இலங்கையில் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வில்லியம் கோரிக்கை
இந்த தீர்மானத்திற்கு அமைய இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமித்துள்ளார். இந்த விசாரணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று நிபுணத்துவ ஆலோசகர்களை நவனீதம்பிள்ளை நியமித்துள்ளார்.
நிபுணத்துவ ஆலோசகர்களை நியமித்தமை வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளி;க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாக இந்த விசாரணைகளை நோக்குவதாகத் தெரிவித்துள்ளார். எந்தவிதமான தலையீடுகளும் இன்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு பிரித்தானியா பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74701.html
யாழ். நீதிமன்றத்தில் மரணதண்டனை தீர்ப்பு..
மரணம் விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவருக்கு 5 வருட சிறைத் தண்டளையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 14 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் இரு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக தலையில் பொல்லால் தாக்கப்பட்டு பொன்னர் கதிரவேலு என்பவர் உயிரிழந்தார்.
அத்துடன் கதிரவேலு குகனந்தினி, கிட்டினன் ஜெயராசா ஆகியோருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை நவரத்தினம், நவரத்தினம் பிரதீஸ்கரன், நவரத்தினம் சதீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தீர்ப்பிற்காக மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த யாழ். மாவட்ட நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், குற்றஞ்சாட்டப்பட்ட சின்னத்துரை நவரத்தினம் நிரபராதி எனக் கண்டு விடுதலை செய்தார். சதீஸ்வரனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும், பிரதீஸ்கரனுக்கு மரண தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/74714.html
புலிகளின் முக்கியஸ்தர்கள் சரணடைதலின் பின்னனியில் ஜெகத்கஸ்பாரின் மறு முகம்
“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.
மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.
கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?
கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.
கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை?
கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்லை.
கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?
கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.’
போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.
இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.
“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.
இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.
உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.
பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.
அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?
அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.
மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”
புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.
அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6350563.ece
புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.
சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.
இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:
சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?
கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.
சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?
கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.
சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?
கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.
சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?
கே.பி.: ஆம்.
சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?
கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.
சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?
கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?
சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?
கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.
கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.
ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.
அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.
இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.
இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.
களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.
தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.
கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…
ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.
மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.
“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.
இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள். காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.
மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.
ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.
நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.
எமதருமை புலத்து மக்களே,
இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!
http://www.jvpnews.com/srilanka/74717.html
Geen opmerkingen:
Een reactie posten