தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 30 juni 2014

அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்துடன் படகில் சென்று அநாமதேயமாகும் நம்மவர்கள்!

தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கடல் பயணம் பற்றி எல்லோராலும் பேசப்படும் விடயங்களை அழமாக பார்ப்போம். எவ்வளவோ சொன்னாலும் எம்மவர்கள் கடல் பயணத்தை விடுவதாகவே இல்லை. இறைவனால் நல்ல மனிதனாக படைக்கப்பட்டு நல்ல அறிவைக் கொடுத்தும் அநாதரவாகும் தமிழர்கள் ஏராளம்.
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக 153 ஈழத்தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு எண்ணெய்க் கசிவு காரணமாக கிறிஸ்மஸ் தீவிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கியுள்ளதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு படகில் 32 பெண்கள், 37 சிறுவர்கள் உட்பட 153 பேர் கடந்த 13 ஆம் திகதி புறப்பட்டுள்ளனர். 
இந்த சம்பவம் தொடர்பில் ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு படகில் பயணித்த டியூக் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தப் படகில் தற்போது சிக்கியுள்ளவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்களாவர். இந்தியாவில் வாழ முடியாததால் புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு இந்தப் படகில் புறப்பட்டோம். ஆனால் தற்போது எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு படகு கோளாறாகியுள்ளதால் நடுக்கடலில் சிக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
கடலில் பலத்தகாற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. பெரும் அலைகள் படகைத் தாக்குகின்றன. இங்கு சில மீன்பிடிப் படகுகள் இருப்பது போன்ற விளக்கு ஒளிகள் எங்களுக்குத் தெரிகின்றன. ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களைக் காப்பாற்ற யாரேனும் உதவ வேண்டும் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இந்த அகதிகள் படகு கிறிஸ்மஸ் தீவிலிருந்து 250 கிலோமீற்றர் தொலைவில் தரித்து நிற்பதாகவும் படகிலிருக்கும் இரண்டு தமிழ் அகதிகள் தம்முடன் செய்மதி தொலைபேசி உதவியுடன் பேசியதாகவும் அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டவாளர் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு தமது கடல் எல்லைக்குள் வரவில்லை என்று அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரியன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் அகதிகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முதல் வந்த அகதிகளுக்கு இதுவரைக்கும் எந்தவிதமான வழக்குகளோ விசாரணைகளோ இடம்பெற வில்லை. 75 வீதமானவர்களின் வீசாக்கள் முடிவடைந்தும் இதுவரைக்கும் புதிப்பிக்கப்படவில்லை. அப்படியான நிலைமையில் இங்கு இருக்கின்றவர்களும் வாழ்வாதா, சாவதா என்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.
தற்போது இலங்கை அகதிகள் தொடர்பில் அமைச்சர் எவ்வளவுக்கு உண்மையை மறைக்க முடியுமோ அவ்வளவுக்கு உண்மைகளை மறைக்கின்றார்.
அகதிகள் படகு மூலம் அவுஸ்ரேலியா வந்தாலும் இனிமேல் ஒருகாலமும் அவுஸ்ரேலியாவில் தங்கவைக்கப்படமாட்டர்கள் என்பதே உண்மையானதாகும்.
கடந்த சில வருடங்களாகவே அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் படகுகள் மூலம் பெருமளவானோர் அகதிகளாக சென்றுள்ளனர்.
உயிரைப் பணயம் வைத்து இவர்கள் படகுகளில் ஏறி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு பயணித்தவர்களில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுமுள்ளனர்.
இவ்வாறான நிலையில் படகுகள் மூலம் வரும் அகதிகளை தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா இலங்கையுடன் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.
படகுகள் மூலம் வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இலங்கை கடற்படைக்கு கண்காணிப்பு
படகுகளையும் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. படகுகள் மூலம் செல்லும் அகதிகளை வேறு இடங்களில் தங்க வைத்து மிகவும் மோசமான நிலைக்கு அவர்களை படாதபாடு படுத்தி வருகின்றது.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மேலும் மேலும் அகதிகள் தமது உயிர்களை பணயம் வைத்து படகு மூலம் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் அகதிகள் படகு எதுவும் அவுஸ்திரேலியாவை சென்றடையவில்லை. 6 மாதங்களுக்கு மேலாக அகதிகளின் வருகையை தடுத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கிறிஸ்மஸ் தீவுக்கு 250 மைல் தொலைவில் அகதிகள் படகுகளில் உள்ளவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கோரியுள்ளமை பெரும் சங்கடநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கமானது படகுகள் மூலம் வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இலங்கையிலும், இந்தியாவிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரங்களும் வானொலிகள், தொலைக்காட்சிகளில் ஒளிவிளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
