தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 juni 2014

பௌத்த இனவாதக் குழுக்களைத் தடை செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்: கல்முனை மேயர்

குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 50 ஆயிரம் - இதனை மறைக்கவே அரசு இனவாதத்தை தூண்டுகின்றது!- லால்காந்த
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 05:46.03 AM GMT ]
நாட்டில் வாழும் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு 50 ஆயிரம் ரூபாவையும் தாண்டியுள்ளதுடன் அரசாங்கம் இந்த பொருளாதார பிரச்சினையை மூடி மறைப்பதற்காக நாட்டிற்குள் இனவாதத்தை தூண்டி வருகிறது எனவும் ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 50 ஆயிரத்து 260 ரூபா வரை உயரந்துள்ளது.
இவ்வாறான நிலையில், அரசாங்கம் சம்பளத்தை அதிகரித்து நாட்டில் சிறந்த பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு பதிலாக நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி விட்டு பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்கிறது.
2005 ஆம் ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் போது,  நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதாந்த செலவு 25 ஆயிரத்து 344 ரூபாவாக இருந்தது.

தற்போது இந்த செலவு 50 ஆயிரம் ரூபாவையும் தாண்டியுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 5 சதத்தினால் கூட அதிகரிக்கப்படவில்லை எனவும் லால் காந்த கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp0.html
அடிப்படைவாத குழுக்களின் செயல்களை, அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்: விமல் வீரவன்ஸ
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 06:15.56 AM GMT ]
நாட்டின் அமைதிக்கு தடையை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்த அரசாங்கம் உடனடியாக முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ வலியுறுத்தியுள்ளார்.
எந்த புறத்தில் இருந்து எந்த விதத்தில் வந்தாலும் அமைதியான மக்களின் நிலைப்பாடுகளை அழிக்கும் வகையில் செயற்படும் வெளிநாடுகளில் நிதியுதவிகளை பெறும் குழுக்களின் செயற்பாடுகளை, நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களுக்கு மக்கள் மத்தியில் பேதங்களை ஏற்படுத்தும் தேவையுள்ளது.
பேதங்களை ஏற்படுத்துவதன் மூலமே அவர்களின் அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும்.
அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்களை எடுத்து கொண்டால், சிலர் இந்த சம்பவங்களால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நடப்பதை அவர்கள் விரும்புகின்றனர்.
சம்பவங்களை வைத்து அவர்கள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிகவும் மகிழ்ச்சியுடன் எமது நீதியமைச்சரை சந்திக்க வந்திருந்ததை நான் கண்டேன். தூதுவர் சிரித்தவாறு என்ன ஹக்கீம் வேலைகள் நல்லபடியாக நடக்கின்றதா எனக் கேட்கிறார்.
முஸ்லிம் அடையாளங்களை கொண்டுள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் துன்புறுத்தப்படுகின்றனர். ஐரோப்பாவில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
அப்படியான செய்திகளை பீ.பீ.சி, சீ.என்.என், அல் ஜெசீரா போன்ற ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
இலங்கையில் ஏதாவது துரதிஷ்டவசமான சம்பவம் நடந்தவுடன் இலங்கை பிரச்சினைகள் நிறைந்த நாடு என்று நவநீதம்பிள்ளை அறிக்கை வெளியிடுகிறார்.
ஒரு புறம் சேனா என்ற அமைப்பு தீ மூட்டுகிறது. மறுபுறம் அடிப்படைவாத அமைப்புகள் தீ மூட்டுகின்றன.
நடைபெற்ற சம்பவங்களால் ஐக்கிய தேசியக் கட்சி மகிழ்ச்சியடைந்துள்ளது. அசாத் சாலி இன்னுமொரு புறம் இருந்தவாறு தீ மூட்டி வருகிறார். சேனா அமைப்பு மீதமுள்ளவற்றை தீயிட்டு வருகிறது.
அதிகார வேட்கை கொண்டவர்கள் இப்படியான தீயை மூட்டி நாடு சாம்பலாவதை விரும்புகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp1.html

