தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 december 2014

தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் முடிவும் அதிர்­வ­லை­களும்

குருநாகலில் கலைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: நீலப்படையணி மறுப்பு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 04:46.20 AM GMT ]
குருநாகலில் கலைஞர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தமது உறுப்பினர்கள் தொடர்புபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் நில் பலகாய என்ற நிலப்படையணி தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று குருநாகலில் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் கூட்டத்தில் பங்கேற்ற இலங்கையின் உள்ளூர் கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நில் பலகாய அமைப்பே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் அந்த அமைப்பின் பேச்சாளர் எரிக் வீரவர்த்தன நிராகரித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேல்மாகாணசபை உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப்பொதுச்செயலருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnq2.html
நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துங்கள்!: பொதுநலவாய அமைப்பிடம் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:03.15 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நீதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு பொதுநலவாய அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள நல்லாட்சிக்கான ஆஸ்திரேலிய நட்புறவுச் சங்கம் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கமலேஷ் சர்மாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இந்த அமைப்பின் தலைவர் லயனல் போபகே, இலங்கையில் நல்லாட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முக்கிய பங்காற்றும் என்று எதிர்வு கூறியுள்ளார்.
எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அவர் பொது நலவாய அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnq3.html
மஹிந்தவுக்கு அரச ஊடகங்கள் ஒருதலைப்பட்ச பிரச்சாரம்: தேர்தல் கண்காணிப்பாளர்கள் முறைப்பாடு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:23.56 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அரச ஊடகங்கள் ஒருதலைப்பட்சமான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையாளரின் சுற்று நிருபத்துக்கு எதிரான முறையில் அரசாங்க ஊடகங்களான ரூபவாஹினி,சுயாதீன தொலைக்காட்சி என்பன தங்களது செய்திகளில் மட்டுமன்றி ஏனைய நிகழ்ச்சிகளிலும் அரசாங்கத்தின் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிம் முறையிட்டுள்ள பெப்ரல் அமைப்பு, அரச ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக டி.ஐ.எஸ்.எல் அமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அரச ஊடகங்கள் மட்டுமன்றி, அரச வளங்கள் அனைத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப சொத்தாக கருதி அவர் செயற்படுவதாக அனைத்து தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnq4.html
தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் முடிவும் அதிர்­வ­லை­களும்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 05:25.10 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஆராய்ந்து வந்தது.
இரு தடவைகள் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவும் கூடி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியது.
இதேபோல் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான இலங்கை தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்.,  புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்களின் கூட்டமும் இடம்பெற்றிருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிலிருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பியிருந்தார். அன்றைய தினம் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றதுடன் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவர் சம்பந்தனிடம் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சார்பிலும் கோரப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில தினங்களிலேயே இம்முறைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும், இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியாவது ஒத்துழைப்பினை வழங்கி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அமைச்சர் பஷில் ராஜபக்சவின் கோரிக்கையினை உடனடியாக நிராகரிக்காத கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சரின் கோரிக்கை தொடர்பில் ஆழமாக பரிசீலிப்போம். அரசாங்கமானது அரசியல் தீர்வு விடயத்தை இழுத்தடித்து வந்தாலும் கூட அரசாங்கத்தின் அழைப்பை பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளின் போதும் அமைச்சர் பஷில் ராஜபக்ச கூட்டமைப்பின் ஆதரவினை பல தடவைகள் கோரியிருந்தார்.
