும்.
 பல இனம், மொழி, சமயம் கொண்ட இந்த நாட்டில் தமிழ் மக்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் உரிமைகளை அரசியல் ரீதியாகவும் அகிம்சை வழியாகவும் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இவைகள் எல்லாம் ஆயுதங்கள் கொண்டு நசுக்கப்பட்டனவே தவிர வேறு எந்த பயனும் கிடைக்கவில்லை. இதனால்தான் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றிணைந்து நாட்டை நல் வழியில் கொண்டு செல்வதற்கு அரசியல் தீர்வு மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் முனைந்தோம்.
இந்த நாடு இயற்கையிலே ஓர் அழகான நாடு. இது இறைவன் எமக்கு தந்த பெருங்கொடை. ஆனால் மனிதர்களோ இவற்றை அழிப்பதிலேதான் முனைந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆகவேதான் இது மாற்றம் பெற்று ஒரு புதிய நாடாக ஓர் அழகான இலங்கையாக மாறவேண்டியுள்ளது.
இதைத்தான் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகின்றோம். தமிழ் மக்களுக்கு நீண்ட காலப் பிரச்சினைகள் இருக்கின்றன. இதைப்பற்றி நாம் சிந்திக்கத் தேவையில்லை என்று அரசில்வாதிகள் இருக்க முடியாது. அதைக் கேட்பவர்களையும் அவர்கள் தண்டிக்க முடியாது. இவற்றைக் கேட்பவர்கள் தமிழ் பகுதியில்தான் இருக்கின்றார்கள் எனவும் சொல்ல முடியாது.
தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் வட மாகாண சபையிடனும் பேச்சு நடத்தும்போதுதான் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்கொண்டு வருவார்கள். அப்பொழுது எல்லோரும் ஒன்றினைந்து ஒரு தீர்வை பெறமுடியும். இப்படியான காரியம் செய்யப்படுமானால் அநீதிகளோ மக்கள் புறக்கணிப்போ இந்த நாட்டில் ஏற்படாது.
மேலும் இந்த நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், விதவைகள், உடலில் காயத்துடனும் குண்டுகளுடனும் இன்னும் மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இது ஏன் கவனத்துக்கு எடுக்கப்படவில்லையென்றால் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கு தேவைப்படாது என்ற காரணமே. ஆனால் தற்பொழுது எதிரணியில் போட்டியிடும் அமைப்பு, அதன் வேட்பாளர் ஒரு பரந்த மனப்பாங்குடன் மட்டுமல்ல அவற்றை நல்ல முறையில் செயல்படுத்தவேண்டும் என கேட்டுக் கொண்டபோது அவர்களும் அதே மனப்பாங்குடன் இருக்கின்றனர் எனத் தெரிவித்தனர்.
அத்துடன் இவர்களின் செயல்பாட்டிலும் விஞ்ஞாபனத்திலும் இவர்களின் நல்லெண்ணங்கள் இருப்பதையும் எம் மக்கள் நன்கு அறிவார்கள். ஆகவே எமது தமிழ் மக்கள் இவர்களுக்குத்தான் வாக்களிப்பர். ஆகவே இவர்களின் நல்லெண்ணங்கள், செயல்பாடுகள் நல்ல முறையில் நடைபெற வாழ்த்தியதுடன் இந்த நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் திகழ வாழ்த்தி அனுப்பினேன் என மன்னார் ஆயர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCQUKaev7.html

Geen opmerkingen:

Een reactie posten