[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 03:04.31 PM GMT ]
குறிப்பாக மட்டக்களப்பு நகரில் இருந்து படுவான்கரை பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் இயந்திர படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றது.
படுவான்கரை பிரதேசத்தின் மிக முக்கிய போக்குவரத்துப்பாதையான வலையிறவு-மட்டக்களப்பு வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அதன் ஊடாக இயந்திரப்படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இந்த இயந்திர படகுச்சேவை நடத்தப்பட்டு வருவதுடன் இதற்கு படையினர் உதவி வருகின்றனர்.
வலையிறவு-மட்டக்களப்பு வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக வவுணதீவுக்கான அனைத்து போக்குவரத்துப்பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் புத்தூர், வலையிறவு, திமிலதீவு பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக மட்டக்களப்பு நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள், அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தநிலையில் இந்த போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பு நகரிலும் வெள்ளம் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் மற்றும் பிரதான தனியார் பஸ் நிலையம் என்பன நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் இருந்தே சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளான மஞ்சந்தொடுவாய், நாவற்குடா,கல்லடி, உப்போடை, சீலாமுனை, அமிர்தகழி, இருதயபுரம், ஊறணி, உப்புக்கரச்சி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx1.html
தேர்தல் பிரச்சாரத்தில் சிறார்கள்! தேர்தல் ஆணையரிடம் முறைப்பாடு
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 03:15.56 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.
தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவின் உருவப் படங்களை ஏந்துவதற்கும் கொடிகளை அசைப்பதற்கும் சிறார்கள் பயன்படுத்தப்பட்ட பல சந்தர்ப்பங்கள் ஊடகங்களில் காண்பிக்கப்பட்டன.
சிறார்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை அரசு, சிறார்களின் உரிமைகளைக் காப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக நல்லாட்சிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சேனக டி சில்வா தெரிவித்தார்.
இந்த சட்டவிதி முறைகளுக்கு அமைய சிறார்களை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பெருமளவிலான சிறார்கள் பயன்படுத்தப்படுவதை ஊடகங்களில் காணமுடிவதாகவும் வழக்கறிஞர் சேனக டி சில்வா தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரங்களில் சிறார்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறார்கள் தொடர்பான புகார்களை ஆராய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரங்கள் உள்ளனவா என்று கேட்டபோது, 'ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக இவ்வாறான சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு உள்ளதாக சேனக டி சில்வா கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx2.html
விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு: ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியாவிடம் கோரும் நா.க.தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானம்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 03:26.54 PM GMT ]
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது எனக் கோரியுள்ளது.
நடந்த முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது என்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முழுமையான வடிவம்:
1. தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த சிறிலங்கா அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறை, துன்புறுத்தல்கள், அரச வன்முறை, அரசால் நடத்தப்படும் வன்முறைகள் ஆகியவற்றை தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகின்றன என்பதை நினைவில் இருத்திக் கொண்டு,
2. தமிழரது தேசிய சிக்கலை அமைதி வழியில் தீர்த்துக் கொள்வதற்கு உள்நாட்டிலோ சர்வதேசத்திலோ எந்த அரங்கமும் இல்லாததோடு, அமைதி வழியிலான தமிழ் மக்களின் போராட்டம் தோல்வியடைந்ததையும் நினைவில் இருத்திக் கொண்டு,
3. மேற்கூறிய காரணங்களின் விளைவாக, தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றிடவே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உருவானது என்பதை அங்கீரித்துக் கொண்டு,
4. தமிழ் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை தமது உண்மையான பிரதிநிதிகளாகவும் பாதுகாவலர்களாகவும் கருதினார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு
5. 2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடனும் ,இணைத் தலைமையில் இயங்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், யப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவுடனும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான முயற்சிகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டும்.
6. 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்.
7. சர்வதேச அங்கீகாரத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 2002 போர் நிறுத்த ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டு தமிழ்தேசிய பிரச்சினைக்கும் இராணுவ தீர்வு காண்பதற்கென சிறிலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதை கவனத்தில் எடுத்துக் கொண்டும்,
8. 2006இல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை, ஒரு விதத்தில் இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடத்துவதற்குத் துணை செய்தது என்பதை கவனத்தில் கொண்டும்,
9. விடுதலைப் புலிகளின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தகுதி வாய்ந்த நிர்வாகத்தினால் நிரூபிக்கப்படவில்லை என்பதும் பிற நியாயாதிக்க எல்லைகளுக்கு உட்பட்ட தீர்மானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அளவுகோலுக்கு இணையானவர்களா என்பதும் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் குறித்துக் கொண்டு,
10. விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மே 16 2009ம் ஆண்டு முதல் மௌனித்தன என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்.
11. மீண்டும் பட்டியலில் போடுவது தொடர்பாக உண்மை நிலவரம் மாறியுள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டும்.
12. 2009 வருடத்தில் இருந்து இன்று வரை விடுதலைப்புலிகள் செய்ததாக, தகுதி வாய்ந்த நிர்வாகத்தினால் நிரூபிக்கப்பட்ட எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்.
13. சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக மிகவும் இழிவுபடுத்தும் பதமான பயங்கரவாதம் என்ற பதத்தை பயன்படுத்தி வருகிறது என்பதையும், தமிழ்த்தேசிய பிரச்சினை அப் பதத்துக்கு இணையாக நிறுத்துகிறது என்பதைக் கவலையுடன் குறித்துக் கொண்டும்,
14. பயங்கரவாதத் தடை என்ற பேரில் தமிழ்மக்கள் மீது அவப்பெயர் சூட்டப்படுவதை கவலையுடன் குறித்துக் கொண்டும்,
15. அந்த அமைப்பின் மீதான பயங்கரவாதத் தடையையும், தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அரசியல் குறிக்கோள்களையும் பிரிக்கும் கோடுகள் படிப்படியாக மங்கி வருகின்றன என்பதை குறிப்பில் எடுத்துக் கொண்டும்,
16. பயங்கரவாதம் என்ற முத்திரையை நீக்குவது ஒரு சமமான களத்தை உருவாக்கும் என்றும் சமதர்ம அடிப்படையில் தமிழ் தேசிய பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் உறுதியான நம்பிக்கையுடனும்
இவ்வாறாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருமனதாகக் கோருகிறது:
1. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது.
2. அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும் இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும்.
3. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ கூடாது என்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகள் கோரிக்கை விடுக்க வேண்டும்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx3.html
கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு - மைத்திரிக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பினர் முக்கிய கலந்துரையாடல்
[ சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2014, 03:45.21 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
ஜனநாயக கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ராஜித ஹப்புவாராச்சி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.
மைத்திரிக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பினர் முக்கிய கலந்துரையாடல்
ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.
வவுனியாவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோதராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் சந்திரகுலசிங்கம், சுத்தானாந்தா இந்து இளைஞர் சங்க தலைவரும் தமிழரசுக் கட்சி மத்தியகுழு உறுப்பினருமான ந.சேனாதிராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி உள்ளிட்ட பலர் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், வன்னி தேர்தல் தொகுதிக்கென நியமிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ந.சேனாதிராஜா தலைமையில் இடம்பெறவுள்ள பிரசார நடவடிக்கைகளை கூட்டமைப்பு தீவிரமாக மேற்கொள்ளும் என்று தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என தெளிவாக அறிவிக்காத நிலையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRbKagx4.html
Geen opmerkingen:
Een reactie posten