[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:32.51 AM GMT ]
எதிர்க்கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாந்தோட்டை நகரில் வீதி நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்த நாடகக் கலைஞர்கள் மீது அம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் உள்ளிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வீதி நாடகக் கலைஞர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். வீதி நாடகக் கலைஞர் ஜயதிலக்க பண்டாரவும் காயமடைந்துள்ளார்.
கலைஞர் பண்டார அம்பாந்தோட்டைக்கு வெளியே உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர்,
“பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்த போது நகரசபைத் தலைவர் எம்மைத் தாக்கினார். சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு 50 மீற்றர் தூரம் கூட இல்லை.
பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது நகரசபைத் தலைவர் எம்மீது தாக்குதல் நடத்தினார்” என நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கான் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp6.html
ஜனவரி 9ல் நடக்கப் போவது என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:33.56 AM GMT ]
அரசியல், ஊடக வட்டாரங்களில் மட்டு மன்றி, தேர்தல் பிரசார மேடைகளிலும் இதுபற்றி சிலாகிக்கப்படுகிறது.
எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, பிரசார மேடைகளில், ஊழல் செய்தவர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடாத வகையில், வரும் ஜனவரி 8ம் திகதி நள்ளிரவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடப் போவதாக கூறியிருந்தார்.
அத்தகைய கட்டத்தில் இந்தியாவோ அல்லது வேறு நாடுகளோ, அவரைக் காப்பாற்ற முனையக் கூடாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பக்கத்தில் தாம் தோல்வியுற்றால், சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்கு, புலம்பெயர் தமிழர்களும் புலிகளும், சர்வதேச சக்திகளும், மட்டுமன்றி உள்ளூரிலுள்ள சிலரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேடை மேடையாக கூறி வருகிறார்.
என்றாலும், தாம் ஒரு போதும் நாட்டை விட்டு ஓடப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரசார மேடைகளில் நம்பிக்கையூட்ட முனைகிறார்.
இறுக்கமான போட்டியொன்று நிலவுகின்ற சூழலில், யார் பக்கம் வெற்றிக் காற்று வீசும் என்று சரியாக உய்த்துணர முடியாத ஒரு நிலை தான் இப்போது உள்ளது.
இந்தநிலையில், எப்போதுமே வெற்றியைப் பற்றியே பேசி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தோல்வி குறித்தும், தோல்விக்குப் பிந்திய நிலை குறித்தும் பேச ஆரம்பித்திருப்பது முக்கியமானது.
அதாவது, தமது வெற்றியின் மீது அவருக்கு நூறுவீத நம்பிக்கை இல்லை என்பதால் தான், எதிரணியினரின் பிரசாரங்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒரு வேளை, இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினால், அவர்,
*எதிரணியினர் கூறுவது போன்று ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிடுமா?
*சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்காக கொண்டு செல்லப்படும் நிலை உருவாகுமா?
*தோல்வியுற்றவுடன், வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முனைவாரா?
* ஆட்சியதிகாரத்தை சுமுகமாக ஒப்படைக்க முன்வருவாரா? இந்தக் கேள்விகள் இப்போது பரவலாகவே கேட்கப்படுகின்றன.
மைத்திரிபால சிறிசேன கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடி, ஊழல் செய்தவர்கள் தப்பியோடாமல் தடுக்கப்படும் என்று கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாகவே, நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள், தேர்தல் ஒன்றில் தோற்கடிக்கப்படும் போது, நாட்டை விட்டு இரவோடு இரவாகத் தப்பியோடுவது வழக்கம். அல்லது இராணுவத்தின் துணையுடன், அதிகாரத்தை இறுகப் பற்றிக் கொள்வதற்கு முயற்சிப்பார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில், இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முடிவை எடுப்பார் என்று நம்புவதற்கில்லை.
ஏனென்றால், அவர் உள்நாட்டில் இருந்து கொண்டு எத்தகைய நிலைமைகளையும் எதிர்கொள்வதற்கு அவ்வளவாக அஞ்ச வேண்டிய நிலை இல்லை.
சரத் பொன்சேகாவைப் பிடித்து அடைத்தது போன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இரவோடு இரவாகப் பிடித்து சிறையில் போட முடியாது.
அதற்கு இந்தியா போன்ற நாடுகள் அனுமதிக்க வாய்ப்பில்லை.
அதேவேளை, தோல்வியுற்ற ஆட்சியாளர்கள் எப்போதும், இராணுவத்தின் துணையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது போல, இங்கு நிகழாது என்று கூறுவதற்கில்லை.
ஏனென்றால், முப்படைகளினதும் முழுமையான கட்டுப்பாடும், ஜனாதிபதியினதும், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினதும் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. இத்தகையதொரு நிலையில், எதிரணியினரின் எத்தகைய நகர்வுகளையும் தடுப்பதற்கு, அவர்கள் படைபலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முனைவது ஆச்சரியமானதாக இருக்காது.
தனது பதவிக்காலம் முடிவடைய முன்னரே தேர்தல் நடத்தப்படுவதால், தோல்வியுற்றாலும் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிக்கலாம் என்ற விவாதம் ஒன்று பலமாக நடந்து கொண்டிருக்கின்ற பின்னணியில் இத்தகைய வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது.
