தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 december 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும்! மட்டக்களப்பில் மைத்திரி - ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பு!



சகல இன மக்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது பக்கம் வருகின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடனடியாக எனக்கு ஆதரவு வழங்கி எனது பக்கம் வரவேண்டும் என ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற தேர்தல் பிரட்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மறை்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
மக்களது பணங்களைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் தனது பொக்கட்டில் போடுகிறார் மகிந்த. அரசாங்க ஊழியர்களையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் செய்வதுடன் ஒரு சர்வாதிகாரியாகச் செயற்படுகிறார்.
எனவே மட்டக்களப்பு மக்களே! நீங்கள் இப்படிப்பட்ட ஜனாதிபதியைக் காப்பாற்றப் போகிறீர்களா? அல்லத எமது நாட்டைக் காப்பாற்றப் போகிறீர்களா? சிந்தியுங்கள்.
எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றியே எனக்கு ஆதரவு வழங்கி எங்களது கட்சியில் வந்து சகல மக்களும் ஒன்று சேர்கிறார்கள்.
மேலும் நாங்கள் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற எந்தக் கட்சியுடனுமே எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இனறியே எமக்கு  ஆதரவு வழங்குகின்றனர்.
ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் நாங்கள் எந்த உடன்படிக்கையையும் செய்யவில்லை.
இந்த நேரத்தில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.
இன்னும் காலம் தாழ்த்தாமல் எனக்கு ஆதரவு வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் நான் உங்களுக்கு விடுதலை அளிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பு: மைத்திரியும் பங்கேற்பு
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.
இதனையடுத்து அமைச்சுப் பதவியைத் துறந்த ஹக்கீம் உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.கா. தலைவர் ஹக்கீம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவளிக்கும் வகையில் கலந்து கொண்டார்.
மைத்திரிபாலவின் மேடையில் முஸ்லிம் காங்கிரஸ் ஏறிய முதலாவது நிகழ்வாக அது அமைந்திருந்தது. இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொத்துவிலுக்கு வருகை தந்த ஹக்கீமுக்கு அங்குள்ள மக்கள் ஒன்று திரண்டு உற்சாக வரவேற்பளித்துள்ளனர்.
மொத்தமாக சுமார் 50 கிலோ கிராமுக்கும் அதிகமான எடையில் மலர் மாலைகளும் அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வுகளில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொத்துவில் மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.
பொத்துவிலில் நடைபெற்ற குறித்த பொதுக் கூட்டத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRdKaep6.html

Geen opmerkingen:

Een reactie posten