பௌத்த இனவாதக் குழுக்களைத் தடை செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்: கல்முனை மேயர்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 06:39.43 AM GMT ]
கல்முனை மாநகர சபையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன வன்முறைகளைக் கண்டித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று மாலை 4.00 மணியளவில் சபை முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே அளுத்கம, தர்கா நகர், பேருவளை, வெலிபன்ன மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மீது நடத்தத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை தொடர்பாக மேயர் உரையாற்றுகையில்,
அன்று 1983 தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலைபோன்று இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது.
அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் ஏற்படாது. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
நாட்டின் தலைவர் இங்கு இல்லாத வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்தச் செயற்பாடு இடம்பெற்றதை மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்நாட்டிலே பயங்கரவாத தடைச்சட்டத்தினைக் கொண்டு வந்து பல தமிழ் இளைஞர்களை சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், இன்னுமொரு இனத்தை நசிக்கும் நோக்குடன் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பௌத்த சிங்கள இனவாதக்குழுக்களை தடை செய்ய முன் வர வேண்டும் என்றார்.
இரண்டாம் இணைப்பு
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின், அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது செய்ய முடியாது என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கேள்வி எழுப்பியுள்ளார். 
அளுத்கம, தர்கா நகர, பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து நேற்று கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது,
கடந்த 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகர் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை போன்றதொரு கறைபடிந்த கறுப்பு ஜூனாக நோக்க வேண்டியுள்ளது. 
அந்தளவுக்கு தர்கா நகரில் இன வெறியாட்டம் நடந்தேறியுள்ளது.
ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லாத வேளையில் இந்த வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீண்ட கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழ்நிலையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான இனவெறித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் நாட்டை மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
தர்கா நகர் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே அரங்க்கேற்றப் பட்டிருக்கின்றன. முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசம் ஒன்றை ஊடறுத்து பேரணி சென்றது மாத்திரமல்லாமல் பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து பேரணி மீது கல்வீச்சு நடத்தும் அளவுக்கு அவர்களது திட்டமிடல் இருந்துள்ளது. 
பள்ளிவாசல் அருகில் இருந்து பேரணி மீது கல் வீச்சு நடத்தினால் என்ன நடக்கும் என்ற பாரதூரத்தை அங்குள்ள முஸ்லிம்கள் அறியாதவர்களல்ல. ஆகையினால் முஸ்லிம்கள் அந்த வேலையை அங்கிருந்து செய்திருக்க அணுவளவும் வாய்ப்பில்லை என்பது சிறு பிள்ளைக்கு கூட தெரிந்த விடயமாகும். 
ஆனால் கூட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை முஸ்லிம் பிரதேசமொன்றினுள் பேரணி செல்வதற்கும் பயன்படுத்தியது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களை வம்புக்கிழுக்கும் கோஷங்களையும் மேற்கொண்டு பேரணி மீது தாமே கல் வீச்சையும் நடத்தி விட்டு கலவரத்திற்கு தூபமிட்டுள்ளனர்.
இறுதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு முஸ்லிம்களை வீடுகளுக்குள் முடக்கப்பட்ட நிலையிலேயே அவர்களது வர்த்தக நிலையங்களும் வீடுகளும் சொத்துகளும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. 
இதற்கு பொதுபல சேனா மாத்திரமல்ல சிங்கள ராவய போன்ற பௌத்த தீவிரவாத இயக்கங்களும் முன்னிலை வகித்துள்ளன. இவர்களின் இன வெறித் தாக்குதல்கள் அளுத்கம, தர்கா நகர், பேருவளை போன்றவற்றுடன் நின்று விடவில்லை. 
முஸ்லிம்கள் மீதான அத்தாக்குதல்கள் பன்னல, பாணந்துறை என்று நாட்டின் பல பகுதிகளிலும் அங்கும் இங்குமாக தொடர்ந்து கொண்டே செல்கின்றன. பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டு செல்கின்றன. காரணம், இவர்கள் மீது இன்னும் சட்டம் சரியான முறையில் பிரயோகிக்கப்படவில்லை என்பதுதான். 
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியுமாயின், அப்பட்டமாக வன்முறைகளில் ஈடுபடுகின்ற பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிரவாத இயக்கத்தினரை ஏன் அந்த சட்டத்தை பிரயோகித்து கைது சேது சட்டத்தின் முன் நிறுத்த முடியாது என்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. 
இது விடயத்தில் எமது முஸ்லிம் காங்கிரசும் தலைமைத்துவமும் மிகவும் உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொது பல சேனா உள்ளிட்ட தீவிர அமைப்புகள் மீதும் ஞான சார தேரர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை எமது கட்சி மேற்கொண்டுள்ளது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். 
முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீதும் உடைமைகள் மற்றும் உயிர்கள் மீதும் இலக்கு வைத்து மேட்கோள்ளப்பட்டுள்ள கொடூர தாக்குதலை ஜனநாயகத்தின் மீது பற்றிக்கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 
இந்த நாட்டின் பிரஜை என்ற முறையிலும் நாட்டை நேசிக்கின்ற தேசப்பற்றுள்ள பிரஜை என்ற முறையிலும் சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்தவன் என்ற முறையிலும் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் அவர்களை நண்பர்களாக கொண்டு அவர்களின் பாசையில் அங்குள்ள பாடசாலையில் சிங்கள மொழியில் சரளமாக படித்தத்தவன் என்ற முறையிலும் மிகவும் வெட்கமான- கேவலமான பௌத்த மதத்துக்கே அசிங்கமான நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடிய இவ்வாறான சம்பவத்தை இட்டு மிகவும் மன வேதனையடைகின்றேன். 
சட்டத்துக்கும் ஒழுங்குக்கும் பொறுப்பான ஜனாதிபதி அவர்களும் பாதுகாப்பு செயலாளர் அவர்களும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொதுபல சேனா, சிங்கள ராவய என்பன ஒன்றாக சேர்ந்து சட்டத்தை தங்களது கையில் எடுத்து இவ்வாறான கொடூர செயலை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆகையினால் நடந்தேறிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பெடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் இனிமேல் இவ்வாறன சம்பவங்கள் இடம்பெறாதவாறு முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வன்முறைகளை முன்னெடுத்து வருகின்ற அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்றும் ஞான சார தேரர் போன்றோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கல்முனை மாநகர சபை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஏ.அமிர்தலிங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஏ.எம்.பரக்கத்துல்லா, எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் ரியாஸ், ஐ.தே.க.உறுப்பினர் ஏ.எச்.எம்.நபார் ஆகியோரும் இக்கண்டனப் பிரேரணை மீது உரையாற்றினர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRaLbnp3.html

Geen opmerkingen:

Een reactie posten