தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 december 2014

தூங்கிக் கொண்டிருந்த தொண்டமானை தட்டி எழுப்பியுள்ளோம்! மனோ கணேசன்!

மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் இனிய நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, “தூங்காதே தம்பி, தூங்காதே” என்று  நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
எட்டியாந்தோட்டை கலுபான, உருளைவள்ளி, எதிராபொல, கிரிபோருவ, களனி, பனாவத்தை, டெக்லாஸ், தெனடின் தோட்டங்களில் நடைபெற்ற தொடர் கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
இன்று அவர் மலையகத்தின் எந்த பகுதிக்கும் சென்று சந்திரனை தருகிறோம், இந்திரனை தருகிறோம், வீடு கட்டி தருகிறோம், கடை கட்டி தருகிறோம் என்றெல்லாம் சொல்லி, எங்கெல்லாம் அடிக்கல் நாட்டினாலும் கூட, அவற்றிற்கான அனைத்து பெருமைகளும் எங்களையே சாரும். 
ஏனெனில், தோட்ட தொழிலாளர்களின் காணியுரிமை பிரச்சினையை மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்து, இதை இன்று எவரும் மறுக்க முடியாத நிலைமையை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
இது நம் கூட்டு முயற்சியின் வெற்றி. ஜனநாயக மக்கள் முன்னணி எதிரணியில் இருக்கின்றது. தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளும் இன்று எதிரணியில் வந்து இணைந்துள்ளன.
மலையக தோட்ட தொழிலாள மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நலன் கருதி இந்த கூட்டை தொடர செய்வது தம்பி திகாம்பரத்தினதும், அண்ணன் இராதாகிருஷ்னணினதும் பொறுப்புகள்.
இது என் நம்பிக்கை என  50,000 வீடுகளை மலையக தொழிலாள குடும்பங்களுக்கு கட்டி தருகிறேன் என்று, 2013ம் வருடம் வரவு செலவு திட்டத்தில் சொன்ன மகிந்த ராஜபக்ச, இதுவரை இந்த இரண்டு வருடத்தில் அதற்காக 50 சதம் கூட ஒதுக்கவில்லை.
அதை தட்டி கேட்டு  பெற்று தர ஆறுமுகம் தொண்டமானுக்கு தெரியவில்லை. இப்போது நாங்கள் காணி, வீட்டு உரிமைகளை பற்றி மைத்திரியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவுடன் தூங்கி கொண்டிருந்த ஆறுமுகன் எழுந்து வந்து கோத்தபாய  ராஜபக்சவை மீரியபெத்தைக்கும், பூண்டுலோயவிற்கும் அழைத்து சென்று, தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் இருக்கும் இந்த வேளையில் அடிக்கல் நாட்டுகிறார்.
ஆகவேதான் சொல்கிறேன். தூங்கிகொண்டிருந்த தம்பியை "தூங்காதே தம்பி, தூங்காதே" என்று நாம் தட்டி எழுப்பியுள்ளோம்.   நாடு முழுக்க நான் இன்று நாடோடியாக சுற்றுகிறேன். தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்து கூறி எதிரணிக்கு வாக்கு கேட்கிறேன்.
சிங்கள மக்கள் வாழும் பகுதி மேடைகளில் சிங்கள மொழியில் உரையாற்றி எமது பிரச்சினைகளை கூறுகிறேன். வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் ஆங்கிலத்தில் எடுத்து கூறுகிறேன். அலைந்து, திரிந்து இப்போது என் தொண்டை வறண்டு, குரல் கம்மி இருக்கிறது.
இத்தனை கஷ்டங்கள் எதற்காக? எங்கள் மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே.  நான் ஒரு கோபக்காரன். அதாவது அநீதியை கண்டால் எனக்கு கோபம் வரும். இன்று எதிரணியில் இருந்து நான் அநீதியை எதிர்த்து போடுகிறேன்.
நாளை, நாம் உருவாக்கும் நமது அரசிலும் நமக்கு இதே அநீதி இழைக்கப்படுமானால், இதே கோபம் அப்போதும் எனக்கு வரும். அப்படியானால், இதே போராட்டம் அப்போதும் தொடரும். நமது  மக்களின் நல்வாழ்வுதான் எனக்கு முக்கியம்.
அந்த நல்வாழ்வு என்ன? இந்த நாட்டிலே வாழும் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வாழ்வாதார, சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் உரிமைகளும் நமக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
எமக்கு எதிரான இனவாத சிந்தனைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதாகும். இவற்றிற்காகத் தான் நான் இடைவிடாமல் போராடி வருகிறேன். 
இந்த நோக்கில்தான் கடந்த சப்ரகமுவ மாகாணசபை தேர்தலில், இந்த  எட்டியாந்தோட்டை தொகுதி உள்வரும் கேகாலை மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து, சேவல் சின்னத்துக்கு வாக்கு கேட்டேன். அதன் மூலம்தான் இந்த மாவட்டத்து தமிழ் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுமென்று நான் முடிவு செய்தேன்.
அது ஒரு நல்லெண்ண முடிவு. அதன் மூலம்தான் இங்கே ஒரு தமிழர் மாகாணசபை பிரதிநிதியாக வர முடிந்தது. இன்றைய கேகாலை மாவட்ட சப்ரகமுவ மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனை அரசியலுக்கு கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதே நான்தான்.
இது எட்டியாந்தோட்டை மக்களுக்கு தெரியும். இந்த ஊர், அறிவும், வீரமும் கொண்டவர்களை கொண்ட ஊர். இது நான் பிறந்த என் சொந்த ஊர். இந்த களனி கங்கை நதி நீரை குடித்து விட்டுத்தான் மாகாவலி நதி நீரோடும் கண்டிக்கு நான் சென்றேன்.
எனது நல்லெண்ணத்தை ஆறுமுகன் தொண்டமான் புரிந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிந்தவுடன் எட்டியாந்தோட்டையில் கிடைத்த வெற்றி, தங்கள் சொந்த வெற்றி என்று அவரது கட்சியை சேர்ந்தவர்கள் பேசத்தொடங்கிவிட்டார்கள்.
இங்கே மட்டுமல்ல, இரத்தினபுரி மாவட்டத்திலும், அப்படித்தான். அங்கே எங்கள் கூட்டு முயற்சியால் மாகாணசபைக்கு வெற்றி பெற்ற ராமச்சந்திரன் என்ற நபரை இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் இப்போது காணவில்லை என தேடிக்கொண்டிருக்கின்றர்கள்.
இவ்வளவும் செய்துவிட்டு, ஆறுமுகன் தொண்டமான்  எனது கொழும்பு மாவட்டத்திலும், வந்து  மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு சுமார் 3,000 தமிழ் வாக்குகளை தேவையில்லாமல் சிதறடித்து, கொழும்பு தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க ஒரு காரணமானார் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRcKafr6.html

Geen opmerkingen:

Een reactie posten