படகுகள் மூலம் வரும் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படமாட்டாது. இவ்வாறு பெருமளவு பணத்தைச் செலவழித்து பெரும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்து வருகின்றனர்.
.தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம். உண்மையில் அவுஸ்ரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் அண்மையில் தீக்குளித்து மரணித்தும் பெற்ற தாய் தந்தையர் தன்னுடைய மகனுக்கு இறுதி கிரிகை கூட நடத்துவதற்கு அனுமதிக்காத இந்த அர,சு எப்படி இனி வரும் அகதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் அகவே இலங்கை தமிழர்களுக்கு ஒரு காலமும் அவுஸ்ரேலியா அரசாங்கம் உதவமாட்டாது.
இலங்கையில் கடந்த வாரம் கூட கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் கருத்தரங்குகளை நடத்தி படகுகள் மூலம் வரும் அகதிகளுக்குள்ள பாதக நிலைமை குறித்து எடுத்துக் கூறியுமிருந்தனர்.
இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலியா நோக்கி படகில் சென்றுள்ள ஈழத் தமிழர்கள் பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் இலங்கையிலிருந்து அகதிகள் படகு எதுவும் அவுஸ்திரேலியாவிற்கு செல்லவில்லை. ஆனால் இந்தியாவிலிருந்து ஈழத்தமிழர்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
பலவருடங்களாக இவ்வாறு வாழும் இவர்களுக்கும் உரிய வசதிகள் இல்லையென்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. இத்தகைய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே 153 ஈழத்தமிழர்களும் புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி படகு மூலம் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இவ்வாறு தத்தளிக்கும் அகதிகளை மீட்கவேண்டியது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் இவ்வாறான ஒரு படகு தமது கடற்பரப்பிற்குள் இல்லை என்று அவுஸ்திரேலியா கூறியிருக்கின்றது.
எனவே இதன் உண்மைத்தன்மை கண்டறியப்பட்டு தத்தளிக்கும் மக்கள் காப்பாற்றப்படவேண்டும்.
அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் ஆசையில் கடந்த சில வருடங்களில் பலியானவர்களைப்போன்று இந்த 153 ஈழத்தமிழர்களும் கடலில் சங்கமமாவதை அனுமதிக்க முடியாது.
எனவே இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பொறுப்பேயாகும்.
இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழர்கள் மனம் வெறுத்த நிலையிலேயே அவுஸ்திரேலியாவிற்கு தமது உயிர்களை பணயம் வைத்து . படகுகளில் அகதிகளாகச் செல்ல முனைந்து வருகின்றனர்.
தொடர்ந்தும் இந்தியாவில் அகதி வாழ்க்கை வாழ்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. கிறிஸ்மஸ் தீவுக்கு 250 மைல்களுக்கு அப்பால் தத்தளிப்பதாக கூறப்படும் படகில் 37 சிறுவர்கள் உட்பட 153 பேர் தத்தளிக்கும் செய்தியானது கடந்த வியாழக்கிழமையே வெளியாகியுள்ளது.
அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அவுஸ்திரேலிய ஊடகங்களுடன் சிலர் செய்மதி தொலைபேசி ஊடாக உரையாடியதை அடுத்து தற்போது இவ்வாறான சம்பவம் வெளிவந்துள்ளது.
எவ்வறாயினும், இன்று இந்தியா கடலோர பாதுகாப்பு அதிகாரி அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து எந்தவிதமான படகுகளும் புறப்படவில்லை என்று தமிழர்கள் தரகர்களின் பொய்யான வார்த்தைகளை கேட்டு ஏமாற வேண்டாம்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து இந்த ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுள்ளனர்.
இதிலிருந்து இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இன்னமும் அவர்களது விருப்பத்திற்கேற்ப உரிய வசதிகள் செய்யப்படவில்லை என்பது புலனாகின்றது.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைக்கண்டு இந்தியாவில் வாழும் ஈழத்தமிழர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், அங்கிருந்து உயிரைப் பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளை கட்டுப்படுத்த முடியும்.
இலங்கையிலிருந்தும் அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு ஈழத்தமிழர்கள் செல்ல முயல்வதற்கும் நாட்டில் உள்ள அசாதாரண நிலையும் ஒரு காரணமாகவே அமைந்துள்ளது.
எனவே நடுக்கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து தமிழர்கள் செல்லாத வகையில் உரிய நடவடிக்கைகளை இலங்கை, இந்திய அரசாங்கங்கள் எடுக்கவேண்டும்.
தமிழர்களின் பிரச்சினைக்கு இலங்கையில் உரிய தீர்வு காணப்படுமானால், இத்தகைய பயணங்களையும் தடுக்கும் சூழல் உருவாகும். இந்த நிலைமை விரைவில் சாத்தியப்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவற்றுக்கு அப்பாலும் தமிழர்கள் கடல் பயணம் செய்வார்களானால் இதுவே அவர்களின் இறுதிப் பயணமாக அமையும்.
http://www.tamilwin.com/show-RUmsyGQULblry.html

Geen opmerkingen:

Een reactie posten