ஆனால், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மறுகணமே, அவர் தான் நாட்டின் ஜனாதிபதி என்று அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச போன்றவர்கள் வாதிடுகின் றனர்.
வெற்றிபெற்ற 14 நாட்களுக்குள், புதிய ஜனாதிபதி பதவியேற்க வேண்டும் என்றும் அரசியலமைப்பின் 31வது பிரிவில் கூறப்பட்டுள்ளதாக சரத் என் சில்வா கூறியிருக்கிறார்.
எனவே பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ஒருவர் தோல்வியுற்றாலும் கூட, எஞ்சிய பதவிக்காலம் வரை தானே பதவியில் இருப்பேன் என்று அடம்பிடிக்க முடியாது.
ஆனால், இக்கட்டான சூழல் வரும் போது எல்லோரும் சட்டத்தை மதித்து நடந்து கொள்வார்கள் என்று உறுதியாக கூறமுடியாது.
என்ன நடக்கும் என்பதை, வரும் ஜனவரி 9ம் திகதி தான் உறுதியாக கூற முடியும்.
அதேவேளை, இந்த தேர்தலில் ஏற்படும் தோல்வியானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், மைத்திரிபால சிறிசேன தான் வெற்றி பெற்றால், மஹிந்த ராஜபக்சவையோ அவரது குடும்பத்தினரையோ, போரில் ஈடுபட்ட படையினரையோ சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல விடமாட்டேன் என்று ஆரம்பத்திலேயே உறுதியளித்திருக்கிறார்.
அதைவிட, இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றும், உள்நாட்டு பொறிமுறைகளின் மூலமே தீர்வு காணப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
எனவே, அவர் வெற்றி பெற்றால் கூட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இழுத்துச் செல்ல ஒரு போதும் இடமளிக்கமாட்டார்.
மேலும், எதிரணியில் உள்ள ஜாதிக ஹெல உறுமய அத்தகையதொரு முடிவுக்கு அனுமதிக்கவும் மாட்டாது.
ஜாதிக ஹெல உறுமயவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டில் இதுபற்றிய ஒரு அம்சமும் உள்ளது.
எனவே, சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கொண்டு செல்லப்படுவதற்கு, உள்நாட்டில் சூழல்கள் ஏதும் உருவாக வாய்ப்பில்லை.
அதுபோலவே, அயல் நாடான இந்தியாவும் கூட அத்தகைய முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்குத் தயங்காது.
சர்வதேச விசாரணை என்ற பேரில் இலங்கையில் இருந்து எவரையேனும், சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்தியா அனுமதிக்காது என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதான குற்றச்சாட்டை இந்தியா எதிர்கொள்கிறது.
எனவே, இலங்கையில் இருந்து எவரேனும் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு, செல்லப்படுவதை இந்தியா ஆதரிக்காது, அனுமதிக்காது.
ஜனாதிபதித் தேர்தலின் முடிவு, சர்வதேச நீதிமன்றத்துக்கு ஆட்சியாளர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ இழுத்துச் செல்வதற்கான வாசல்களை உடனடியாகத் திறக்கும் என்று எவரும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
சர்வதேச நீதிமன்றத்துக்கு எவரையேனும் கொண்டு செல்வதென்பது ஒரு நீண்டகால செயல்முறையாக இருக்குமே தவிர, ஒரு தேர்தலின் முடிவு போன்ற குறுகிய கால நிகழ்வுகள் அதனைத் தீர்மானித்து விடாது.
தமக்கே வெற்றி என்று பிரசாரம் செய்யாமல், தோல்வியுற்றால் என்ன நிகழும் என்று எதிர்மறையாக பிரசாரம் செய்து அனுதாபம் தேடும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தோன்றியுள்ளது.
அதனால் தான், தோல்வியின் பிந்திய நிலை குறித்து அரசியல் அரங்கிலும் பிரசார அரங்கிலும் அதிகளவு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அரசதரப்பும் கூட இதனைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmszCRVKajp7.html
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் தற்கொலை!
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:39.19 AM GMT ]
குளியலறையில் வைத்து அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குளியலறை கதவினை மூடிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வீட்டு எஜமானர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
2ம் இணைப்பு
சவுதியில் இலங்கை பெண் தற்கொலை
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கை பெண்ணொருவர் அவர் பணியாற்றிய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குளியலறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், வீட்டு எஜமான் கதவை தட்டியுள்ளார். உள்ளே இருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அவர் கதவை உடைத்து திறந்த போது பெண் இறந்து கிடந்துள்ளார்.
இலங்கை பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எந்த காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் சவூதி அரேபிய பொலிஸ் பேச்சாளர் கேர்ணல் சஹிட் அல் ருகாதி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் வடபகுதி நகரான காப்ஜி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajqy.html
முஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 08:52.16 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படாமையால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறித்த தீர்மானத்தை வெளியிடுவதில் தாமதிப்பதாக கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கட்சியின் ஒரு பகுதியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றொரு பகுதியினர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும், கட்சியின் உயர் மட்டக்குழுவினரின் கலந்துரையாடலை மேற்கொள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் தினத்தை அறிவிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் கட்சிக்குள் பாரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajqz.html
Geen opmerkingen:
Een reactie posten