இதேபோல் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவும் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் வலியுறுத்தி வந்தார்.
நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்விதமான நிபந்தனைகளுமின்றி ஆதரவளிக்கவேண்டும். தீர்வை வழங்கும் இயலுமை உள்ள தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்பதனால் கூட்டமைப்பு எங்களையே ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசாங்கத் தரப்பிலிருந்து இவ்வாறு கூட்டமைப்பிற்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டதைப் போலவே எதிரணித் தரப்பிலிருந்தும் அழைப்புக்கள் கிடைத்திருந்தன.
இதற்கிணங்க கூட்டமைப்பின் தலைவர்கள் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் சந்தித்துப் பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு நகரம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக எங்களோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இரு கூட்டங்களில் பேசிய அவர் பகிரங்கமாகவே இவ்வாறான அழைப்பை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய சூழ்நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பானது எதிரணி வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியிருக்கின்றது.
தேர்தலுக்கு இன்னமும் 9 தினங்களே எஞ்சியுள்ள நிலையிலேயே இந்த ஆதரவு வெளியிடப்பட்டிருக்கின்றது.
வடக்கு-, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ப. உதயராசா தலைமையிலான சிறிரெலோ ஆகிய கட்சிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இந்தக் கூட்டமைப்பிலிருந்து முரண்பட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பொது எதிரணி வேட்பாளருக்கு நேற்றைய தினமே ஆதரவை அறிவித்துள்ளது.
ஆனால் அதற்கு முன்னரே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
வடக்கு, -கிழக்கை இணைப்பதற்கும் இராணுவத்தினரை அகற்றுவதற்கும் இணக்கம் தெரிவித்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
கூட்டமைப்பினர் மீது அரசாங்கத் தரப்பில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்திவந்த வேளை மறு தரப்பினர் ஆதரவுக்கான அழைப்பினை விடுத்து வந்தனர்.
கூட்டமைப்பானது ஜனாதிபதி தேர்தலில் எவரையும் ஆதரிக்காது நடுநிலை வகிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் தரப்பினர் மத்தியில் காணப்பட்டு வந்தது.
ஆனாலும் தற்போதைய நிலைவரங்களை கவனத்தில் கொண்டு கூட்டமைப்பானது எதிரணி வேட்பாளரை ஆதரிக்க தீர்மானித்திருக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்ததையடுத்து இனவாதக் கருத்துக்கள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முஸ்லிம்களுக்கென தனியான கரையோர மாவட்டம் வழங்குவதற்கு மறுத்துவிட்டார். இதனால் தான் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு எதிரணியில் இணைந்துள்ளது.
ஜனாதிபதி மறுத்ததைப் பெறுவதற்காகவே ரவூப் ஹக்கீம் எதிரணிக்கு சென்றிருக்கின்றார். அவர் ஒரு அரசியல் விபசாரியென பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நிர்வாக அலகொன்றை வழங்க முடியாது என்று நாம் கூறியமையினாலேயே முஸ்லிம் காங்கிரஸ் பிரிந்து சென்றுள்ளது.  ஒற்றையாட்சியை மீறும் வகையில் உடன்படிக்கைகளை செய்ய முடியாது. இவ்வாறு செய்வதன் மூலம் நாட்டில் இனவாதப் பிரச்சினைகள் உருவாகலாம் என்று தெரிவித்திருந்தார்.
மற்றொரு அமைச்சரான லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன பொது எதிரணியானது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் முஸ்லிம் காங்கிரஸுடனும் உடன்படிக்கை செய்துகொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே உடனடியாக அந்தந்தத் தரப்புகளுடன் செய்துகொண்டுள்ள உடன்பாடுகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இரகசியமாக எதனையும் வைத்திருக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் மேலெழும் சூழ்நிலையே உருவாகியிருக்கிறது.
தேர்தல் பிரசாரங்களின் போது முஸ்லிம் காங்கிரஸ் மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புமீதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனால் தென்பகுதியில் சிங்கள வாக்குகள் அதிகரிக்கும் என்ற நிலை காணப்படலாம்.
ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தேர்தல் வரை வேண்டுமானால் உதவலாம். தேர்தல் முடிவடைந்த பின்னர் நாட்டை கட்டி வளர்ப்பதற்கு இத்தகைய பிரசாரங்கள் உதவப்போவதில்லை.
எனவே அரசியல் போட்டா போட்டிகளுக்காக சமூகங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு எவராவது முனைந்தால் அது தவறானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnq5.html

Geen opmerkingen:

Een reactie posten